முதல்வாரத்தில் சிலைக் கடத்தலை மையமாக வைத்து வந்தது 'பரம்பொருள்.'
நேர்மையான.சாரி.. நேர்மையற்ற போலீஸ் அதிகாரி சரத்தின் வீட்டில் திருட வந்து மாட்டிக் கொள்கிறார் அமிதாஷ். அமிதாஷ் ஏற்கெனவே சிலைக்கடத்தல்காரரிடம் பணிபுரிந்ததை அறிந்த சரத், அவரை வைத்து கடத்தல்காரர்களிடம் பணம் வாங்கிக் கொழிக்கலாம் என்று திட்டமிடுகிறார். என்ன ஆனது என்பதே கதை.
சரத்குமாருக்கு இன்னுமொரு அட்டகாசமான படம். எதற்கும் கலங்காமல் டீலிங் பேசும் போலீஸாக அவர் கதாபாத்திரம் அருமை. அமிதாஷும் கேரக்டருக்கு நன்றாகவே பொருந்துகிறார். அறிமுக இயக்குநர் சி. அரவிந்த் ராஜ் ஓரிரு காட்சிகளில் சிலைக்கடத்தல் பின்னணிகளுக்கு ரொம்பவே உழைத்திருப்பது படத்தில் தெரிகிறது. ஓரிரு லாஜிக் மீறல்களைக் கடந்தால், படம் சுவாரஸ்யமான ஒரு படம்தான்.
அதே வாரத்தின் ரிலீஸான லக்கி மேனும் கிட்டத் தட்ட பாஸ் மார்க் வாங்கியது. யோகிபாபு, ஒரு அன்லக்கி மேன். எதுவும் நல்லதே நடக்க மாட்டேங்குதே என அவர் அயற்சியுறும் வேளையில் ஒரு பம்பர் குலுக்கல் மூலம் கிடைக்கிறது ஒரு கார். அட நமக்கும் நல்லது நடந்துருச்சே என நினைக்கும் வேளையில் அதன்மூலமும் சில பல சிக்கல்கள். மீறி யோகக்காரன் ஆனாரா என்பதே கதை.
அறிமுக இயக்குநர் பாலாஜி வேணுகோபால், தன் பலவருட மீடியா அனுபவத்தின்மூலம் படத்தை சரியாகக் கையாண்டுள்ளார். அவ்வப்போது சிரிக்கவும், கைதட்டவும் வைக்கிற வசனங்கள் பெரும்பலமாகக் கைகொடுக்க, படத்தின் காட்சிகளும் கவனிக்க வைக்கிறது. ஷான் ரோல்டனின் உறுத்தாத இசை படத்தை இன்னும் ஒருபடி நெருக்கமாக்குகிறது. எல்லாம் இருந்தும் 'கொஞ்ஞ்ஞ்சம் உப்பு கம்மியோ' என்று யோசித்துக்கொண்டே சாப்பிட வைக்கிற சுடுசோறு, லக்கி மேன்!
செப்டம்பரின் ஹிட் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சுனில் ஆகியோர் நடித்திருக்கும் படம்.
செல்வராகவன் ஒரு டைம் மிஷின். ஸாரி.. டைம் டெலிபோன் மிஷின் கண்டுபிடிக்கிறார். இப்போதைய மெக்கானிக் விஷால் கையில் அது கிடைக்கிறது. அவர் நண்பர் இப்போதைய டானின் மகன் எஸ்.ஜே. சூர்யா. அவர் அப்பாவும் எஸ்.ஜே.சூர்யாதான். மகன் எஸ்.ஜே.சூர்யாவைவிட , விஷாலைத்தான் டான் அப்பா எஸ்.ஜே.சூர்யாவுக்குப் பிடிக்கும். ஆனால் விஷாலுக்கு தன்னுடைய அப்பாவான பழைய டான் விஷாலைப் பிடிக்காது. எதாவது புரிஞ்சுதா.. விடுங்க.
அந்த ஃபோன் மூலம் பழைய காலத்து அம்மாவோடு பேசும் விஷால் தன் அப்பா விஷால், டானிலேயே நல்ல டான் என்று புரிந்து கொள்கிறார். அதன்மூலம் அவர் பழையதை மாற்றி இப்போது டானாகிறார். டான் மகன் எஸ் ஜே சூர்யா மெக்கானிக் ஆகிறார். இப்படியே சுற்றிச் சுழல்கிற கதையில் கடைசியில் யார் யார் உயிரோடு இருக்கிறார்கள், என்னவாக இருக்கிறார்கள் என்பதே மா.ஆ.
எழுதவே குழம்புகிற கதையை கலந்து கட்டி ஒரு குன்ஸாக ஓரளவு தன் திரைக்கதை மூலம் புரியவைக்க முயற்சி செய்திருக்கிறார் ஆதிக். சில பொறுப்பற்ற வசவு வசனங்களைத் தவிர்த்திருக்கலாம். எஸ்.ஜே.சூர்யா இரண்டு கேரக்டருக்கு நான்குமடங்கு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். விஷால் ஜாலியாக வந்து அவர் வேலையைச் செய்திருக்கிறார்.
படம் முழுவதும் இரைச்சலாக எல்லாருமே கத்திக் கத்திப் பேசுவது மட்டும் பெருங்குறை. ஆனால் படம் பலராலும் ரசிக்கப்படுவதற்கும் அதுதான் காரணம் என்பதுதான் முரணும்கூட!
நம்ம ஊரில் நான்கு படங்கள் கொடுத்துவிட்டு - அதில் மூன்று விஜய் ஹீரோ - சடாரென்று கிளிக்கு றெக்க முளைச்சுடுச்சு என்று பாலிவுட் பறந்த அட்லி, ஷாருக்கான் நடிப்பில் கொடுத்த படம் ஜவான்.
உலகத்துக்கே இந்திய சினிமா என்றால் தோன்றும் முகங்களில் ஒன்றான ஷாருக், தமிழ் இயக்குநரை நம்பி தன்னை ஒப்புக்கொடுக்க அதற்கு தன் பரபர திரைக்கதையில் நியாயம் செய்து ஷாருக் ரசிகர்களை திருப்திப் படுத்தியிருக்கிறார். இரண்டு ஷாருக். பல சதிகளை முறியடிக்கிறார்கள். ஏழைகள் பக்கம் நிற்கிறார்கள். சண்டை போடுகிறார்கள். அனிருத் இசையில் கலக்க தியேட்டர்கள் அலறுகின்றன.
இதெல்லாமே மற்ற மாநிலங்களில். தமிழுக்கு இது பார்த்துச் சலித்த பல படங்களின் கலவை. ஆனாலும் பிரமாண்ட காட்சி அமைப்புகளும் ஷாருக்கின் நடிப்பும் அனிருத் இசையும் எல்லாவற்றையும் மறந்து பொழுதுபோக வைக்கிறது.