
கேரள முன்னணி நடிகை பாலியல் வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நடிகர் திலீப் தற்போது குற்றவாளி இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பில் நீதிமன்றம் முன்வைத்த முக்கிய கேள்வி என்ன, தீர்ப்புக்கு பின்பு திலீப் சொன்னது என்ன என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய விவகாரம் கேரளாவில் முன்னணி நடிகை ஒருவரை காரில் கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தல் செய்தது. இந்த சம்பவம் நடந்த அன்றே அந்த நடிகை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கை பதிவு செய்த காவல்துறை விசாரணையில் பிரபல மலையாள நடிகர் திலீப்பையும் எட்டாவது குற்றவாளியாக சேர்த்து அவரை கைது செய்தது. பின்பு, அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த சம்பவம் நடைபெற்று 9 ஆண்டுகள் ஆன நிலையில், இன்று எர்ணாகுளம் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் திலீப் குற்றவாளி இல்லை என தீர்ப்பளித்து அவரை விடுதலை செய்தது.
அதாவது பாதிக்கப்பட்ட நடிகைக்கும் திலீப்பிற்கும் இருந்த முன்பகை காரணமாகவே அந்த நடிகையை அவமானப்படுத்தவே திலீப் இப்படியான திட்டத்தை செயல்படுத்தினார் என்பதுதான் நடிகையின் குற்றச்சாட்டு. இதற்காக, வழக்கின் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிலுக்கு திலீப் தரப்பில் ரூ. 1.5 கோடி கொடுக்கப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதை நீதிமன்றம் கோடிட்டு காட்டியது. மேலும், நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்தபோது அதை மொபைலில் வீடியோ எடுத்த பல்சர் சுனில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட வழக்கறிஞர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால், வழக்கின் முக்கிய ஆதாரமான அந்த மொபைலை இப்போது வரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதையும் நீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லை என்று சொல்லியது. இந்த வழக்கில் இருந்து திலீப் விடுவிக்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கு நிம்மதி கொடுக்கக் கூடியது என்றாலும் இந்தத் தீர்ப்பு கேரளாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திலீப் விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் கேரள அரசு முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தீர்ப்புக்கு பின்பு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் நடிகர் திலீப் பேசியபோது, “சிலர் என்னுடைய வாழ்க்கையை, மதிப்பை, இமேஜை சீரழிக்க முயன்றனர். உண்மையில், என் மீது சதித்திட்டங்கள் அரங்கேறியது. இந்த கடினமான சமயத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கும், நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.