புஷ்பா 2 திரைப்பட சிறப்புக் காட்சியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனா அம்மாநில காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா -2 திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தெலங்கானாவில் 4ஆம் தேதி இரவு 9.30 மணிக்கே பிரிமியர் ஷோக்கள் நடந்தன.
அந்தவகையில் ஹைதராபாத் ஆர்டிசி கிராஸ் ரோடு அருகே உள்ள சந்தியா திரையரங்கில் பிரிமியம் ஷோவுக்கு டிசம்பர் 4ஆம் தேதி இரவு இப்படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவரை காணவும் அவருடன் அமர்ந்து சினிமா பார்க்கவும் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில் தில்ஷுக் நகரை சேர்ந்த பாஸ்கர், அவரது மனைவி ரேவதி (39), இவர்களின் மகன்கள் ஸ்ரீதேஜ் (9), சன்விக் (7) ஆகிய 4 பேரும் புஷ்பா-2 படம் பார்க்க சந்தியா திரையரங்குக்கு வந்தனர். அதே சமயத்தில் அல்லு அர்ஜுனும் அங்கு வந்ததால் அவரை பார்க்க கூட்டம் அலைமோதியது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த போலீஸார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். இதில், ரேவதி, இவரது மகன் ஸ்ரீதேஜ் உள்ளிட்ட 3 பேர் தவறி கீழே விழுந்தனர். இவர்கள் மீது கூட்டம் ஏறி மிதித்து ஓடியது. இதில் காயம் அடைந்து உயிருக்கு போராடிய ரேவதி மற்றும் ஸ்ரீதேஜை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆந்திர மகிளா சபா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி உயிரிழந்தார்.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில், திரையரங்க நிர்வாகம், அல்லு அர்ஜுன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், திரையரங்க உரிமையாளர், மேலாளர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனா சிக்கட்பள்ளி காவல் துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அல்லு அர்ஜுனாவின் கைது தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.