புஷ்பா 2 சிறப்புக் காட்சி பார்க்க வந்தபோது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த சம்பவத்தை முன்வைத்து நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 6 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 படத்துக்கு சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய மகன் தேஜ் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அல்லு அர்ஜுன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்த ரேவதி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்குவதாக அல்லு அர்ஜுன் அறிவித்தார்.
இதனிடையே கடந்த 13ஆம் தேதி அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதைத் தொடர்ந்து, அம்மாநில சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ரேவந்த் ரெட்டி, நடிகர் அல்லு அர்ஜுன் வருகை தான் கூட்ட நெரிசலுக்கு காரணம் என குற்றம் சுமத்தினார்.
இந்த சூழலில் நேற்று உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பு அல்லு அர்ஜுன் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அவர் வீட்டிலிருந்த பூந்தொட்டிகளைச் சேதம் செய்தனர். அதோடு கற்கள் மற்றும் தக்காளியை கொண்டு வீட்டினை தாக்கினர். அவரது வீட்டின் சுற்றுச்சுவர் மீதேறியே போராட்டக்காரர்கள், அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காலை அவர்களுக்கு நகர நீதிமன்றம் ஒன்று ஜாமீன் வழங்கியது. அவர்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.10 ஆயிரமும், இரண்டு பேர் உத்தரவாதமும் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மூன்று நாட்கள் இதற்கு அவகாசம் வழங்கியுள்ளது.
இதற்கிடையில் தாக்குதலில் ஈடுபட்டு ஜாமீன் பெற்றவர்களில் ஒருவரான ஸ்ரீநிவாச ரெட்டி முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகளும், அல்லு அர்ஜுன் ரசிகர்களும் அரசியல் பழிவாங்கலால் அல்லு அர்ஜுன் நெருக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி வருகின்றனர்.