நடிகர் பாலா
நடிகர் பாலா

“என்னை வாழவைத்த சென்னை…” ஓடோடி உதவி செய்யும் நடிகர் பாலா!

மிக்ஜம் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, நடிகர் பாலா ரூ. 5 லட்சம் செலவில் நிவாரணப் பொருட்களையும் பண உதவிகளையும் செய்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் நடிகர் பாலா. தற்போது வெள்ளித்திரையிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் செய்யும் காமெடிக்காக மட்டுமில்லாமல் அவரின் சேவைக்காகவும் மக்கள் மனதில் இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளார்.

தன் வருமானத்தின் ஒரு பகுதியை ஒதுக்கி பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறார். சமீபத்தில், மலைவாழ் மக்களுக்காக தன் சொந்த செலவில் 4 ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்தார்.

இந்த நிலையில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு பாலா தன் நண்பர்களுடன் சேர்ந்து ஓடோடி உதவிக் கொண்டிருக்கிறார்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு, ரூ. 2 லட்சம் செலவில் பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு தலா ரூ. 1,000 நிவாரணமாக வழங்கினார்.

அந்தவகையில், மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ரூ. 3 லட்சம் செலவில் இன்று நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளார்.

பள்ளிக்கரணையில் உள்ள 120 குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசியும், துரைப்பாக்கம் பல்லவன் நகரில் உள்ள மக்களுக்கு நைட்டி, லுங்கி உள்ளிட்ட ஆடை மற்றும் உதவித் தொகையை வழங்கியுள்ளார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com