முந்நூறு படங்கள்... முன்னேறாத தமிழ் சினிமா...

முந்நூறு படங்கள்...
முன்னேறாத
தமிழ் சினிமா...
Published on

 கிறிஸ்துமஸ் தினத்தன்று சென்னை, விஜயா ஃபோரம் மாலில் நிவின் பாலி நடித்திருந்த ‘சர்வம் மாயா’ மலையாளப் படத்தின் காலைக் காட்சிக்குப் போயிருந்தேன். அதே தினத்தில்தான் ‘சிறை’, ‘ரெட்ட தல’ என அரைடஜன் தமிழ்ப் படங்கள் ரிலீஸாகியிருந்தன.

மலையாளப் படமான ‘சர்வம் மாயா’ சர்வசாதாரணமாக ஹவுஸ்ஃபுல் ஆகியிருந்தது.  தமிழ்ப் படங்களான ’சிறை’க்கும், ’ரெட்ட தலை’க்கும் பத்து சொச்ச தலைகளே வந்திருக்க, ஷோ காப்பாற்றப்பட்ட நிலையில், மற்ற படங்கள் அனைத்துக்கும் சிங்கிள் டிஜிட்டில் ஆட்கள் வர காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

வருடக் கடைசியில் வெளியிடப்பட்ட, அதிகாரபூர்வமற்ற சில பட்டியல்களின் அடிப்படையில் இந்த ஆண்டு, ஒரு சில ஓ.டி.டி ரிலீஸ்களையும் சேர்த்துக்கொண்டால்,  வெளியான படங்களின் எண்ணிக்கை முந்நூறைத் தொட்டிருக்கிறது. இந்த முந்நூறு என்பது 96 ஆண்டுகால பேசும்பட சினிமா வரலாற்றில் அதிகபட்ச எண்ணிக்கை. வெள்ளி எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய சாதனை. ஆனால் படங்களின் தரம், வசூல் நிலவரம் என்று பார்த்தால் ‘மேய்க்கிறது எருமை…அதுல என்ன பெருமை’ மொமண்டேதான்.

வருடக் கடைசியில் மட்டுமா இப்படி ?  இந்த வருடத் தொடக்கத்தில் இருந்தே இதே நிலைதான் என்கிறது கோடம்பாக்க வரவு செலவுக் கணக்கு.

அதாகப்பட்டது மேற்படி முந்நூறுகளில் வெற்றி பெற்றவை, ஓரளவு லாபம் ஈட்டியவை, வாழ்வா சாவா போராட்டத்தில் கைக்காசைத் தேற்றிக் கரை சேர்ந்தவை என்று பார்த்தால் அவை வெறும் 5 சதவிகிதப் படங்களே என்கிறார்கள்.

அந்த வெற்றிப்பட்டியலில் ரஜினியின் ‘கூலி’ அபிஷன் ஜீவிந்த், சசிகுமார் கூட்டணியின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ மற்றும் ‘டூட்’ மணிகண்டன் நடித்த ‘குடும்பஸ்தன்’ விஜய் சேதுபதியின்’ தலைவன் தலைவி’ சூரியின் ‘மாமன்’ மாரி செல்வராஜின் ‘பைசன் காளமாடன்’  துல்கர் சல்மானின் ‘காந்தா’ கலையரசன் தங்கவேல் இயக்கிய ‘ஆண்பாவம் பொல்லாதது’ என்று ஒரு சிறிய பட்டியல் மட்டுமே தட்டுப்படுகிறது. விமர்சகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பார்த்தால் ‘சிறை’ அடுத்த சில தினங்களில் வெற்றிப்படமாகும் வாய்ப்புண்டு என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

தோல்விப்பட்டியலை எழுத அந்திமழையில் சிறப்பிதழ்தான் போடவேண்டும். அதற்கு ஆசிரியர், ‘தோல்வி நல்லதுதான்’ என்று விபரீதமான  தலைப்புதான் வைப்பார் என்று அவர் தலையிலேயே அடித்து சத்தியம் செய்யலாம்.

ஆக முக்கியமான தோல்விகள் என்று சிலவற்றை மட்டும் பார்ப்போமெனில் கமல், மணிரத்னம் கூட்டணியின் ‘தக் லைஃப்’ ஓவர் த டாப்பில் வந்து நிற்கும். ’என்ன வேணும் உனக்கு… கொட்டிக் கொட்டிக் கிடக்கு’ என்று எடுத்த படத்தை ‘பொட்டி இந்தா உனக்கு’ என்று ரிலீஸான ஓரிரு தினங்களிலேயே மக்கள் திருப்பி அனுப்பினார்கள்.

அடுத்த அருவாமனை அஜித் கொடுத்த இரு படங்களும். மகிழ் திருமேனி இயக்கிய ‘விடா முயற்சி’ படா தோல்வியில் முடிய, அடுத்து வெளியான ஆதிக் ரவிச்சந்திரனின் ‘குட் பேட் அக்லி’ யில் முதல் வார்த்தை மட்டும் மிஸ்சிங். மறு இரு வார்த்தைகளும் படம் முழுக்க பரவிக் கிடந்தன. ஆனால் இந்தப் படம் விடா முயற்சி அளவுக்கு தோல்வி இல்லை. வசூலில் ஓரளவு தப்பித்தது என்று அஜித் வட்டாரத்தில் மட்டும் நேற்று மதியம் வரை தம் பிடித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சூர்யாவும் தன் பங்குக்கு ‘ரெட்ரோ’, ‘கங்குவா’ படங்களின் மூலம் தலைகுப்புறக் கவிழ்ந்தார்.  சிவகார்த்திகேயனும் தன் பங்குக்கு ஏ.ஆர். முருகதாசுடன் இணைந்துகொண்டு ‘மதராஸி’ என்றொரு பழைய பஞ்சாங்கத்தைப் புரட்டினார்.

வருடக் கடைசிக் கடமைகளில் ஒன்றாக, இத்தகைய படுபரிதாப தோல்விக்கு காரணங்கள் என்ன என்பது குறித்து திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சில சினிமா வியூகஸ்தர்கள் யூடியூப் தளங்களில் மயிர்பிளக்க விவாதம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அதில் தியேட்டர் டிக்கட் அதீத விலை, கேன்டீன்களில் அடிக்கப்படும் பகல் கொள்ளை, படம் ரிலீஸான ஒரு சில நாட்களிலேயே ஓ.டி.டியில் காணக் கிடைப்பது, வழக்கம்போல் திருட்டு டாட்.காம்கள் சுடச்சுட வெளியிடுவது போன்றவை டாப் க்ரைம்களில் அலசப்படுகின்றன. [ ‘நீ மட்டும்தான் ரீ ரிலீஸ் பண்ணுவியா…நாங்களும் பண்ணுவோம்’ என்றபடி படையப்பாவைக் கூட திருட்டு டாட்.காமில் வெளியிட்டதை என்னவென்று சொல்வதம்மா?]

இவை மட்டுமல்ல… இன்னும் சில காரணங்களைக் கூட பட்டியலிட முடியும். இந்த இம்சைகளைத் தாண்டி ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘குடும்பஸ்தன்’, ‘பைசன்’ போன்ற படங்கள் ஓடியிருக்கின்றனதானே?

எப்போதும் பிரச்னைகளை நாம் பக்கவாட்டிலேயே அணுகிப் பழகிவிட்டோம் என்பதுதான் நிதர்சனம். நிஜ காரணத்தை நாம் நெருங்க விரும்புவதேயில்லை.

தொழில்நுட்ப ரீதியாக தமிழ் சினிமா கலைஞர்கள் சர்வதேச தரத்துக்கு வளர்ந்திருக்கிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.  தென்னிந்தியாவில் மட்டுமல்ல… பாலிவுட் முழுக்கவே கூட நம் ஒளிப்பதிவாளர்கள்தான் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.  கலை இயக்குநர்களும் எங்கு திரும்பினாலும் தமிழர்கள்தான். இசையில் சொல்லவேண்டுமா ? சிம்ஃபொனி வரை இமயத்தில் கொடிநாட்டி இருக்கிறோம். ஆனால் கதைகளில்தான் எப்போதும் கோட்டை விடுகிறோம். கதை விவகாரத்தில் தமிழ் சினிமா இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் ஏழு கடல் ஏழு மலைகளுக்குப் பின்னால் தங்கிவிட்டார்கள். உலக இலக்கியங்களுக்கெல்லாம் போகவேண்டாம். நம் தமிழில் இல்லாத சிறுகதை, நாவல்களா ? நம் கைக்கெட்டுகிற தூரத்தில் உள்ள மலையாள இயக்குநர்கள் எழுத்தாளர்களுக்கும் இலக்கியத்துக்கும் கொடுக்கிற மரியாதையில் ஒரு துளியாவது இங்கே இருக்கிற எழுத்தாளர்களுக்குக் கொடுத்திருக்கிறோமா?

படமாக்கும் தகுதி வாய்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் தமிழில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றைப் படிப்பதற்கு சினிமாக்காரர்கள் யாருக்கும் நேரமில்லை. குறைந்தபட்சம் அக்கதைகளை காதுகொடுத்துக் கேட்கக்கூட எவரும் விரும்புவதில்லை.

நல்ல கதைகளைத் தேடத் தொடங்கும் வரை, 95 சதவிகித தோல்விகளுடன்,  நாம் நாசமாய்ப் போவது தொடரத்தான் செய்யும். 300 படம் எடுப்போம். ஆனால் கொஞ்சமும் முன்னேற மாட்டோம்.

இந்த இடத்தில் கோ.வசந்தகுமாரனின் கவிதை ஒன்று ஞாபகத்துக்கு வந்துபோகிறது.

ஓவியமாக, ஒரு பறவையை

வரையத் தொடங்கும் முன்

அதற்கான கூடு ஒன்றை

வரைந்துவிடுங்கள்!

படம் எடுக்கும் முன் ஒரு நல்ல கதையை கையில் எடுத்துக்கொள்ளுங்கள் என்பதாகத்தான் அதை நான் பார்க்கிறேன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com