பிப்ரவரி கடைசி வாரம் வந்த படம் எமன். தெளிவான திரைக்கதை, அதற்கேற்ற டீட்டெய்லிங், அட்டகாசமான காஸ்டிங் என்று இயக்குநர் ஜீவா சங்கரின் மெனக்கெடல் படம் முழுவதும் தெரிகிறது.
ஒரு அரசியல்வாதியின் 360 டிகிரி கோணமாய் படம் அமைந்திருக்கிறது. ஹீரோயிஸம் காட்டும் படங்களுக்கு நடுவே இது வில்லனிசப் படம். இயக்குநர் தியாகராஜன் சில காலங்களுக்குப் பிறகு திரையில். விஜய் ஆண்டனியும் தன், வழக்கமான ஆன நடிப்பில். எல்லாரையும்விட திரையில் கவர்பவர் ‘தங்கபாண்டியன்’ அருள்ஜோதி. ஃப்ளாஷ்பேக்கிலிருந்து ஆரம்பித்து இறுதிவரை பயணிக்கும் அவர் கதாபாத்திரப்படைப்பும், அதற்கு நியாயம் சேர்த்திருக்கும் நடிப்பும் படத்தை ஒரு படி உயர்த்திப் பிடிக்கிறது.
அடுத்து குற்றம் 23. அருண்விஜய் மிகவும் நம்பியிருந்த படம். அவரைக் கைவிடவில்லை. கதை எழுதும் வேலையை எழுத்தாளர்களிடம் கொடுத்துவிட்டு, இயக்குநர்கள் திரைக்கதை, இயக்கத்தில் கவனம் செலுத்தினால் ஒருபடம் பேசப்படும் என்பதற்கு இன்னுமொரு உதாரணம். ராஜேஷ்குமாரின் நாவலுக்கு, அறிவழகன் திரைவடிவம் கொடுத்திருக்கும் இந்தப் படம் விறுவிறு த்ரில்லராகப் போகிறது. செண்டிமெண்ட், பாடல்கள் என்ற தமிழ் சினிமா காம்ப்ரமைஸ்களைத் துணிந்து தவிர்த்து, கொஞ்சம் கத்திரி போடப்பட்டிருக்க வேண்டிய படம் என்ற குறை மட்டும் இருக்கிறது.
அருண்விஜய் நன்றாக நடித்திருக்கிறார் என்று சொல்ல வேண்டியதில்லை. ஆனால் ‘நானொரு ஹீரோ’ என்பதைக் காட்ட அத்தனை கண்ணாடி கழற்றல்கள் தேவையில்லை. அத்தனை முறை கண்ணாடியைக் கழற்றி கழற்றி மாட்டிக்கொண்டிருக்கிறார். ஆனால் அவற்றை மீறி, மஹிமாவின் அப்பாவிடம் பேசும் காட்சி, அண்ணியிடம் பேசும் காட்சி, அண்ணி இறந்ததும் உணர்ச்சிகளை அடக்கிக்கொள்வது என்று கம்ப்ளீட்டாக நடித்திருக்கிறார்.
அதே நாளில் வெளியான படம் யாக்கை. பலவித சோதனைகளுக்குப்பிறகு வெளியான படம். சோதனைகள் இயக்குநருக்கு. பேட்டிகளில் இயக்குநர் குழந்தை வேலப்பன் பொருமியதைப் படிக்க நேர்ந்தது.
படம் மோசமில்லை ரகம். குற்றம் 23 போலவே மருத்துவ உலகின் கறுப்புப் பக்கத்தைப் பேசுகிறது. கிருஷ்ணா, சுவாதி, ராதாரவி, பிரகாஷ்ராஜ், குரு சோமசுந்தரம் என்று குறிப்பிடத்தகுந்த நடிகர்கள், நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்கள். ஆனால் இவற்றையெல்லாம் மீறி இன்னும் கொஞ்சம் செதுக்கியிருக்க வேண்டிய படம், எங்கே சறுக்கியது என்று யோசித்தால், இயக்குநரின் பேட்டிகளில் விடை கிடைத்தது. அவரின் மன உளைச்சலே படப்பிடிப்பின்போது வெளிப்பட்டு படத்தைப் பாதித்திருக்கிறது என்று தெரிகிறது. ‘உன்னை எவன்டி கேட்டான்?’ என்று திட்டமாட்டீர்கள் என்றால் ஒன்று சொல்கிறேன். இவற்றையெல்லாம் மீறித்தான் ஒரு வெற்றிப்படைப்பைக் கொடுக்கணும் டைரக்டரே.. இது ரேஸ் உலகம். தடைபல கடந்து வாருங்கள்!
அடுத்தவாரம் வெளியானது ‘மொட்டசிவா கெட்டசிவா’.
“தலைப்பிலேயே ‘கெட்ட சிவா’ என்று
சொல்லியாகிவிட்டது. டிரெய்லர்களிலும், ப்ரமோக்களிலும் அதை ஹை டெசிபலில் கத்திக் கத்தி எச்சரித்தாகிவிட்டது. அதற்கு மேல் தியேட்டருக்கு வந்து படம் சரியில்லை என்று எப்படிச் சொல்லலாம்? அதைச் சொல்ல உனக்கு யார் லைசென்ஸ் கொடுத்திருக்காங்க? நீ யார் என்படம் நல்லா இல்லைனு சொல்றதுக்கு? ‘ஓவராக் கத்தறாரு, பஞ்ச் டயலாக்ஸ் நல்லா இல்லை. காட்சிக்குக் காட்சி வன்முறையா இருக்கு. கொஞ்சம் கூட தமிழ் ஆடியன்ஸுக்கான படமா இல்லை.
வசனம்கற பேர்ல “ரேப் பண்ணிக் கொன்னுடுங்க”ன்னு எழுதலாமா?’ இப்படின்னெல்லாம் சொல்றதுக்கு நீ யாரு? காதம்பரினு பேர் வெச்சுகிட்டா என்ன வேணா எழுதுவியா? இந்தப் படத்தை ஏன் ரீமேக் பண்ணணும்-னு எப்படிக் கேட்கலாம்?” -இப்படியெல்லாம் படக்குழுவின் தரப்பிலிருந்து யாராவது கேள்வி கேட்பார்களோ என்று பயமாக இருப்பதால், அந்தப் படத்தை விட்டுவிடலாம்.
அதே நாளில் வெளிவந்தது ‘நிசப்தம்’. ரைட்ஸ் வாங்கிக்கொண்டு தெலுங்கு ‘பட்டாஸ்’ படத்தை ரீமேக் செய்வதற்கு ரைட்ஸ் எதுவும் வாங்காமல் கொரியன் ‘ஹோப்’ படத்தை ரீமேக்கலாம் என்று சொல்லியிருக்கிறார் இயக்குநர் மைக்கேல் அருண். ஓகேதான். ஆனால் அதை இன்னும் அழுத்தமாகக் கொடுத்திருக்கலாம். பல காட்சிகள் நாடகத்தனமாக இருந்தது. ஆனாலும் படம் சரியான கருத்தைக் கொண்டிருப்பதால்... மன்னிக்கலாம். அஜய் நடிப்பில் இன்னும் முன்னேற்றம் தேவை. அபிநயா தெளிவான, அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ‘பூமி’யாக நடித்த குழந்தை சாதன்யா-வுக்கும், அவரை இந்தக் கதாபாத்திரத்தை நடிக்க வைத்த பெற்றோருக்கும் ஒரு டன் பூங்கொத்துகள்.
மாநகரம். சில சம்பவங்கள். நிறைய கதாபாத்திரங்கள்.தெளிவான திரைக்கதை. மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் தமிழ்த்திரையுலகில் ‘ஹீரோயிசம், பாட்டு, ஃபைட் பஞ்சாயத்துக்கெல்லாம் போகாதீங்க. நல்ல கதையைத் தெளிவாகப் படமாக்கிக் குடுங்க. மக்கள் கொண்டாடுவாங்க’ என்று யாராவது சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள். கேட்டால்தானே? இந்த மாதம் அப்படிச் சொல்லியிருக்கும் படம் ‘மாநகரம்’.
லோகேஷ் கனகராஜின் முதல் படைப்பான ‘மாநகர’த்திற்குப் பின் அவர் உழைத்த உழைப்பு படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமிலும் தெரிகிறது. பாத்திரப்படைப்புகள், அவற்றின் நியாய அநியாயங்கள், அவர்கள் பேசும் வசனங்கள், ஆர்ட் டைரக்ஷன், கேமரா, இசை என்று குறைகளற்ற ஒரு படம். இன்னும் பேசப்பட்டிருக்க வேண்டிய படம், திரையுலகின் எழுதப்படாத, தவிர்க்க முடியாத சில விதிகளால் கொஞ்சம் கொஞ்சமாக பிக் அப் ஆகி, பேசப்பட்டிருக்கிறது.
அடுத்த வாரம் வெளியானது புரூஸ்லீ. மொட்ட சிவா அடித்து, மாநகரம் தெளிய வைக்க, புரூஸ்லீ அடுத்த வாரம் திரும்ப அடித்தார். புரூஸ்லீ பற்றி எழுதும் அளவுக்கு திரை அறிவு எனக்கு கம்மிதான். கட்டப்பாவைக் காணோம் பற்றி எழுதலாம் என்றால், படத்தில் வந்த இரட்டை அர்த்த வசனங்கள்தான் ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு பொண்ணு அதை எப்படி எழுத என்றெல்லாம் இல்லை. இலை மறை காயாக இருந்தால், ரசிக்கலாம்தான்.. ஆனால் இப்படி பட்டவர்த்தனமாக, பச்சை பச்சையாகப் பேசினால் வெறுப்புதான் வருகிறது சார்.
கடைசி வாரத்தில் வந்த படங்களில் ஒன்று ‘என்கிட்ட மோதாதே’. 80களில் நான் போன ஜென்மத்தில் இருந்ததால், அந்தக் கதைகளை என் அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவர் ஒரு அக்மார்க் ரஜினி ரசிகர். அப்போதைய ரசிகச் சண்டைகள் குறித்து அவர் சொன்னது ஞாபகம் வரவே, படத்தை ரொம்பவும் எதிர்பார்த்திருந்தேன். நல்ல கதைக்களம். ஆனால் இன்னும் புகுந்து விளையாடியிருக்க வேண்டும்.இன்னொரு படம் கடுகு. விஜய் மில்டன், இந்த அதிரடி அதிரி புதிரியெல்லாம் வேண்டாம்பா என்று அவர் பாணியில் எடுத்திருக்கும் படம். ராஜகுமாரனுக்கு ஸ்பெஷல் ரெட்கார்ப்பெட் வரவேற்பு. கச்சிதமான நடிப்பு. அருகி வரும் உயிரினமான, ‘நல்லவனாகவே இருப்பவர்’ கதாபாத்திரத்திற்கு நச்சென்று பொருந்தியிருக்கிறார். பரத் கேரக்டரும், அதன் நியாயங்களும்.. வாவ்..! சபாஷ், டைரக்டருக்கும் அதை ஏற்று நடித்த பரத்துக்கும்! அந்த, பாதிக்கப்பட்ட பெண் கேரக்டரில் நடித்த குட்டிப்பொண்ணு யாருப்பா? சுத்திப்போடவும்!
ஏப்ரல், 2017.