பழம்பெரும் திரைப்பட நடிகை சிஐடி சகுந்தலா பெங்களூரில் நேற்று காலமானார். அவருக்கு வயது 84.
சிஐடி சங்கர் படத்தில் ஜெய்சங்கருடன் அறிமுகமான சகுந்தலா, சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்தவர். சென்னையில் இலலிதா- பத்மினி- இராகினி சகோதரிகளுடன் இணைந்து நடனக் குழுவில் நாட்டியமாடி வந்தார்.
பின்னர் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் தொடங்கி, முக்கிய வேடங்களிலும் வலம்வந்தார்.
படிக்காத மேதை, கை கொடுத்த தெய்வம், திருடன், தவப்புதல்வன், வசந்த மாளிகை, நீதி, பாரத விலாஸ், ராஜராஜ சோழன், பொன்னூஞ்சல், என் அண்ணன், இதயவீணை ஆகிய படங்கள் இவரின் நடிப்பில் வந்த குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் நடித்துவந்தார்.
படங்களிலிருந்து விலகியபிறகு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துவந்தவர், பெங்களூரில் உள்ள மகள் வீட்டில் வசித்துவந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகல் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே சகுந்தலாவின் உயிர் பிரிந்தது என்று அவரின் மகள் செல்வி ஊடகத்தினரிடம் தெரிவித்தார்.
பழம்பெரும் நடிகை சகுந்தலாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.