திரைவலம்

மீண்டும் ஆரம்பிப்பது சரியில்லை!

காதம்பரி

எளிய குடும்பப் பின்னணி கொண்ட இரு சகோதரர்கள். இருவரும் பேசிக்கொள்வதில்லை. தங்கள் அன்னையை, ஜே.பேபியைத் தேடி கொல்கத்தா செல்கிறார்கள். அந்தப் பயணமும் அந்தப் பயணத்தில் விரியும் இவர்களின் வாழ்க்கையுமே படம்.

மிக அழகான ஒரு ஒன்லைன். அதற்குப் பொருத்தமான சரியான நடிகர்கள் தேர்வு. கச்சிதமான படமாக்கல் என்று அனைத்தையும் சாத்தியப்படுத்திய இயக்குநர் சுரேஷ் மாரிக்கு முதலில் பாராட்டுகள். இரண்டு சகோதரர்களாக நடித்திருக்கும் மாறனும் தினேஷும் தங்களின் நடிப்புத் திறனால் நம்மைக் கவர்ந்திருக்கிறார்கள். அதே சமயம் ஜே.பேபியாகவே வாழ்ந்திருக்கும் ஊர்வசி தன் நடிப்பனுபவத்தைக் கொட்டி இவர்களை முந்துகிறார்.

உண்மையாக நடந்த கதைக்கு திரைக்கதை எழுதி படமாக்கியிருக்கிறார் சுரேஷ் மாரி. உண்மையில் அந்த சகோதரர்களுக்கு உதவியவரையும் இந்தப் படத்தில் அதே பெயரில் நடிக்கவும் வைத்திருக்கிறார். மொத்தத்தில் ஒரு மிக நல்ல அனுபவத்தைக் கொடுத்த படம் இது.

அதே இரண்டாவது வாரம் வெளியானது 'நல்லபேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே, '. பாடகர் பிரதீப்குமாரின் தயாரிப்பு என்பதே கவர்ந்தது. தயாரிப்போடு, பாடல்கள் எழுதி இசையமைத்து என்று பங்காற்றியியுமிருக்கிறார். எனக்குள் ஒருவன் இயக்கிய பி்ரசாத் ராமரின் இயக்கத்தில் புதுமுக நடிகர்கள் நடிக்க, எந்த எதிர்பார்ப்பும் இில்லாமல்தான் படத்துக்குச் சென்றேன்.

யூட்யூப் ஷார்ட் பிலிமை பெரிய திரையில் பார்ப்பது போலத்தான் ஆரம்பித்தது. ஆனால் போகப்போக படத்துக்குள் நம்மை ஒன்ற வைத்துவிடுகிறது அந்தப் படமாக்கலின் எளிமை.

கதை? சமூக ஊடகங்களில் பெண் ஐடிக்களிடம் வழிந்து அவர்களுடன் உல்லாசமாக இருப்பதை பொழுதுபோக்காகச் செய்யும் நாயகன் செந்தூர் பாண்டியன். அதேபோலவே மெசேஜ் அனுப்பி ப்ரீத்தி கிரணை சந்திக்க மதுரை டூ மயிலாடுதுறை பயணிக்கிறார். அங்கிருந்து பூம்புகார் செல்லும் கதை அந்தப் பயணத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை விவரித்து மெசேஜ் சொல்கிறது படம்.

நடிகர்கள் தேர்வு, ஒளிப்பதிவு, பாடல்கள் என்று எல்லாமே சபாஷ் ரகம். கொஞ்சம் க்ளிக் ஆகியிருந்தால் துள்ளுவதோ இளமை ரேஞ்சுக்கு ஹிட்டடித்திருக்க வேண்டிய படம்தான். நல்ல விமர்சனங்கள் வந்த போதும் மஞ்ஞுமல் ஃபீவரால் பெரிதாகப் பேசப்படவில்லை.

இந்த மாதம் வெளியான மிகச் சொற்ப படங்களில் ஜி.வி.பிரகாஷ் குமார், மம்தா பைஜூ நடித்த ரெபெல் படமும் ஒன்று.

மூணாறில் இருந்து பாலக்காடு சென்று படிக்கும் தமிழர்கள். அங்கே கல்லூரி மாணவர் தலைவன் தமிழ் மாணவர்களை நடத்தும் விதமும் அதை எதிர்க்கும் ஹீரோவும் என்று பயணிக்கிற கதை.

எண்பதுகளில் நடந்த சம்பவம் ப்ளஸ் கற்பனை என்கிறார் இயக்குநர். ஆனால் ஏற்கெனவே வடக்கிலிருந்து பணிக்கு வரும் இளைஞர்களை வேறு விதமாகச் சித்தரித்த அலை ஓய்ந்த நிலையில், கேரளா vs தமிழ்நாடு என்ற ஒன்றை ஆரம்பிப்பது சரியில்லை என்றே தோன்றுகிறது. மற்றபடி கொஞ்சம் கவனமாக, அரசியல் புரிதலுடன் வந்திருந்தால் பேசப்பட்டிருக்ககூடிய படம்.

ஆடு ஜீவிதம். மலையாளம். கடைசி வாரம் வெளியானது. பென்யாமினின் புகழ்பெற்ற நாவல். பிரிதிவிராஜ் நடிப்பில் பிளஸி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வெளிவநது உலகமெங்கும் எதிர்பார்க்கப்பட்ட படம்.

வளைகுடா நாட்டிற்கு பிழைக்கச் செல்லும் நாயகன். அடிமையாக மாட்டிக்கொள்கிறான். என்ன செய்தான், ஊர் திரும்பினானா என்பதே கதை. பிரித்விராஜ் நடிப்பு, கே.எஸ். சுனிலின் ஒளிப்பதிவு, ஏ.ஆர்,ரஹ்மான் இசை என்று மூன்றுமே சிறப்பு. ஆனாலும் படம் நாவல் கொடுத்த மனவுணர்வை முழுமையாகக் கடத்தவில்லை. காரணம் கால வேறுபாடா என்று தெரியவில்லை. நாவல் வந்த காலத்தில் இருந்ததை விட வெளிநாடு வேலைகள் குறித்த விழிப்புணர்வும் புரிதலும் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேறி இருக்கிறது.

ஆனாலும் 'இதை ஏன் விட்டு வைப்பானேன்' வகையில் அந்தப் புகழ்பெற்ற நாவலையும் படமாக்கியாச்சு. சரி அடுத்தது என்ன என்று பார்ப்போம்!