திரைவலம்

கதையே நாயகன்

காதம்பரி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த படம் பகீரா. தொடர்ந்து நகரில் பல பெண்கள் கொலை செய்யப்பட, அதை விசாரிக்கிறார் காவல் அதிகாரி சாய்குமார். இன்னொருபுறம் பிரபுதேவா, வெவ்வேறு நகரங்கள் வெவ்வேறு பெண்களுடன் பழகி காதலித்து வருகிறார். கொலைகளுக்கும் பிரபுதேவாவுக்கும் என்ன சம்பந்தம் என்பதைச் சொல்லும் படம் பகீரா.

ஆதிக் ரவிச்சந்திரன், தன் டிரேட்மார்க்கான 'பெண்கள் இப்படித்தான் இருக்கணும்' பாணியிலேயே இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். பிரபுதேவாவின் நடிப்பு மட்டும் கொஞ்சம் ஆறுதல் தருகிறது.

அடுத்து அகிலன். சென்னை துறைமுகத்தில் கிரேன் ஆபரேட்டராகப் பணிபுரிகிறார் ஜெயம் ரவி. தடை செய்யப்பட்ட பொருட்களைக் கடத்தும் கடத்தல் கும்பல் தலைவனை சந்திக்க வேண்டுமென்பது அகிலனின் ஆசை. ஏன் சந்திக்க விருப்பப்படுகிறார், சந்தித்தாரா என்பதே அகிலனின் ஒன் லைன்.

இந்தியப் பெருங்கடலின் கடத்தல் ராஜா என்கிற சுவாரஸ்ய ஒன்லைனை வைத்துக்கொண்டு ரவுண்டு கட்டி கபடி ஆடி இருக்கலாம். ஆனால் இயக்குநர் கல்யாணகிருஷ்ணன் இந்தப் பின்னணிக்கான திரைக்கோர்வையில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். முதல்பாதி ஓரளவுக்கு ஓகே என்றாலும் இரண்டாம் பாதி தெளிவில்லாமல் சோதிக்கிறது. இதுபோன்ற கதைகளுக்கு மிகக்குறைந்தது ஆறேழு காட்சிகளில் ரசிகர்களை மெய்சிலிர்க்க, வியப்படைய வைக்க வேண்டும் என்பது இதில் மிஸ்ஸிங்.

உதயநிதி நடிப்பில் மு.மாறனின் இயக்கத்தில் வெளியானது கண்ணை நம்பாதே. உடனடியாக ஒருவீடு வாடகைக்குத் தேடும் உதயநிதி, உதவுகிறார் பிரசன்னா. வீட்டில் தங்கிய இரவே ஒரு பெண்ணுக்கு உதவப்போய், பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்கிறார் உதய். அவரும்

பிரசன்னாவும் சேர்ந்து அந்தச் சிக்கலிலிருந்து விடுபட எடுக்கும் முயற்சிகளும், விடுபட்டார்களா என்பதுமே கதை.

ஒரு கொலை, அதை நாயகன் எதிர்கொள்வதில் உள்ள சிக்கல்கள் என்ற கதையம்சத்தில் ட்விஸ்ட்களுக்கு பஞ்சமிருக்காது. அதை மு.மாறன் சிறப்பாகவே இதிலும் செய்திருக்கிறார். இப்படியான படங்களுக்குத் தேவையான மர்மமுடிச்சுகளை சரியான விதத்தில் தொடுத்துக்கொண்டே வருகிறது படத்தின் திரைக்கதை. இடைவேளை வரை, அப்படிக் கட்டிப்போட்ட படம், அந்த முடிச்சுகள் அவிழும்போது அதிர்ச்சியடைவதற்கு பதில் ஒரு ரியாக்‌ஷனும் வராமல் உட்கார வேண்டியிருக்கிறது என்பதுதான் சோகம்!

இந்த மாதத்தின் ஆகச்சிறந்த படம்... அயோத்தி!

மனித நேயத்தைப் பேசும் படங்களின் பெரும் குறையாக இருப்பது படத்தில் துருத்திக்கொண்டு தெரியும் பிரசார நெடி. ‘நல்லவனா இரு' என்று சொல்லவேண்டும். ஆனால் நேரடியாக சொன்னால் ‘நல்லவன் என்பதற்கான வரையறை எது?' என்ற கேள்வி வரும். அதே சமயம் ஒரு சம்பவத்தை எடுத்துக் கொண்டு நல்ல திரைக்கதையாக்கி, இயல்பான வசனங்களுடன் அதை திரைப்படமாக்கினால், மக்களுக்கு எளிதில் இந்த அட்வைஸ் கடத்தப்பட்டு விடும்.

அயோத்தி அதை கனகச்சிதமாகச் செய்திருக்கிறது. கதைக்கு அழகான திரைக்கதை அமைத்து பொருத்தமான வசனங்கள் அடுக்கி படமாக்கியிருக்கிறார் புதுமுக இயக்குநர் மந்திரமூத்தி. சசிகுமார், புகழ் உள்ளிட்ட நடித்த அனைவருமே படத்தின் கதைக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு வரும் ஒரு குடும்பம் விபத்தில் மாட்டிக்கொள்கிறது. குடும்பத்தலைவி இறந்துவிட அக்குடும்பத்துக்கு உதவுகிறார்கள் சசிகுமாரும் புகழும். இயல்பான நடிப்பில்  மனிதம் பேசும் இந்தப் படைப்புக்கு ஒளிப்பதிவு, இசை என ஒட்டுமொத்தக்குழுவும் சிறப்பான பங்களிப்பை செய்திருக்கிறது.

கொசுறு: அயோத்தி வெளிவந்தபோது தியேட்டரில் வரவேற்பில்லை. ஆனால் படத்தின் கதையும், இயக்கமும் மக்களைக் கவர்ந்துவிட, வாய்மொழியிலேயே படம் பலரைச் சென்றடைந்திருக்கிறது. ஆக, கதையே நாயகன்!

இந்த மாதம் பார்த்த முக்கியமான சில மலையாளப்படங்களைப் பற்றிக் கூறவேண்டும். தியேட்டரில் பார்த்தது ரோமாஞ்சம். 2007ல், பெங்களூரில், ஆவியை வரவைக்கும் ஓஜா போர்டு வைத்து விளையாடிய ஏழு நண்பர்களுக்கு நடந்த உண்மை நிகழ்வுகள் சிலவற்றை வைத்துப் பின்னப்பட்ட கதை. ஓடிடியில் இன்னும் வரவில்லை.அங்குபோய் பூட்டை ஆட்டவேண்டாம்! அதுபோக ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் ‘இரட்ட', சௌபின் ஷபீர் நடித்த ‘இல விழாப் பூஞ்சிரா', வினித் சீனிவாசன் - சுராஜ் நடிப்பில் ‘தங்கம்' என்று இம்மூன்று படங்களுமே இறுதியில் -சிலருக்கு சின்ன, சிலருக்கு பெரிய - அதிர்ச்சியைத் தரக்கூடியவை. நிச்சயம் தவறவிடக்கூடாத படங்கள் இவை!

ஏப்ரல், 2023