ரிலீஸ் சிக்னல் கிடைக்காமல் கோடம்பாக்கத்து ரயில்வே ஸ்டேசனில் 3 வருடங்களாக காத்திருந்த மிஷ்கினின் ‘ட்ரெயின்’ படம் ஒருவழியாக டிசம்பர் 4 அன்று திரையரங்குகளை நோக்கிப் பயணத்தை தொடங்கிவிடும் போல தெரிகிறது.
விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் எஸ். தாணு தயாரிப்பில் மிஷ்கின் இசையமைப்பாளராகவும் மிரட்ட உள்ள இப்படம் தொடர்பான அறிவிப்பு 2023 நவம்பரில் வெளியானது.
2023 டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கியது.
2024 வருட மத்தியில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகத் தகவல்கள் வெளியாகின. அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட படம் தொடர்ந்து தள்ளிப்போனது.
இப்படம் மற்றும் இவரது பிசாசு2’ படங்களின் தாமதம் குறித்து விரக்தியின் உச்சத்துக்கே போன மிஷ்கின் விழா ஒன்றில் பேசுகையில் தனது கனவில் இறந்துபோன இரு யானைக்குட்டிகள் வந்ததாகவும் அக்கனவு குறித்து குறுக்கும் நெடுக்குமாக யோசித்தபோது அந்த இறந்த யானைக் குட்டிகள் இரண்டும் காத்திருப்பில் இருக்கும் தனது இரு படங்கள் தான் என்று பேசினார்.
அக்கனவில் இறந்த இரு யானைக் குட்டிகளின் ஒன்று இப்போது உயிர் பெற்று எழவிருக்கிறது போல் தெரிகிறது.
கடைசியாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 4 அன்று இப்படம் ரிலீஸாகும் அறிகுறிகள் அதிகம் தெரிய ஆரம்பித்துள்ளன. பட நாயகன் விஜய் சேதுபதியும், இயக்குநர் மிஷ்கினும் சில யூடியூப் தளங்களுக்கு பேட்டி தர துவங்கியிருப்பதே அந்த அறிகுறி.
அதே சமயம், இப்படத் தயாரிப்பாளர் தாணு நாயகன் விஜய் சேதுபதி, இயக்குநர் மிஷ்கின் தொடங்கி பலருக்கு சம்பள பாக்கி வைத்திருப்பதாகவும் அதை அவர்கள் மனதார விட்டுக்கொடுத்தால் மட்டுமே படம் பிரச்சினைகளின்றி ரிலீஸாகும் என்றும் நம்பகமான தகவல் ஒன்றும் நடமாடுகிறது.