ரெட்ரோ 
திரைவலம்

வேற வழி இல்ல!

காதம்பரி

மே மாதத்தை ரெட்ரோவும் டூரிஸ்ட் ஃபேமிலியும் தொடங்கி வைத்தன. 

கார்த்திக் சுப்பராஜ் இயக்கம். சந்தோஷ் நாராயணன் இசை. சூர்யா, ஜோஜூ ஜார்ஜ், பூஜா ஹெக்டே, ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ் என்று நட்சத்திரப் பட்டாளம் என வெளியானது ரெட்ரோ.

ஸ்வாசிகா -  ஜோஜு ஜார்ஜ் வளர்த்த மகன் சூர்யா. சூர்யாவைத் தன் மகனென்றே சொல்லிக்கொள்ளாத கேங்க்ஸ்டர் அப்பா ஜோஜு. ஒரு இக்கட்டான சமயத்தில் ஜோஜூவின் உயிரை சண்டையிட்டுக் காப்பாற்றுகிறார் சூர்யா. மகனின் தீரம் கண்டு  'வாடா மகனே' என்று தன் தொழிலுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார் ஜோஜூ.

'இதெல்லாம் வேண்டாமே' என்று சொன்ன காதலி பூஜாவுக்காக கேங்க்ஸ்டர் தொழிலை விட நினைக்கிறார் சூர்யா.

முதல் பாதி விறுவிறுவென நகர்கிறது. சந்தோஷ் நாராயணின் பின்னணி இசையும், சண்டை இயக்குநர் கிச்சா கெம்பாடீயின் ஆக்‌ஷன் காட்சிகளும் ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா கோணங்களும் படத்தை அவ்வளவு ஒன்றிப் பார்க்க வைக்கிறது. இடைவேளைக்குப் பின்னான காட்சிகளில் நிறைய சொல்ல வேண்டிய விஷயங்களை சீக்கிரம் முடிக்கவேண்டிய அவசரம் தெரிகிறது.  அதனால் எதிலும் முழுமை இல்லாத ஒரு உணர்வு. கதாபாத்திரத் தேர்வும் அவர்களின் நடிப்பும் ஆசுவாசம் தருகின்றது.

டூரிஸ்ட் பேமிலி

அதே நாளில் வெளியானது டூரிஸ்ட் ஃபேமிலி.

இலங்கையிலிருந்து கள்ளத்தோணியில் தப்பி ராமேஸ்வரம் வருகிறது சசிகுமார் குடும்பம். மனைவி சிம்ரன், மகன்கள் மிதுன் ஜெய், கமலேஷுடன் வரும் சசிகுமாரை  போலீஸ் ஹெட் கான்ஸ்டபிள் ரமேஷ் திலக் மடக்குகிறார். போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிச்செல்லும் வழியில், வேனில் நடக்கும் உரையாடலில் நெகிழ்ந்து, 'இந்தக் குடும்பம் நல்ல குடும்பம்' என்று இறக்கிவிட்டுவிடுகிறார். சிம்ரனின் தம்பி யோகிபாபு உதவியுடன் சென்னைக்கு வந்து இன்ஸ்பெக்டர் பக்ஸ் வீட்டில் வாடகைக்குக் குடியேறுகிறார் சசிகுமார்.

ராமேஸ்வரத்தில் இவர்கள் கிளம்பிய அன்று ஒரு குப்பைத் தொட்டியில் வெடித்த குண்டு, இவர்களை விடாமல் துரத்துகிறது. அவ்வழக்கு என்ன ஆகிறது சசிகுமாரின் குடும்பம் அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பது க்ளைமேக்ஸ்.

ஒரு வகையில் இது ஃபேண்டஸி படமாகவே எனக்குப் பட்டது. சசிகுமார் வருவதற்கு முன்பு வரை யாரும் யாரோடும் பேசிக்கொள்ளாமல் இருந்த குடியிருப்பு வாசிகள், அவர் வந்தபிறகு ஒற்றுமையாக 'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' பாடுகிறார்கள். எவன் எக்கேடு கெட்டா எனக்கென்ன என்று அண்டை வீட்டினரை டீல் செய்யும் அனைவரும் தேவன் வருகைக்கு ஸாரி.. சசிகுமார் வருகைக்குப் பிறகு வள்ளலார் மனம் கொள்கிறார்கள். அப்படி இருக்கிறார்கள்தானே என்றால் எல்லாரையுமே அப்படிக் காட்டியிருக்கத் தேவையில்லை என்பதே என் கருத்து. யாருக்கும் பேப்பர் கப்பில் டீ காபி குடுக்காத எம். எஸ்.பாஸ்கர்  வீட்டில், அவரது பணியாள் சசிகுமார் யோகிபாபுவுக்கு பேப்பர் கப்பில் வைத்துக்கொண்டு குடுக்கும்போதே  ‘இதுக்கொரு டயலாக் பின்னாடி வருதுடா' என்று மனம் சொல்கிறது. தேடி வரும் இன்ஸ்பெக்டர் அந்தக் குடும்பத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்றுகூடவா தெரியாமல் வருகிறார் என்று கேள்வி எழுகிறது.

இயக்குநர் அபிஷன் ஜீவிந்திடம் சரக்கு நன்றாகவே இருக்கிறது. புலம்பெயர் மக்களை நம்மவர்களாக எண்ணிப்பழக வேண்டும் என்ற சிந்தனைக்கும் சபாஷ்.

டிடி நெக்ஸ்ட் லெவெல்

இரண்டு வாரங்கள் கழித்து காமெடியில் ஆரம்பித்து ஹீரோவாக உயர்ந்த மூவரின் படங்களும் போட்டி போட்டுக்கொண்டன. யோகிபாபு நடித்த ஜோரா கையத்தட்டுங்க, சந்தானத்தின்   டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன் - மூன்று படங்களும் போட்டி போட்டுக்கொண்டன.

ஜோராகக் கைதட்ட முடியாததால் மற்ற இரண்டு படங்களும் கொஞ்சம் கவனம் பெற்றன.

டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல், அதாவது DD Next Level. யூட்யூபில் சினிமா விமர்சனம் செய்யும் கிருஷ்ணாவாக சந்தானம். அவரை ஒருநாள் குடும்பத்தோடு ஸ்பெஷல் ஷோ பார்க்க அழைக்கிறார் இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்.) பிறகுதான் திரைப்பட விமர்சகர்களை தேடிக்கொல்லும் பேய் அவருக்குள் இருப்பது தெரியவருகிறது. அவரது சதியில் அரங்கில் ஓடும் படத்தில் ஒருவராக சந்தானம் மாட்டிக்கொள்ள அவர் குடும்பமும் அங்கேதான் மாட்டிக்கொள்கிறது.

நல்லதொரு ஒன்லைனர் பிடித்திருக்கிறார் இயக்குநர் ப்ரேம் ஆனந்த். ஆரம்ப காட்சிகளும், சந்தானம் திரைக்குள் மாட்டிக்கொண்ட பின் வரும் ஒரு சில காட்சிகளும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் அதற்குப் பின் இதுதான் நடக்கும் என்று தேமேவென்று பார்க்க நேர்கிறது. ஸ்பூஃப் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் சிரிப்பு வருகிறது. இன்னும் அழுத்தமான காட்சிகளை நகைச்சுவைமிளிரக் காட்டியிருந்தால் பேசப்பட்டிருக்கும்.

மாமன்

மாமன். சூரி கதை. பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கம். டைட்டில் சொல்லும் கதைதான். அக்கா ஸ்வாசிகாவின் மகன் மீது அளவு கடந்த பாசம் சூரிக்கு. அவனுக்கும் அப்படியே. ஐஸ்வர்யா லட்சுமியை கரம் பிடிக்கும் சூரிக்கு, மருமகனின் பாசம் சில பிரச்னைகளைத் தருகிறது. குடும்பத்தை விடவும் முடியாமல் மனைவியின் ப்ரியத்துக்கு நேரமொதுக்கவும் முடியாமல் தவிக்கிறார் சூரி. இதனால் நடக்கும் உறவுச்சிக்கல்கள்தான் 'மாமன்.'

படம் சொல்லும் பல விஷயங்கள் இக்காலத்துக்கு புறந்தள்ளவேண்டியதாக இருக்கிறது. குழந்தை இல்லையென்றால் அந்தத் தாய் வாழவே தகுதியற்றவள் என்று அந்தக்காலப் போக்கை (இப்போதும் இருந்தாலும்) ஊக்குவிக்கும் காட்சிகளும் வசனங்களும். அதற்கு எதிர் வசனமாகக்கூட ஏதுமில்லை. அடம் பிடிக்கும் ஆண் குழந்தையை வளர்க்கத் தவறிய தாயாகவே ஸ்வாசிகா கதாபாத்திரம் எண்ணப்படும்.ராஜ்கிரண் - விஜி சந்திரசேகர் காட்சிகள் கொஞ்சம் ஆறுதல்.

ஆனால் அதிலும் இறுதியில் சென்டிமெண்டை பிழிந்து.... ம்ம்ம்ம்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram