தமிழ் சினிமா வரலாற்றில் - முதல் பேசும் படமான 'காளிதாஸ்' 1931இல் வெளியான போதே தமிழர்களின் கலைவடிவம் வெறும் பொழுது போக்காக மட்டும் பிறக்கவில்லை, அது ஒரு குறிப்பிட்ட கருத்தியல், அரசியலாக செயல்படத் தொடங்கியது.
திரைப்படம் தோன்றுவதற்கு முன்பே. புராணம் மற்றும் பக்தி இலக்கியங்களே மேடை நாடகங்களாக மாறி தமிழ்நாட்டின் கிராமங்களை முழுமையாக ஆக்கிரமித்திருந்தன. அதன் தொடர்ச்சியாக 1931 முதல் 1939 வரையிலான காலகட்டத்தில் வெளியான சம்பூர்ண ராமாயணம், ஹரிச்சந்திரா, சத்தியவான் சாவித்திரி, பிரகலாதா, வள்ளி திருமணம், கோவலன், சீதா கல்யாணம், தசாவதாரம், மேனகா, ராஜாம்பாள், டம்பாச்சாரி, தியாகபூமி போன்ற படங்கள் வழி - புராணம், மனுதர்மம் வைதீக வழிமுறைகளே தீவிரமாக பரப்பப்பட்டு வந்தன. கலை இலக்கியம் மற்றும் பண்பாட்டு செயல்வழி நகர்வுகள் யாவும் பட்டியலின மற்றும் பூர்வபெருங்குடி தமிழ்மக்களுக்கு ஒரு 'விலக்கப்பட்ட கனியாக' 1976 வரை நீடித்தது. இத்தகையதொரு அடக்குமுறைச் சூழலில் (1941)பிறந்த கலைஞன் தான் இயக்குநர் பாரதிராஜா.
1940- 1970 களின் தொடக்கத்தில் தமிழ்த் திரைப்படம் நாடகத் தன்மையிலிருந்து விடுபட்டு சமூக உணர்வும் நடிப்பு மையமும் கொண்ட புதிய நிலைக்கு நகர்ந்தது. 50 - 60 களில் பராசக்தி, பாசமலர், களத்தூர் கண்ணம்மா, ரத்தக்கண்ணீர் போன்ற பல படங்கள் வழி திரைக்கலை என்பது இசை, நடனம், நடிப்பு, சமூகக் கருத்துகள், கலாசாரம் என்ற படிநிலைக்கு நகர்ந்தது. திராவிட இயக்கங்களின் எழுச்சி வசனங்கள் வழியே புதிய அலைகளை உருவாக்கிய போதிலும், திரையின் காட்சி மொழி அப்போதும் ஸ்டூடியோவுக்குள் எதார்த்தத்துக்கு எட்டாத திரைமேடை நாடகங்களாகவே தவித்துக் கொண்டிருந்தது.
1977இல் வெளியான 16 வயதினிலே திரைப்படம் - அக்காலம் வரை ஆதிக்கம் செலுத்தி வந்த உயர்வர்க்க ஏகாதிபத்திய சினிமாவின் திரைமேல் ஒரு பெருமின்னல் பிளவாக உடைந்து நிலத்தை மீட்டது. தமிழ் சினிமா வரலாற்றை பாரதிராஜாவுக்கு முன்- பாரதிராஜாவுக்குப் பின் எனத் துல்லியமாகப் பிரித்து, காலம் இந்த நிலத்தின் பூர்வ அடையாளங்களை ஒரு கலைஞன் வழி, தன்னைத் தான் காண்பதுபோல கண்டுகொண்டது.
தமிழ் சினிமா அதுவரை பழகியிருந்த மூச்சுத் திணறல்மிக்க தன்மையிலிருந்து விடுபட்டு, எளிமையான மூச்சும் பேச்சும் கொண்டு இயங்கத் தொடங்கியது. நிலத்தின் ஏற்றத் தாழ்வுமிக்க எதார்த்த நிலைகளை, மனித மனங்களின் ஈரத்தை, சாதிய படிநிலைகளின் சிக்கல்களை, கிராமங்களில் சிக்குண்ட சமூக முரண்களை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை எள்ளளவும் ஒளிவுமறைவின்றி காட்சிப்படுத்தி தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கைக்குரிய பொற்காலத்தைப் படைத்தார் பாரதிராஜா. அவர் உருவாக்கிய இந்த புத்தொளி மிக்க புதிய பாதையில் பல இளம் இயக்குநர்கள், நடிகர்கள், கவிஞர்கள் சாரை சாரையாக தமிழ் சினிமாவை அலங்கரிக்க இறங்கினர்.
‘வேதம் புதிது' - ‘காதல் ஓவியம்' போன்ற படங்களில் அவர் வெளிப்படுத்திய சாதி ஒழிப்பு கருத்தாக்கங்கள் அக்காலத்தில் சமூகத்தில் ஒரு பெரும் தத்துவார்த்த எழுச்சியை உருவாக்கிய படைப்புகள் ஆகும். காங்கிரஸ் பேரியக்கத்தில் தன் தந்தை பயணப்பட்ட காலத்தில் அரசியல் அறிவு இயக்குநருக்கு கைவந்தாலும்- இடதுசாரி சிந்தனை கொண்ட பல இயக்க தோழர்கள் குறிப்பாக பாவலர் வரதராஜனின் மேடைப் பாடல்களில் ஈர்ப்புக் கொண்டு தன்னை வளர்த்துக் கொண்டவர், தொடர்ந்து தன் இலக்கிய வாசிப்பில் மேடை நாடகங்கள் வழியாக கலைப் பயணத்தை கடினமான வறுமைப் பிடியில் தொடங்கி இருக்கிறார். இந்த வறுமையும் மக்கள் மீதான அன்பும் சமூக அக்கறையுமே அவரைத் தன் நெஞ்சில் கிராமங்களைச் சுமந்து நகரம் நுழைய வழிவகுத்திருக்கிறது.
அப்போதைய அதிகார மையங்களை கலைவழியாகத் தகர்க்க ஒரு பெரு மன வலிமை தேவை. அது எப்படி சாத்தியமாகியது? அதுவரை சலனப்படங்கள் நகர்ந்து -பேசும் படங்கள் வந்திருந்தாலும், அவை நாகரிக அசல் உலகை தொடாமல் நாடகமயமாக இருந்து வந்தன. இந்நிலையில் திரைக்குள் உலகத்தரமிக்க எதார்த்த சினிமாவை படைத்துப் பார்க்கும் வல்லமை எப்படி வாய்த்திருக்கும்? ஒரே ஒரு சூத்திரம் தான், நாம் பிறந்த மண்ணையும் மக்களையும் எந்த அளவுக்கு நேசிக்கிறோம் என்ற அளவுதான் கலை. ஆம் அன்பே ஆக்கும் கலை.
ஒரு தனிமனிதச் சிந்தனை பண்பாட்டுத் தளத்தில் பெருவெடிப்பை கூட ஏற்படுத்தும், ஏன் அதிகாரத்தைக் கூட கைமாற்றும். இத்தகைய ஒரு கலகக் குரலாக எளிய மக்களின் வாழ்வில் அரசியல் விழிப்புணர்வைப் புகுத்தியவை இயக்குநர் பாரதிராஜாவின் படைப்புகள் எனலாம்.
பொருளாதார பாதுகாப்பின்மை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் சிக்கல்கள், மேலும் குடும்ப அமைப்புகள் தரும் உறவுச் சிக்கல்கள் ஆகியவைதான் சகல வன்முறைகளுக்கும் அடிப்படை என்பதை உணர்ந்து கூர்மையாக வறுமையைப் படம்பிடித்து எளிய மக்களை பேச வைத்தது அவரது யுக்தி. மேலும் அழகியல் என்பது அழகிய உருவங்கள் அல்ல- நேயமான மனங்கள், உண்மையான முகங்கள் என்று ஊர்களின் உயிரைக் காட்டியவர்.
ஒரு இனத்தின் விடுதலை- ஒரு நிலத்தின் மையமான மரபுகளோடு- பண்பாட்டுக் கலைவழி கலாசார விழுமியங்களோடு தொடர்புடையது என்பதை ஒரு மகத்தான கலைஞன் அறிவான். ஒவ்வொரு சொல்லும்- ஒவ்வொரு செயலும் அரசியலோடு தொடர்புடையது என்பதையும், எதனால் நாம் ஆக்கிரமிக்கப்படுகிறோம், எதற்காக நம் கைகள் கட்டப்படுகின்றன என்ற சிந்தனை நுட்பத்தோடும் கலைப் பயணத்தைதொடங்கும் ஒருவன்- காலத்தை உறைய வைக்கும் தன்மை கொண்ட சக்திவாய்ந்த பிதாவாக பரிணமிக்கிறான். காலம் தன்னைத் தானே புதுமையாக்கி நிலைக்க - கலையாகச் சிலரை படைக்கும் என்பதன் கால சாட்சிதான் இயக்குநர் பாரதிராஜா.
அவருடன் 2001 முதல் 2015 வரை பதினைந்து ஆண்டுகள் களத்தில் உழைத்திருக்கிறேன். இதில் பல்லாயிரக்கணக்கான நினைவுகள் உள்ளன. அவர் பகிர்ந்த கலை உலக நினைவுகளும் ஏராளம், அரசியல் ரீதியான உரையாடல்களும் அதிகம், அரசியல் தலைவர்களுடனான குறிப்பாக எம். ஜி.ஆர்,, செல்வி ஜெயலலிதா, கலைஞர் ஆகியோருடன் கொண்டிருந்த அன்புணர்வின் பகிர்வுகள் அதிகமாக என்னுள் இருக்கின்றன. அவை இந்த மண்ணின் மக்கள் மீது எவ்வளவு நெருக்கமான நேசப் பிணைப்போடு, கடமை உணர்வோடு, கலைஞனுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை உணர்வோடு, காலச் சூழலுக்கான அரசியல் ரீதியாக படங்களை உருவாக்கினார் என்பதன் தொடர்புடையதாகவே இருந்தன.
இயக்குநருக்கு மிக மிக நெருக்கமான ஆத்ம நண்பராக எம்.ஜி.ஆர். இருந்த காலம், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதும் தேசியத் தலைவர் பிரபாகரன் மீதும் இயக்குநருக்கு ஈர்ப்பும் தமிழீழ விடுதலைக்கான கனவும் உயிர்பெற்றதை அடிக்கடி இயக்குநர் பகிர்வதுண்டு. (இயக்குநர் பகிர்ந்த நினைவுகள் பல நூல்களாக எழுதும் அளவு பல அரசியல் இரகசியங்களும்- உண்மைகளும் நிரம்பியவையாக எனக்குள் இருக்கின்றன).
செல்வி ஜெயலலிதா அவர்களை கதாநாயகியாகக் கொண்டு படம் இயக்க அவரிடம் கதை சொல்லச் சென்றதையும் அதன்பிறகான அரசியல் நகர்வுகளில் முதல்வர் ஜெயலலிதா அவர்களே இயக்குநரை அரசியலுக்கு வரும்படி பலமுறை அழைத்த தருணங்களையும் நான் அருகே இருந்து கேட்டிருக்கிறேன். அவர் அரசியலுக்கு வர மறுத்து முதல்வர் ஜெயலலிதாவிடம் கூறிய வரிகள் எக்காலத்திலும் மறக்க முடியாத நினைவு எனக்குள்.
“நான் இந்த மண்ணையும் மக்களையும் என்னைவிட அதிகமாக நேசிக்கிறேன். எனக்கு பல பிறவிகள் மீது நம்பிக்கை இல்லை. ஆகவே உயிரோடு இருக்கும்போதே மக்களுக்கான பல அரசியல் நுட்பமிக்க படைப்புகளை கொடுக்க விரும்புகிறேன். ஒரு கலைஞன் தான் பெற்றெடுக்காத பிள்ளைகளுக்கும் பெருஞ்சொத்தாகக் கலையைச் சேர்த்து வைக்கிறான். என்னால் பொய்யாக வாழ முடியாது. யார் கையிலும் இருந்து உழைப்பற்ற உபரியான லஞ்சங்களைப் பெறவே முடியாது, பொய் சொல்லத் தெரியாத வெள்ளை மனம் அரசியலுக்கு உதவாது. கொஞ்சம் இது சுயநலமாகக் கூட தோன்றலாம், ஆனால் இத்தகைய என் பண்புகள் கொண்டு அரசியல் செய்யக் கூடாது. மக்களைக் காக்கும் பணி இறைத்தன்மைக்கு ஒப்பானது. அதற்கு நான் சினிமாவை விட மேலதிகக் கடமை உணர்வோடு என்னை அர்ப்பணித்தாக வேண்டும். வீட்டுக்கும் குடும்ப அமைப்புக்கும் தலைமை கொள்ளவே பலவிதத்தில் சிக்கல் இயல்பாக சிதறிக் கிடக்கையில், நாட்டுக்கே தலைமை ஏற்கும் கடமை எனக்கு வானத்தை எதிர்கொள்ளும் சவாலானது. இதற்குக் கை சுத்தமும் மனச்சுத்தமும் கொண்ட கக்கன், நல்லகண்ணு போன்றோர் தான் தேவை என்பது என் உறுதி. உங்கள் அழைப்பை நான் மதிக்கிறேன் ஆனால் என்னை மன்னித்து விடுங்கள். நான் எளிமையான கலைஞனாக மக்களோடு மக்களுக்காக வாழ்ந்துவிட்டுப் போகிறேன், எனக்குப் பதவி மீதோ அதிகாரத்தின் மீதோ எந்த ஒரு ஈர்ப்பும் இல்லை" என்றார். ஜெயலலிதா ஒரே ஒரு புன்னகையோடு பதில்பேச முடியாமல் மெளனமானார்.
இத்தகைய மக்கள் செல்வாக்கும், அரசு ஆதரவும் கூடியிருந்த அச்சமயம் ஈழத்தைக் கரடுமுரடான போர்க்காலம் சூழ்ந்திருந்தது. இயக்குநருக்கு அரசியலில் ஒரு தீவிரம் ஏற்பட்டது உண்மைதான் ஆனால் அது பதவி அதிகாரம் நோக்கி அல்ல, உணர்வுப்பூர்வமான விடுதலை வேண்டி அந்த மனம் கனன்று கொண்டே இருந்தது. பல போராட்டங்களை குறிப்பாக ராமேஸ்வரத்தில் தமிழீழம் மலர பெரும் மாநாடு ஒன்றை நடத்தினார். எரிமலைத் தனலாய் களத்தில் திரிந்த காலம் அதுவே, ஒருசேர தீவிர இலக்கியம், தீவிர சினிமா, கருத்தியல்மிக்க அரசியலிலும் உழன்றது அக்காலகட்டமாக எனக்கும் அமைந்தது. முத்துக்குமார் என்ற இளைஞன் தீக்குளித்த நாளில் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு ஓயாது அழுத இயக்குநர் கண்ணீரில், நான் ஒரு அரசியல்வாதியை அல்ல மனிதநேயமிக்க நற்கலைஞன் இந்த மண்ணின் மீதும், தமிழ் மக்கள் விடுதலை மீதும் கொண்டிருந்த ஊழிப்பெருக்கான அன்பை அருகே கண்டேன். ஒரு தாய்ப்பறவை ராட்சத எந்திரத்தின் முன் உயிர்ததும்பும் தன் கருமுட்டைகளைக் காக்கத் தவிப்பது போல மாரடித்து சுழன்று கொண்டிருந்ததை நான் கண்டேன்.
என் 25 ஆண்டுகால திரை உலக பயணத்தில் இயக்குநர் பாரதிராஜா போல் அத்தனை முதல்வர்களோடும் பயணப்பட்டு, தமிழ் நாட்டு மக்களுக்காகவும் தமிழ்த்திரைக் கலைஞர்களுக்காகவும், தமிழீழ மக்களுக்காகவும் போராடி பல நன்மைகளைப் பெற்றுத் தந்த எந்த இயக்குநரும் இல்லை. தன் சக இயக்குநர்களையும் தன்னோடு பணியாற்றிய சகல மனிதர்களையும் உணர்வுபூர்வமான அன்புகொண்டு வழிநடத்திய மாமனிதர்கள் எவரும் இல்லை.
பலர் இயக்குநரை சாதிரீதியான வெறியராக சித்தரிப்பர். ஆனால் அது உண்மை அல்ல. தமிழ்த் திரைப்படங்களில் இன்றளவும் எல்லா சமூகத்தினரையும் படங்களில் அறிமுகப்படுத்தி பெருங்கலைஞர்களாக உயர்த்தி பெருவாழ்வு வாழ வைத்திருக்கிறார். உயர்சாதி ஆதிக்கம் மட்டுமே இருந்த திரையில், நம் நாட்டின் சமூகக் கட்டமைப்பில் இருக்கும் ஏற்றத் தாழ்வுமிக்க அமைப்பை- அறிமுகம் செய்யப்படாத பட்டியலின மற்றும் இதர சமூக மக்களே இல்லை எனக் கூறும் அளவு- காட்சிப்படுத்தி இங்கே உடைபட வேண்டியது சாதி என்று உழைத்தவர் பாரதிராஜா .
அவர் வெறுமனே படங்களை இயக்கியவராக மட்டுமே வாழாமல், தன் அகத்தே நம் நாட்டை பெறும் பற்றோடு கலைவழியாக அணைத்துக்கொள்ளும் தாயுமானவராக வாழ்ந்தார் என்றே கூற வேண்டும். இன்றைக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும், கலைத்துறையின் எழுச்சிமிக்க மாற்றத்திற்கும், அரசியலில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பலவற்றுக்கும் கூட இயக்குநர் பாரதிராஜாவின் திரைக்கலை அரசியல் -பண்பாட்டு கலாசார அரசியல், ஒரு நீட்சிமிக்க பெரும்பங்கு.
இந்தியாவில் மத அரசியலும், சாதி அரசியலும் புகுத்திவிட்ட பெரும் பிரச்னைகள் பலவற்றில் இருந்து, உயர்சாதி ஆதிக்கத்தில் இருந்து தமிழ் இலக்கிய உலகம் 95% வென்றுள்ளது. தமிழ் திரைக்கலையில் இந்த ஆதிக்கத்தை 70% தகர்க்க, பாரதிராஜா என்ற தனி கலைஞனே காரணமாக இருந்திருக்கிறார், பாரதிராஜாவின் திரை இயக்கமும், பொதுவாழ்வில் பல அரசியல் நகர்வுகளும் இந்திய மதவாத அரசியலின் அடிமுடிச்சை அவிழ்க்கும் ஆகச்சிறந்த மந்திரச் செயல்பாடு என்பதை காலம் தன் வரலாற்றில் குறித்துக் கொண்டது. நிலம், நிலத்தில் ஊறிய தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம், தொன்ம மரபுகள், குலதெய்வ வழிபாடுகள், இவற்றை எளிய மக்களின் வாழ்வியலாக காட்சிப்படுத்தியதில் திரிக்கப்பட்ட வரலாற்றின் தடங்கள் உடைக்கப்பட்டன.
இன்னும் அடையாமல் மீதமிருக்கும் அதிகாரத்தையும் மிகக்குறுகிய காலத்திலேயே அரசியல் வழி தமிழ்ப் பெருங்குடி மக்கள் அடைவார்கள். என் இனிய தமிழ் மக்களே என்ற பாசத்திற்குரி்ய பாரதிராஜா கைமாற்றித் தந்த கலை, மக்களை வாழ்விக்கும் பேராயுதம்.