
சில பத்து ஆண்டுகளுக்கு முன் தீ போல ஒருவர் என்ட்ரி கொடுத்து தமிழ் சினிமாவையே மாற்றினார். அவர் பெயர் ரஜினிகாந்த்! அதைப்போல தற்போது சில ஆண்டுகளாக ஸ்லிம்மாக ஒருவர் இளைஞர்களின் மிகப்பெரிய ஆதரவுடன் சினிமாவிற்கு வந்து கலக்கிக்கொண்டு இருக்கின்றார். அவர் பெயர் தான் தனுஷ்! அந்த வரிசையில் ரஜினி-தனுஷிற்கு பிறகு தற்போது பிரதீப் ரங்கநாதனை நான் பார்க்கின்றேன்" இவை தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா சமீபத்தில் பிரதீப் ரங்கநாதனைப் பாராட்டி சொன்ன வார்த்தைகள்!
ஆறடி உயரம், பார்த்ததும் பிடிக்கும் முகம், பளிச்சென்ற நிறம் இதெல்லாம் தான் முன்பெல்லாம் ஒரு படத்தின் கதாநாயகனுக்கு தகுதியாகக் கருதப்பட்டது. இதைக் காரணம் காட்டியே திறமை இருந்தும் பலர் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், மேலே சொன்ன 'கதாநாயகர்களுக்கான' இந்தத் தகுதிகள் இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் தற்கொலை வரை சென்றவர்கள் தனிக்கதை. இந்த 'கதாநாயகர்கள்' பிம்பத்தை உடைத்து சூப்பர் ஸ்டார் ஆனவர்களும் உண்டு. தியாகராஜ பாகவதர் முதல் ரஜினி, தனுஷ்வரை உருவகேலிகளையும் அவமானங்களையும் நிராகரிப்பு களையும் சந்தித்தே பலர் முன்னேறியிருக்கிறார்கள். இந்த வரிசையில் நடிகர் பிரதீப் ரங்கநாதனும் இணைந்திருக்கிறார்.
'கோமாளி' படம் மூலம் இயக்குநராக வெற்றி கொடுத்தாலும் 'லவ் டுடே' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாவது பிரதீப் ரங்கநாதனுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. உருவகேலிகளையும் அவமானங்களையும் சந்தித்ததாக நேர்காணல்களிலும் மேடைகளிலும் சொல்லி இருந்தார் பிரதீப்.
இதை எல்லாம் மீறி 'லவ் டுடே', 'டிராகன்' என 100 கோடி வசூல் செய்த ஹிட் படங்களைக் கொடுத்த பின்னரும் 'டியூட்' பட விழாவின்போது ஒருவர், "நீங்கள் ஹீரோ மெட்டீரியல் இல்லை. ஆனாலும் இத்தனை ரசிகர்கள் கிடைத்திருக்கிறார்கள். இது அதிர்ஷ்டமா அல்லது கடின உழைப்பா?" என கேள்வி எழுப்பியபோது, குறுக்கிட்ட நடிகர் சரத்குமார், "'ஹீரோ மெட்டீரியல்' என்பதற்கு எந்த விதிமுறையும் கிடையாது" என்றார்.
சிறுவயதில் இருந்தே உருவகேலிகளைச் சந்தித்த பிரதீப், மக்கள் தன்னை அவர்களில் ஒருவராகப் பார்ப்பதால்தான் ஹீரோவாக ஏற்றுக் கொண்டார்கள் என்கிறார். 'அடுத்த ரஜினியா பிரதீப்?' என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கும் சமயத்தில் 'டிராகன்' படத்தில் ரஜினியின் ஸ்டைல், மேனரிசத்தைப் பின்பற்றியிருந்த பிரதீப்பை ரஜினியே நேரில் அழைத்துப் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினி, தனுஷ், சிம்பு என பலரின் கலவையாகவே திரையில் பிரதிபலிக்கிறார் பிரதீப் எனும் விமர்சனம் முன்வைக்கப்படும் நிலையில் ஹீரோவாக அவரது தொடர் வெற்றி ரஜினியின் இடத்திற்கு அவரை கொண்டு செல்லுமா என சினிமா விமர்சகர் / ஊடகவியலாளர் பிஸ்மியிடம் கேட்டோம், "இளம் தலைமுறை நடிகர்களில் பிரதீப்பின் வளர்ச்சி நிச்சயம் பிரமிக்கத்தக்க வகையிலும் மற்ற நடிகர்களை காட்டிலும் வேகமாகவும் உள்ளது. அதற்காக, அவரை அடுத்த ரஜினி, நவீன ரஜனி என்று சொல்வதை இப்போது ஏற்றுக்கொள்ள முடியாது. முன் சிவகார்த்திகேயன் வளர்ச்சிதான் அசுர வளர்ச்சியாக இருந்தது.
ஆனால், அவரை விட பிரதீப் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார். உதாரணத்திற்கு பிரதீப்பின் 'டியூட்' படம் வெளிநாடுகளில் ரூ. 13.50 கோடிக்கு வியாபாரம் ஆகி இருக்கிறது. அதுவே தனுஷின் அதிகபட்ச விற்பனையாக 'இட்லி கடை' படம் ரூ.12 கோடிக்குதான் வியாபாரம் ஆகி இருக்கிறது. மூன்றாவது படத்திலேயே பிரதீப்பிற்கு இவ்வளவு பெரிய வியாபாரம் என்பது சாதாரணம் கிடையாது.
இதற்காக இவரை அடுத்த ரஜினி கமல் என்ற என்பதை ஏற்க முடியாது. ஏனெனில் ஒரு நடிகர் வெற்றி பெற்றால் அவரை ரஜினி, விஜய்யுடன் ஒப்பிட்டு அடுத்து அந்த இடத்திற்கு அவர் தானா என்ற பேச்சு எழுவது இங்கு வழக்கம். பிரதீப் இன்னும் அடுத்த ஐந்து வருடத்திற்கு எப்படியான கதைகளை தேர்வு செய்கிறார், எப்படி வெற்றி படங்களை கொடுக்கிறார் என்பதை பொறுத்துதான் இதை தீர்மானிக்க முடியும். இளம் தலைமுறையினரை கவர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து லவ் சப்ஜெக்ட் மட்டுமே பிரதீப் தேர்ந்தெடுத்து நடித்தாலும் ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு சலித்து விடும். அடுத்து ஆக்ஷன் சப்ஜெக்ட் நோக்கி நகருகிறேன் என்று பிரதீப் சொன்னதாகக் கேள்விப்படுகிறோம். காத்திருந்து பார்க்கலாம்" என்றார்.
சினிமா விமர்சகர் கேபிள் சங்கர், "முதலில் நாம் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். பிரதீப் ரங்கநாதன் நடிகராக மட்டும் வெற்றி் கொடுக்கவில்லை. இயக்குநராகவும் 'கோமாளி', 'லவ் டுடே' என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெற்றி கொடுத்திருக்கிறார். நடிகர்- இயக்குநர் என இரட்டை சவாரியில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார், அவரை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு இதுவரை நஷ்டம் இல்லை என்பதும் உண்மை. நடிகராக மூன்று படங்களும் இயக்குநராக இரண்டு படங்களும் இயக்கியிருக்கும் பிரதீப்பையும் ரஜினியையும் ஒப்பிட முடியாது. ஏனெனில் ரஜினி இயக்குநர் பட்டியலில் வரமாட்டார். அதுவும் இல்லாமல் ரஜினியின் சினிமா பயணமும் மக்கள் அவரை வைத்திருக்கும் இடமும் வேறு.
ஒரு விஷயம் கவனித்துப் பார்த்தால் புரியும். நடிகர் ரஜினியை போல பிரதியெடுக்க முயன்ற பலரும் தோற்றுதான் போயிருக்கிறார்கள். பிரதீப் ரஜினியின் ஸ்டைலை பிரதியெடுக்கிறார் என்றால் அவர் அதை மட்டும் செய்யவில்லை. ரஜினி, எஸ்.ஜே. சூர்யா என பல நடிகர்களின் கலவையாகதான் அவர் இருக்கிறார். நடிகராகவும் அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அதனால், இப்போதைக்கு அவர் ரஜினி இடத்தை பிடிப்பார் என்பதை சொல்ல முடியாது. இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ளும் விதமாக அவர் அடுத்தடுத்து தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் தான் அதை முடிவு செய்யும்" என்றார்.
திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது: "பாக்யராஜ் படங்களை கவனித்தால் அவர் ஹீரோவாக தன்னையே பகடி செய்து கொண்டு நடிப்பார். அந்த வழியைத் தான் பிரதீப் ரங்கநாதனும் தன் படங்களில் செய்கிறார். ரஜினி இடத்திற்கு பிரதீப் மட்டுமல்ல, வளர்ந்து வரும் இளம் நடிகர்களான அசோக் செல்வன், ஹரிஷ் கல்யாண் என யார் வேண்டுமானாலும் வரலாம். சிவகார்த்திகேயன் சினிமா துறைக்கு வந்த புதிதில் அவர் நிச்சயம் பெரிய இடத்திற்கு வருவார் என்று கணித்தேன். ஆனால், இப்போதுள்ள நடிகர்களை அப்படி கணிக்க முடியவில்லை. பிரதீப் இன்னும் பத்து படங்கள் நடித்தால்தான் என்னவென்று தெரியும்."
இப்போதைக்கு பிரதீப்புக்கு எதிர்காலம் பிரகாசம் என்றும் மட்டும் சொல்லலாம்!