2024 முடிந்துவிட்டது. டிசம்பரில் பெரிய கவனமீர்த்த படம் என்றால் விடுதலை 2 தான். அது போக மிஸ்யூ, சூதுகவ்வும் 2 போன்ற படங்களும் பேசப்பட்டன.
மிஸ் யூ. எம்.ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், கருணாகரன், பால சரவணன் ஆகியோர் நடிக்க வெளியானது.
இயக்குநர் ஆகும் முயற்சியில் இருக்கும் சித்தார்த்தை அரசியல்வாதி ஒருவர் தேடிக்கொண்டிருக்கிறார். வெளியூர் செல்லும் வழியில் அறிமுகமாகும் கருணாகரனுடன் பெங்களூர் செல்கிறார் சித்தார்த். அங்கே ஆஷிகாவைக் கண்டதும் காதல். ஆனால் ஆஷிகா திருமணத்துக்கு நோ சொல்ல, வீட்டில் பேசச் சொல்லலாம் என்று தன் வீட்டில் ஆஷிகாவின் புகைப்படத்தைக் காட்டுகிறார். அய்யயோ இந்தப் பொண்ணா என்று அவர்களும் மறுக்கிறார்கள்.
ஏன் அப்படி மறுக்கிறார்கள், அரசியல்வாதியின் ஆட்கள் சித்தார்த்தை தேடக் காரணம் என்ன செல்கிறது கதை.
காதல், நண்பர்கள், இடையிடையே சில திருப்பங்கள் என்று திருப்தியாகவே நகர்கிறது படம். அஷோக்கின் வசனங்களும் ரசிக்க வைக்கின்றன. ஆனாலும் திரைக்குள் இருக்கும் கதாபாத்திரங்களின் எமோஷன் பார்வையாளர்களான நம்மை முழுதாகத் தொற்றிக்கொள்ளவில்லை. என்னமோ மிஸ் ஆகுதே என்றபடியேதான் நகர்கிறது படம். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு சில காட்சிகள் பிடித்திருந்தால் படம் பரவலாகவே பேசப்பட்டிருக்கும்.
சூதுகவ்வும் 2. பதினொரு வருடங்களுக்கு முன் வந்த சூது கவ்வும் படத்தின் தொடர்ச்சியாகவே கதை எழுதப்பட்டிருக்கிறது. கோமாவிலிருந்து மீளும் ஆளுங்கட்சி நிறுவனர் நாட்டின் அரசியல் தப்பானவர்கள் கையில் இருப்பதைக் கண்டு புதிய கட்சி ஆரம்பிக்கிறார். இதற்குள் கருணாகரனைக் கடத்துகிறது சிவா குழு. அதன்பின் ஆகும் களேபரங்களே கதை.
கதையாக ஓகே. நடிப்பில் சிவா.. சரி வேணாம் விட்டுவிடலாம். ஆனால் படத்தின் ப்ரமோஷன்களில் சிவா பேசிய சுவாரஸ்யம்கூட படத்தில் இல்லை என்பதுதான் பெரிய குறை. சம்பந்தமில்லாமல் சில காட்சிகள் வந்து போவதைப் போலவே தேமே என்று பார்க்க வேண்டி இருந்தது.
விடுதலை 2. ஜெயமோகனின் ஒரு சிறு - சிறுகதையில் ஆரம்பித்த பொறி இன்று இரண்டாம் பாகம் வரை வந்திருக்கிறது.
முதல் பாகத்தில் சூரியால் கைது செய்யப்பட்ட விஜய் சேதுபதியை - பெருமாள் வாத்தியார் - போலீஸ் அங்கே இங்கே என அழைத்துச் செல்கிறது. போகும்வழியில் தன் ப்ளாஷ்பேக்கை சொல்கிறார் விஜய் சேதுபதி. தான் ஒரு போராளியாக ஏன் எப்படி மாறினேன் என்பதை விவரிக்கிரார். அவரது பார்வையினூடே அதிகார வர்க்கத்தின் அரசியலை நமக்கும் விவரிக்கிறார் வெற்றிமாறன்.
ஒரு கதையைப் படமாக்கும் Craftல் தான் மாஸ்டர் என்று இதிலும் நிரூபித்திருக்கிறார் வெற்றிமாறன். விஜய் சேதுபதி சில காட்சிகளுக்குப் பிறகு மனதில் மறைந்து, பெருமாள் வாத்தியாராகவே தெரிகிறார், மஞ்சு வாரியார் கதாபாத்திரத்துக்கான அருமையான நடிப்பை வழங்கியிருக்கிறார். எண்பது வயதைக் கடந்த ஒருவர் பின்னணி இசை என்பதற்கான பாடமெடுத்திருக்கிறார். முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரமான சூரிக்கு இதில் குறைவான காட்சிகள் என்பது கொஞ்சம் ஏமாற்றம்.
அரசியல் ரீதியாகவும் படமாக்கலாகவும் இரு வகையான விமர்சனங்கள் இப்படத்திற்கு. ஆனாலும் கதைக்களம், கதாபாத்திரத் தேர்வு, திரைக்கதை என்று தனக்கென ஒரு பாணியைத் தக்க வைத்துக்கொண்டு சினிமா எனும் கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்ப்பதில் வெற்றிமாறன் பாராட்டவைக்கிறார்.
2024ல் தமிழ்நாட்டிலும் பெரிதும் பாராட்டுப்பெற்று தமிழ்ப் படங்களுக்கு இணையான - ஏன் அதைவிடவும் - ரசிக்கப்பட்டன மலையாளப்படங்கள். பிரேமலு, மஞ்ஞும்மல் பாய்ஸ், ஆவேசம், கிஷ்கிந்தா காண்டம், பிரமயுகம், உள்ளொழுக்கு, குமஸ்தன், லெவல் கிராஸ், கோலம், நுணக்குழி, நடந்ந சம்பவம், சூஷ்ம தர்ஷினி போன்று பல மலையாளப்படங்கள் திரையரங்கிலும் ஓடிடியிலும் கொண்டாடப்பட்டன.
மஞ்ஞுமல் பாய்ஸ்சை ஏன் இப்படிக் கொண்டாடுகிறார்கள் என்று மல்லுவுட்டே ஆச்சர்யப்பட்டது.
சாண்டல்வுட்டான கன்னட திரைஉலகம் கேஸ் ஆஃப் கொண்டானா, பஹீரா போன்றவை பேசப்பட்டாலும் கன்னடப் படங்கள் 2024ல் நம் ஊரில் கொஞ்சம் அடக்கியே வாசிக்கப்பட்டன என்று தோன்றுகிறது. இந்தப் பக்கம் டோலிவுட்டில் சரிபோதா சனிவாரம், லக்கி பாஸ்கர் போன்றவை நல்ல கதைக்களத்துடன் இருந்தன. கல்கி 2898 AD, சத்யபாமா என்று கவனமீர்த்த டோலிவுட் புஷ்பா 2 என்ற வெற்று மசாலாவைக் கொடுத்து ஆறே நாளில் ஆயிரம் கோடி என்று மார்தட்டிக் கொண்டது.
ஒட்டுமொத்தமாக கதைக்களத்தில் மல்லுவுட் நிகழ்த்திய பாய்ச்சலையும் தெலுங்கு படவுலகமான டோலிவுட் வசூலில் நிகழ்த்திக்கொண்டிருக்கும் பாய்ச்சலையும் கலந்து கொடுக்கவேண்டும் என்று தமிழ்த் திரையுலகம் தனது 2025ன் ரெசல்யூஷனாக எடுத்துக்கொள்ளலாம்.
அப்பறம், இந்த வருடம் பைரசியில் படம் பார்க்காமல் இருக்கவும் நீங்கள் பார்த்த படங்கள் உங்கள் மனதை ஏமாற்றாமல் இருக்கவும் நல்ல திரைப்படங்கள் பார்க்க ஆபீஸில் விடுமுறை கிடைக்கவும் தியேட்டருக்குச் சென்று பார்க்குமளவு உங்கள் பொருளாதாரம் உயரவும் வாழ்த்துகள்!