தனது மகனின் அடுத்த படத்துக்கு கால்ஷீட் தராமல் இழுத்தடித்த நடிகர் சிவகார்த்திகேயனை கங்கை அமரன் பொதுவெளியில் வெளுத்தெடுக்க, தந்தையை விட்டுக்கொடுக்காமல் சிவகார்த்திகேயனை வெங்கட் பிரபு ஆசுவாசப்படுத்தியிருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் கொத்துபரோட்டா.
விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கியிருந்த ‘கோட்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அப்படம் முடிந்தும் இவர்கள் காம்பினேஷனில் இன்னொரு பத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.
இதே சமயத்தில் ரிலீஸான சி.காவின் ‘அமரன்’ படம் சூப்பர் ஹிட் அடித்தால் முன்பு பேசிய குறைவான சம்பளத்துக்கு சி.கா. படம் செய்ய விரும்பாமல் அடுத்தடுத்த படங்களுக்குத் தாவி வெங்கட் பிரபுவை அநியாயத்துக்கு காக்கவைத்தார்.
இது தொடர்பாக சமீப விழா ஒன்றில் தனது ஆத்திரத்தைக் கொட்டிய கங்கை அமரன்,… ஒரு நடிகர் என் மகனுக்கு தரவேண்டிய கால்ஷீட்டை தராமல் தொடர்ந்து இழுத்தடிக்கிறார். அவருக்காக காத்திருந்து குடும்ப மானத்தை இழக்காமல் வெங்கட் பிரபு அடுத்த படத்தை இயக்கவேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில்தான், இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘‘சிவகார்த்திகேயன் எனக்கு எப்போதுமே சிறந்த நண்பர், சகோதரர் போன்றவர். இது குறித்து பல யூகங்களும், சர்ச்சைகளும் வலம் வருகின்றன.
ஒரு தந்தையாக தனது மகனின் படம் தாமதமாகும்போது அவருக்கு ஏற்படும் விரக்தி இயல்பானதே. ஒருவேளை அவருக்கு முழுமையான விஷயங்கள் தெரிந்திருக்காது. அதற்காக நான் அவரை குறை சொல்ல மாட்டேன்.
நான் மிகவும் அமைதியான ஒரு நபர். என்னுடைய படங்கள் என வரும்போது என்னுடைய பணிகள் குறித்த எந்தத் தகவலையும் யாரிடமும் நான் பகிர்ந்துகொள்ள மாட்டேன், என் அப்பாவிடமும் கூட. பல்வேறு காரணங்களால் அந்தப் படம் தொடங்கப்படவில்லை. அவ்வளவுதான். அதில் எந்த மனக்கசப்பும் இல்லை.
காலமும் நல்ல கதையும் கூடிவரும்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற விரும்புவேன். ஆகவே தயவு செய்து இது எல்லாவற்றுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைப்போம். நான் என்னுடைய அடுத்தப் படத்தில் பிஸியாக இருக்கிறேன். எனது சகோதரனின் ‘சேயோன்’ படத்துக்கு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக சிவகார்த்திகேயனும் ஒரு பதிவினைப் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ‘சார் நாம் எல்லாம் ஒரே குடும்பம். இதுக்கு போய் நீங்க சீரியஸாக பதில் அனுப்பிட்டு இருக்கீங்க. உங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி. உங்களின் அடுத்த பணிக்கும் எனது வாழ்த்துக்கள்.
இதை நான் ஏற்கெனவே உங்களிடம் சொல்லி இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். நான் எப்போதுமே வெங்கட் பிரபுவின் ரசிகன். விரைவில் உங்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்’’ என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
ஆக இப்போதைக்கு பஞ்சாயத்து முடிஞ்சது.