திரைவலம்

மகிழ்ச்சி!!!!

உண்மைத்தமிழன்

இந்த மாதத்தை ‘அப்பா’ என்னும் திரைப்படம் மிக அற்புதமாக துவக்கி வைத்தது.  மூன்று அப்பாக்கள்.. வேறுவேறு குணாதிசயங்களில் தங்களது பிள்ளையை வளர்க்கும் முறைகள்.. அவர்களின் பிரச்சினைகள்.. பிள்ளைகளின் படிப்பும், அவர்களது இயல்பான குணமும் திசை மாறும் போக்கு.. குடும்பத்தில் இதனால் விளையும் பூகம்பங்கள் என அனைத்தையும் எந்தவித சமரசமும் இல்லாத குடும்பக் கதையாக வெளிக்கொணர்ந்தார் இயக்குநர் சமுத்திரக்கனி.  சமூக ஆர்வலரான சமுத்திரக்கனிக்கு இந்தப் படம் மேலும் ஒரு கிரீடத்தைக் கொடுத்திருக்கிறது.

‘ஜாக்சன் துரை’ படத்தில் அரதப் பழசான கதைதான் என்றாலும், பேய்களின் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை மட்டும் புதிதாக வைத்துக் கொண்டு சிலம்பம் ஆடியிருக்கிறார் இயக்குநர். சிபிராஜுக்கும், அவரது அப்பா சத்யராஜுக்கும் இந்த வருடத்தில் பெயர் வாங்கிக் கொடுத்திருக்கிறது இந்தப் படம். கொஞ்சம் நகைச்சுவை.. கொஞ்சம் நம்பும்படியான கதை.. அதிக சுவாரஸ்யமான திரைக்கதை என்று இந்தப் படமும் தேனாண்டாள் பிலிம்ஸுக்கு லாப லட்சுமியை ஈட்டித் தந்திருக்கிறது.

‘நேர்மையான வழியில் உழைத்து சம்பாதிக்கும் பணமே நிம்மதியைக் கொடுக்கும்.. தவறான வழிகளில் சேர்க்கப்படும் பணம், நம் வாழ்க்கையை தினம் தினம் கொலை செய்யும்’ என்பதுதான் ‘பைசா’ படத்தின் கரு. படத்தில் நடித்தவர்கள் அதிகம் பிரபலமில்லாதவர்கள் என்பதாலும், படத்தின் இயக்கமும், திரைக்கதையும் அழுத்தமாக இல்லாததினாலும் அதிகம் பெயரெடுக்காமல் போய்விட்டது. ஆனால் வளரும் சமுதாயம் நிச்சயம் பார்க்க வேண்டிய படமாகத்தான் இது இருந்தது.

‘லிங்கா’ பட விவகாரத்தில் ரஜினி உட்பட திரையுலகத்தினர் பலரது பகையையும் சம்பாதித்துக் கொண்டிருக்கும் விநியோகஸ்தர் சிங்காரவேலு, வேறொரு தயாரிப்பாளரின் பெயரில் தயாரித்த படம் ‘அட்ரா மச்சான் விசிலு’.

கிட்டத்தட்ட ரஜினியை மையப்படுத்தி.. ஹீரோக்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இடையில் இருக்கும் பந்தம் வெறும் பணம் சம்பந்தப்பட்டதுதான். அது பாசம், நேசம், அன்பு, பரிவையெல்லாம் கொண்டதல்ல என்பதை நிரூபிப்பதை போல திரைக்கதை அமைத்திருந்தார்கள்.

மிர்ச்சி சிவா, பவர் ஸ்டார் சீனிவாசன் என்கிற இரண்டு காமெடி நடிகர்கள் இருந்தும் படம் சூடுபிடிக்கவில்லை.

சந்தானம் தில்லாக தனது வாய்ப் பேச்சை மட்டுமே நம்பி ஹீரோவாக களமிறங்கிய 3-வது படம் ‘தில்லுக்கு துட்டு’. மொட்டை தலை ராஜேந்திரனின் துணையோடு இந்த பேயும் கடைசி அரை மணி நேர கலாட்டாவில் பெயர் சொல்லும்படியாக வசூலைக் குவித்திருக்கிறது. சந்தானத்தின் மார்க்கெட்டிற்கு இந்தப் படமும் ஒரு படிக்கல்லாக அமைந்துவிட்டது எனலாம்.

படம் வெளியாவதற்கு முன்பேயே படத்தின் ஹீரோ அகால மரணமடைய அந்த வருத்தத்திலேயே சில மாதங்கள் கழித்து வெளியாகியிருக்கிறது ‘க.க.க.போ’ திரைப்படம். ‘கண்ணதாசனும், கவிதாவும் காதலிக்கப் போறாங்க’ என்ற தலைப்பையே சுருக்கி இப்படி வைத்தார்களாம். படத்தையே இன்னும் கொஞ்சம் சுருக்கியிருக்கலாம்.

அளவுக்கதிகமான நகைச்சுவை பட்டாளத்தை படத்தில் இறக்கியிருப்பதால் அனைவரின் நடிப்பையும் பார்த்து நாம் டயர்டாகிப் போனதுதான் மிச்சம். பல திருப்பங்களுடன் படம் அவ்வப்போது டர்னாகிக் கொண்டே போக.. படம் குறித்து ஒரு பார்வைக்கே வர முடியாமல் போனது.. படமும் வெகு சீக்கிரம் தியேட்டரிலிருந்து வெளியேறியது.

சின்ன நடிகர்.. இவரெல்லாம் இயக்குநரா என்று கிண்டல் செய்தவர்களையெல்லாம் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு பேச வைத்துவிட்டார் நடிகர் ‘காதல்’ சுகுமார். இவர் இயக்கியிருக்கும் ‘சும்மாவே ஆடுவோம்’ இந்த ‘கபாலி’யின் தாண்டவ நேரத்திலும் 40 திரையரங்குகளில் 3-வது வாரமாக ஓடிக் கொண்டிருப்பது மிக, மிக ஆச்சரியம்.

படத்தின் கதையும் புதுசு.. திரைக்கதையும் புதுசு.. ‘ஒரு சினிமாவை எடுத்துக் காட்டுங்க’ என்று நிஜமான சினிமா ஹீரோ ஒருவர் சவால்விட.. இதனையேற்று ஒரு ஊரே ஒன்று திரண்டு ஒரு திரைப்படத்தைத் தயாரித்து காட்டுவதுதான் படமே. கிட்டத்தட்ட ‘லகான்’ படத்தின் கதையொப்பம் என்றாலும் நமது நேட்டிவிட்டி மாறாமல்.. படத்தை உருவாக்கியிருப்பதால் சுகுமாரின் இயக்கத் திறமைக்கு ஒரு சபாஷ் போட்டுவிடலாம்.

காலை 9 மணியில் இருந்து 10 மணிக்குள் நடக்கும் கதை.. காருக்குள்ளேயே நடக்கும் கதை என்றெல்லாம் பில்டப் கொடுக்கப்பட்டு வெளியானது ‘ஒன்பதிலிருந்து பத்துவரை’ திரைப்படம். காலைக் காட்சியாகவே சில தியேட்டர்களில் ஓட்டப்பட்டு விரைவில் தூக்கப்பட்டுவிட்டது.

சொதப்பலான கதை.. எந்தவகையிலும் ஈர்க்காத திரைக்கதை.. சவசவ இயக்கம் என்று அனைத்திலும் ஏகப்பட்ட மைனஸ்களுக்கிடையில் ஒரேயொரு பிளஸ் ஹீரோயின் மலையாள தாரகையான ஸ்வப்னாவின் நடிப்புதான்.

இந்த வருடத்தின் மிகப் பெரிய சூப்பர் டூப்பர் ஹிட்டாக இந்த மாதம் உறுதி செய்யப்பட்டுள்ள படம் ‘கபாலி’. இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் இந்தப் படம் உருவானபோதே அதற்கொரு சாதி முத்திரை குத்தப்பட்டிருந்தது. அதனை பொய்யாக்காமல் அது போலவே படமெடுத்துக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.

மலேசியாவில் டானாக இருந்த கபாலியின் வாழ்க்கை வரலாற்றை அங்கேயிருக்கும் சாதியக் கூறுகளுடன் அலசி ஆராய்ந்திருக்கிறார் ரஞ்சித். ரஜினிக்கே இது முற்றிலும் புதிய களமாகத்தான் இருந்திருக்கும். ஒரு ரஜினி படமாகவே இருக்க முடியாத படத்தில், ரஜினியை நடிக்க வைத்த பெருமையை பெற்று விட்டார் ரஞ்சித்.

ரஜினியின் வசூல் சாதனையை முறியடிக்க ரஜினியால் மட்டுமே முடியும் என்பதை இந்தக் ‘கபாலி’ நிரூபித்திருக்கிறது.

மகிழ்ச்சி..!

ஆகஸ்ட், 2016.