
தமிழ் பத்திரிகையாளர்களுடன், அசல் படத்துக்குப் பிறகு, சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அன்னம் தண்ணி புழங்காத அஜித், கடந்த இரு மாதங்களில் இரு வட இந்தியப் பத்திரிகைகளுக்கு மட்டும் மனம் திறந்திருக்கிறார். அப்பேட்டிகளில் அவர் சினிமா குறித்து மூச் விடக்கூட விரும்பவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
காதலின் பித்தநிலை என்பார்களே அது கார் ரேஸ் குறித்து அஜித் பேசும்போது அந்த பித்த நிலைதான் வெளிப்படுகிறது.
“கார் ரேஸ் என்றால் விபத்துகள் நிகழ்வதும் காயங்கள் ஏற்படுவதும் படு சகஜம். அப்படி நிகழும்போது என் மனைவி ஷாலினியைத் தவிர எல்லோருமே பதறியடித்து உங்களுக்கு கார் ரேஸ் வேண்டாம். உடனே சினிமாவுக்கு ரிடர்ன் ஆகி அதில் கவனம் செலுத்துங்கள் என்று ஆலோசனை சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் அதே சினிமாவில் அடிபட்டு, காயங்கள் ஏற்பட்டு என் உடம்பில் சர்ஜரி நடக்காத பாகங்கள் ஒன்று கூட பாக்கியில்லை. அப்போது இதுபோன்ற அட்வைஸ்கள் வந்ததில்லை. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை சினிமாவில் பணம் கொட்டுகிறது. எனவே அடிபடலாம்.
இதற்கும் முற்றிலும் மாறாக என் மனைவி ஷாலினி இந்த சின்னச் சின்ன விபத்துகளை ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்கிறார். அவர் ஒருநாளும் என்னை டிஸ்கரேஜ் செய்ததேயில்லை. ’கவனமாக கார் ஓட்டு’ என்பதைத் தாண்டி ஒருநாளும் என் கார் ரேஸ் குறித்து அட்வைஸ் செய்ததே இல்லை.
இன்னொரு பக்கம் என்னுடைய கார் ரேஸ் ஆர்வத்தை தற்காலிக ஆர்வமாக சிலர் பார்க்கிறார்கள். இங்கே என்னுடன் கார் ரேஸில் கலந்துகொள்வர்களில் சிலருக்கு வயது 65க்கும் மேல். அவர்கள் இன்னும் 5 ஆண்டுகளுக்கும் மேல் நின்று விளையாடக்கூடியவர்கள். என் மனநிலையும் அதுதான். இப்போதுதான் 54ல் காலடி எடுத்து வைத்திருக்கிறேன். இன்னும் குறைந்தது 15 ஆண்டுகளுக்கு கார் ரேஸ்களுக்காக என்னை முழுமையாக ஒப்படைப்பேன்.” என்கிறார் அழுத்தமாக.
(அட்டைப் படம் நன்றி: ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா)