சென்ற மாதக் கடைசியில் வந்த மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 வெகுவாகப் பலராலும் அலசப்பட்டாலும் ஓரிரு வார்த்தைகள்...
முதலில், ஒரு மிகப்பெரும் படைப்பை கையிலெடுத்துக் கொண்டு முதல் பாகத்தையும், அதற்கடுத்த ஆறு மாதத்துக்குள்ளாக இரண்டாவது பாகத்தையும் வெளியிட்ட 'தொழில் நேர்த்தி'க்காக மெட்ராஸ் டாக்கீஸுக்குப் பாராட்டுகள்!
முதல் பாகத்தைப் போல பேசப்படவில்லை என்றாலும் திரை அனுபவமாக நன்றாகவே இருந்தது இரண்டாம் பாகம். நிறைய மாத்திட்டாரே என்ற குற்றச்சாட்டுகளைப் பரவலாகக் கேட்க முடிந்தது. அதே சமயம், டூகே கிட்ஸுகள்கூட ரசித்து சிலாகிக்கக்கூடிய காதல் காட்சிகளை மணிரத்னம் வழங்கியிருந்தது மிகச்சிறப்பு. விக்ரம் தானொரு நடிப்பு ராட்சஷன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். இவ்வளவு பெரிய ஒரு படைப்புக்குப் பிறகு, மணிரத்னம் போன்றதொரு படைப்பாளியிடமிருந்து என்ன படைப்பு அடுத்து வரப்போகிறதென்பது ஒட்டுமொத்த தமிழ்த்திரை ரசிகர்களிடையே பெருத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
மே மாதம் வந்த படங்களில் முதலில் ‘தீர்க்கதரிசி'. காவல்துறைக் கட்டுப்பாட்டுக்கு அறைக்கு வரும் அழைப்பில், ஒரு மர்மக்குரல் நடக்கப்போகும் சில குற்றச் செயல்கள் குறித்து முன்கூட்டியே சொல்கிறது. ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தும் காவல்துறை ஒவ்வொன்றாய் நிகழவே, மர்மக் குரலுக்குரியவைக் கண்டுபிடிக்க முனைகிறர்கள். கண்டுபிடிக்க முடிந்ததா, குற்றச் செயல்களை தடுத்தனரா என்பதை பரபரப்பாக சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் பி. சதீஷ் குமார்.
நல்ல கரு. பரபர திரைக்கதை, எடிட்டிங், கேமரா என்று எதுவும் குறைவைக்கவில்லை. ஆனால் காரணத்தின் வீரியம் குறைவாக இருப்பதால் நமக்கு அது தரும் பதைபதைப்பும் ஆர்வமும் குறைவாகவே இருக்கிறது. அதைப்போலவே ட்விஸ்ட்கள் இல்லாமல் தொடரும் போலீஸ் மர்மக்குரல் டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்டு ஒரு கட்டத்தில் அலுப்பையும் உண்டுபண்ணுகிறது.
சத்யராஜ், அஜ்மல் இருவருமே முழு உழைப்பைக் கொட்டியிருக்கிறார்கள் என்பது பாராட்டுக்குரியது!
விஜய்யை வைத்து அடுத்த படத்தை இயக்க இருக்கும் வெங்கட் பிரபுவுக்கு முதலில் வாழ்த்துகள். அவரது இயக்கத்தில் சென்ற மாதம் வெளியானது ‘கஸ்டடி'. ரொம்பவும் பின்னாடி இல்லை ஆனாலும் கொஞ்சமே கொஞ்சம் பீரியட் படம். 90களில் நடக்கும் கதை.
நேர்மையான காவலரான நாகசைதன்யா, கொலைக் குற்றவாளிகளான அரவிந்த் சாமி, சம்பத் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முயற்சியில் இருக்கிறார். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டால் தான் மாட்டிக் கொள்ள நேரிடுமென்று முதல்வர் பிரியாமணி, ஐஜி சரத்குமாருக்கு அதைத்தடுக்கக் கட்டளையிடுகிறார். அதை மீறி நாகசதன்யா ஜெயிக்கிறாரா என்பதே கதை.
காவல்துறை வெர்சஸ் சிபிஐ மோதல் சுவாரஸ்யம் கூட்டுகிறது. ஆனால் யூகிக்கக் கூடிய திருப்பங்கள் சோர்வை தருகின்றன. வெங்கட் பிரபு படங்களில் வழக்கமாக பாடல் காட்சிகள் ரசிக்கவைக்கும். இதில் திணிக்கப்பட்டவையாக இருந்தன.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மனதுக்கு ஒவ்வாத ஒரு வேலையில் சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ், அதன்பின் எதிர்கொள்ளும் சிக்கல்களும் அதிலிருந்து மீள்வதுமான கதையமைப்பைக் கொண்ட படம் 'ஃபர்ஹானா'.
இஸ்லாமியக் குடும்பத்துப் பெண்ணாக முழுமுற்றாக 'ஃபர்ஹானா'வாகவே மாறிக் காட்சியளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் படத்துக்குப் பெரிய பலம். மனுஷ்யபுத்திரன், நெல்சன், சங்கர்தாஸ் கூட்டணியின் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. ஜித்தன் ரமேஷ், செல்வராகவன் என்று கதாபாத்திரத் தேர்வில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் காட்டியிருக்கும் கவனத்துக்குக் கைதட்டலாம்!
இம்மாத இறுதியில் வந்த பிச்சைக்காரன் 2, ம்ஹும்! பெரும் கோடீஸ்வரன் ஒருவரின் சொத்துக்களை அடைய நினைக்கும் கூட்டணி,அவருக்கு பிச்சைக் காரர் ஒருவரின் மூளையை அறுவை சிகிச்சை செய்து பொருத்துகிறார்கள். என்ன ஆனது என்பது கதை.
செண்டிமெண்டும் வொர்க் அவுட் ஆகவில்லை; காட்சிகளிலும் நேர்த்தியில்லை. ஆரம்பத்தில் கொஞ்சம் நிமிர்ந்து உக்கார வைத்து, பிளாஷ்பாக் ஆரம்பித்ததும் சோதிக்க வைக்கிறது. தெலுங்கில் ஆஹா ஓஹோ என்று ஓடுவதன் ரகசியமென்ன்னவென்று தெரியவில்லை.
இம்மாதம் தியேட்டர்கள் கொண்டாடியது 'குட்நைட்' படத்தைத்தான். குறட்டைப் பிரச்னையால் தன் வாழ்க்கையே கேள்விக்குள்ளாக தவிக்கும் மணிகண்டன், அதை எப்படிச் சமாளிக்கிறார் என்பதே கதை. விநாயக் சந்திர சேகரனின் இயக்கத்தில், மணிகண்டன், ரமேஷ் திலக், ரேச்சல், மீத்தா ரகுநாத், பாலாஜி சக்திவேல் என்று அருமையான கதாபாத்திரத் தேர்வுகளோடு வெளிவந்தது குட் நைட்.
‘ஒரு சிம்பிள் ஒன்லைன்ல மல்லுவுட்ல என்னமா எடுக்கறாங்க' என்று சிலகாலமாக பேசப்பட்டு வந்த நிலையில் ‘அதென்ன பிரமாதம்.. இந்தாங்க!' என்று குட் நைட்டைக் கொடுத்திருக்கிறார் விநாயக். ஒவ்வொரு கதாபாத்திரமும், அதற்கேயுரிய தனித்தனி குணாதிசயங்களோடு இருப்பது மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மணிகண்டன் - ரமேஷ் திலக்கின் மாமா மச்சான் காட்சிகள், அவ்வளவு நெகிழ்ச்சியும் கலகலப்புமாக படமாக்கப்பட்டுள்ளது. சபாஷ் டீம்!
தியேட்டர் தாண்டி பெரும் கவனத்தை ஈர்த்தது இம்மாதம் அமேசான் ப்ரைமில் வெளியான மாடர்ன் லவ் - வெப் சீரிஸ். ஆறு எபிசோடுகள். பாரதிராஜா, ராஜூ முருகன், பாலாஜி சக்திவேல், ராம்குமார் கிருஷ்ணகுமார், அக்ஷய் சுந்தர் இவர்களோடு ஒட்டுமொத்த சீரிஸுக்கும் ஷோ ரன்னரான தியாகராஜன் குமாரராஜாவும் ஒரு எபிசோட் இயக்கியிருக்கிறார்.
ராஜு முருகனின் லாலாகுண்டா பொம்மைகள் ரசித்துப் பார்க்க வைத்தது. அக்ஷய் சுந்தரின் மார்கழி அட்டகாசமான இசையால் ஒரு படி எக்ஸ்ட்ரா கவனம் பெற்றது. இவற்றில் தியாகராஜன் குமாரராஜாவின் நினைவோ ஒரு பறவை, படம் படத்துக்குள் படம் என்று என்னென்னமோ இதுல இருக்கு என்று பேசுபொருளானது, இது சரியா, இப்படி இருக்குமா என்று படத்தையும் படம் படமாகப்பட்ட விதத்தையும் உரையாடலுக்குள் கொண்டு வரச்செய்தது நினைவோ ஒரு பறவை.
இதைத்தாண்டி பாரதிராஜா இயக்கி பாலுமகேந்திராவுக்கு சமர்ப்பணம் செய்திருந்த 'பறவைக்கூட்டில் வாழும் மீன்கள்' படமும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துவதாய் பேசப்பட்டது.
இவர்களையெல்லாம் தாண்டி ஸ்கோர் செய்தவர் இளையராஜா. ஆறில் மூன்றுக்கு இசை என்பது மட்டுமல்லாமல், அதில் அழுத்தமாக தன் முத்திரையைப் பதித்த விதத்திலும் ‘எப்பவும் நான் ராஜா என்றிருக்கிறார்' இளையராஜா!
ஜூன், 2023