
கடந்தவாரம் தனியார் ஓ.டி.டி தளம் ஒன்றில் வெளியான ‘வாரண்ட்’ தொலைக்காட்சி தொடரை நேற்றுதான் தர்செயலாக பார்க்க நேர்ந்தது. கைவசம் நல்ல கதை இருக்கிறதோ இல்லையோ கவன ஈர்ப்புக்காக எதையாவது செய்தாகவேண்டிய நிலையில் இத்தொடரில் இடம் பெற்ற கெட்ட வார்த்தைகள் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியவை.
2022ல் வெளியான ‘விலங்கு’ தொலைக்காட்சி தொடர் அதன் புதியபாணி கதை சொல்லலுக்காக பெரும் வரவேற்பைப் பெற்ற ஒன்று. அதை இயக்கியவர் பிரசாந்த் பாண்டியராஜ். அதே பாண்டியராஜ் தற்போது நாயகனாக நடித்திருக்கும் தொடர்தான் இந்த வாரண்ட். பிரசாந்தின் உதவியாளர் விக்னேஷ் நாகராஜ் என்பவர் இதை இயக்கியிருக்கிறார். கதை, வசனத்தை பிரசாந்தும் விக்னேஷும் இணைந்து எழுதியிருக்கிறார்கள்.
காவல்துறையில் புதிதாக பணியில் சேரும் பிரசாந்த் எவ்விதமான சோதனைகளுக்கெல்லாம் ஆளாகிறார். வாரண்டுகளுக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பவர்களை எப்படி தேடிப்பிடிக்கிறார். அதில் குற்றம் செய்யாத சிலரும் எப்படி சித்திரவதைக்குள்ளாகிறார்கள் என்று போகும் கதையில் கதாநாயகனின் பெயர் கோட்டை கருப்பசாமி. ஆனால் அவரை ஸ்டேஷனில் உள்ள பெண் காவலர்கள் உள்பட அனைவருமே கொட்டை என்றுதான் அழைக்கிறார்கள். தொடரில் இருக்கிற ஒரே சுமாரான கெட்ட வார்த்தை இது ஒன்று மட்டுமே. மற்றபடி எட்டு பகுதிகளிலும் சேர்த்து சுமார் 800க்குக் குறையாத கெட்ட வார்த்தைகள். அத்தனையும் பகீர் ரகம். தமிழக தொலைக்காட்சி தொடர்களில் மட்டுமல்ல… உலக அளவில் வேறு எந்தத் தொடரிலாவது இவ்வளவு கெட்ட வார்த்தைகள் இடம் பெற்றிருக்க வாய்ப்பில்லை என்கிற அளவுக்கு அத்தனை ‘மணிமணியான’ கெட்ட வார்த்தைகள்.
பொதுவாக நல்ல சிறப்பான கெட்ட வார்த்தைகளுக்கு குழாயடி சண்டைகள்தான் பிரசித்தம். அவர்கள் வந்து இந்த இருவரிடமும் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்பது கியாரண்டி.