நாசர்
நாசர்

கதாபாத்திரத்துக்கு உதவிய காளை மாடு! – நாசர் பகிரும் சுவாரஸ்ய அனுபவங்கள்!

நடிகர், இயக்குநர், தீவிர நாடக ஆர்வலர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் நாசருடன் எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி சென் அந்திமழைக்காக உரையாடியதிலிருந்து ஒரு சிறு பகுதி:

'ஆவாரம் பூ’, பரதன் சார் இயக்கத்தில் நாசர் நடித்த முதல் படம். அப்போது நடந்த கூத்து இது:

"படப்பிடிப்புக்கு முந்தைய நாள் காலை ஏழு மணிக்கு பரதன் சார் என்னை வரச்சொன்னார். சென்றேன். அவர் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் உள்ளுக்குள் அப்படியொரு சந்தோஷம். என்னை மேலும் கீழுமாகப் பார்த்த பரதன், பக்கத்திலிருந்த உதவி இயக்குநர் கரிமைப் பார்த்து, ”என்னடா கரீமு… இந்த கேரக்டருக்கு இப்படியொரு ஆளைக் கூட்டிவந்தா… நான் என்னடா பண்றது”. என என் முன்பே, “எவனையோ கூட்டி வந்திருக்கீங்க” என்றவர், கரீமிடம் “நீ ஒண்ணு பண்ணு, நாளைக்கு ரெயில்வே ஸ்டேஷனோ அல்லது பஸ் ஸ்டாண்டோ போ… நல்ல முடி நரைச்ச கூலி யாராவது கூட்டி வா… நான் நடிக்க வைக்கிறேன்”. என்றார். “இல்ல சார் நாளைக்கு சூட்டிங் ஸ்டார்ட் பண்ணியாகணும்” என்றார் கரீம். இதைக் கேட்டால் எனக்கு எப்படி இருக்கும்? நான் பலி ஆடு நிற்கிற மாதிரி நிற்கிறேன். திடீரென்று எழுந்தவர், மேக்கப் மேனைக் கூப்பிட்டு, கத்திரியை கையில் எடுத்து என் தலைமுடியை வேகவேகமாக கன்னாபின்னாவென்று வெட்டினார்.

முடியை வெட்டியவர், “மீசை உண்டோ” என்று கேட்டார். அந்த மேக்கப் மேன் பழைய மீசையெல்லாம் எடுத்துக்கொடுத்தார். எல்லாவற்றையும் தூக்கி அடித்துவிட்டு வேற கொண்டு வாங்க என்றார். பிறகு விக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதிலிருந்து கொத்தாக கொஞ்சம் முடியை வெட்டி, எனக்கு மீசைபோல் வைத்துப் பார்த்தார். மேக்கப் மேனிடம், “இதை மீசையாக்கு” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

அடுத்த நாள் ஏழு மணிக்கு ஸ்பாட்டுக்குப் போகிறேன். ஏகாந்தமான இடம். பெரும்பெரும் பாறைகள், பச்சை, சிலுசிலுவென காத்து அடிக்கிறது. ஷாட் எடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஒருவித தயக்கத்துடனும், முந்தைய நாள் நடந்த சம்பவத்தின் நினைவுகளுடனும் பரதனிடம் சென்று நின்றேன். தலையைத் தூக்கி ‘ம்ம்’ என்றார். “ஒரு இயக்குநரா… அந்த கேரக்டர் பத்தி நீங்க சொன்ன நல்லாருக்கும்.” என்றேன். "மாடுகூட மாடாய் இருந்து மாடாய்ப் போன மனுஷனானு” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். இந்த ஒரு வரி மயிர் கூசச் செய்தது.

சூட்டிங் ஸ்பாட்டில் இரண்டு காளை மாடுகள் இருந்தன. அவை என்னவெல்லாம் செய்கின்றன என்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். அதை அப்படியே என் கேரக்டருக்குள் கொண்டுவந்தேன். அதுதான் ஆவாரம் பூ.” என்று விவரித்து முடிக்கிறார் நாசர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com