அரசு முன்னெடுக்கவேண்டிய எத்தனையோ செயல்பாடுகள் பெண்டிங்கில் கிடக்கும் நிலையில் தனக்கு வேண்டப்பட்ட திரைத்துறையினரை தொடர்ந்து சந்தித்து முதல்வர் நேரத்தை வீணடித்துவருகிறார் என்கிற விமர்சனங்கள் கிளம்பியுள்ள நிலையில் நடிகர் விஜய் சேதுபதியும் இயக்குநர் சேரனும் திரைத்துறை குறித்த தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து விஜய்யை தங்கள் பங்குக்கு உசுப்பேற்றிவருகிறார்கள்.
சமீபத்தைய பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் முதல்வர் விஜய்க்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்த நடிகர் விஜய் சேதுபதி, தமிழக திரைத்துறையை காப்பாற்ற அரசே சொந்தமாக ஓ.டி.டி தளம் தொடங்க வேண்டும். மட்டுமன்றி நீண்டகாலமாக உயர்த்தப்படாமல் இருக்கும் திரையரங்க கட்டணங்களையும் உயர்த்தவேண்டும் என்று இரு கோரிக்கைகள் வைத்தார்.
விசேவின் இக்கோரிக்கைகளை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த இயக்குநர் சேரன், … அரசு OTT நல்ல விசயம்.. அதனால் திரைத்துறையில் சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்களுக்கு தங்கள் படங்களை வெளியிட வாய்ப்புகள் கிடைக்கும்.. மத்திய அரசு Waves OTT என்ற தளத்தை உருவாக்கி இருக்கிறது.. அது வெளியில் தெரியவில்லை.. அதிலும் நமது படங்களை வெளியிட முடியும்.. தமிழக அரசு தமிழ் திரைப்படங்களுக்கு என ஒரு வியாபார தளம் உருவாக்குவது என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக, நிறைய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உருவாக , புதிய முயற்சிகள் தொடர புதிய பாதையாக அமையும்... ஆனால் திரையரங்க கட்டணங்கள் ஏற்கனவே சாமானியனால் சமாளிக்க முடியாத உயரத்தில் இருக்கிறது.. பெரிய படங்களுக்கு பெரிய நடிகரின் படங்களுக்கு இந்த கட்டண உயர்வு என்பது லாபம் தரும்.. ஆனால் 70% சிறிய பட்ஜெட் படங்கள் வருவதால் கட்டண உயர்வு என்பது சிறிய படங்களுக்கு சாதகமாக இருக்காது.. ஏற்கனவே நிறைய படங்கள் திரையரங்கத்தில் ஆள் வரவில்லை என்ற காரணத்தால் முதல் காட்சி ரத்தாகி இருக்கிறது.. எனவே கட்டணம் உயர்த்தினால் சிறு படங்கள் அதிகமாக பாதிக்கப்படும். மாற்றாக முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் அரசு திரையரங்கம் உருவாக்க திட்டமிட்டார்கள்.. அதை செயல்படுத்தினால் அரசுக்கும் லாபம் வரும் நிறைய படங்கள் பிழைக்கும்.. இது முதல்வருக்கான கோரிக்கை மட்டுமே.. என்று பவ்யமாக பதிவிட்டிருக்கிறார்.
இருக்கிற பிரச்சினைகளுக்கு மத்தியில் முதல்வர் விஜய், இந்த சாதாரண கோரிக்கைகளை கண்டுகொள்வாரா? என்பது கேள்விக்குறி.