
நடிகர் கமல்ஹாசானின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து தேவயாணிக்கு அழைப்பு வந்ததாக இயக்குநர் ராஜகுமாரன் பரபரப்பு கிளப்பியிருக்கிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குநர் ராஜகுமாரன் ’அந்திமழை’ யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில், “நடிகர் விஜய் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் அவர் நடிகராகவே இருந்து செய்யலாம். அந்த அளவுக்கு அவருக்கு வருமானம் வருகிறது. ஆனால், அதையும் மீறி கட்சி ஆரம்பித்து முதல்வராக வேண்டும் என்கிறார் என்றால் அவருக்கு பதவி மீதும் அதிகாரம் மீதும்தான் ஆசை! அவரால் நிச்சயம் அரசியல் ஜெயிக்க முடியாது” என்றெல்லாம் பேசி இணையத்தில் வைரலானார். இதுமட்டுமல்லாது இயக்குநர்கள் வெற்றிமாறன், பா. இரஞ்சித், மாரிசெல்வராஜ் போன்றவர்களின் படங்களில் அதீத வன்முறை இருப்பதாகவும், இந்த இயக்குநர்களின் ஒரு படங்களை கூட தான் பார்த்ததில்லை என்றும் பேசி பரபரப்பை கூட்டினார். மேலும் ரஜினி- கமல் போன்ற நடிகர்கள் இனிமேலாவது படங்களில் ஹீரோயிசத்தையும் வன்முறையையும் கைவிட வேண்டும் என்றும் பேசினார். ரஜினி- கமல் இணையும் புதிய படம் நடக்க வாய்ப்பேயில்லை என்றும் ஆரூடம் சொன்னார்.
‘அந்திமழை’ நேர்காணலில் உதிர்த்த வைரல் கருத்துக்களுக்கு பின்பு பல யூடியூப் சேனல்கள் அவரை தொடர்ந்து பேட்டி எடுக்க அந்தப் பேட்டிகளிலும், ‘கமல்ஹாசன் பெரிய நடிகர் இல்லை…இயக்குநர் மகேந்திரன் எல்லாம் ஒரு இயக்குநரா?’ என்றெல்லாம் பேசினார். அப்படியாக ஒரு பேட்டியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து தேர்தலில் போட்டியிட நடிகை தேவயாணிக்கு அழைப்பு வந்த கதையை சொல்லியிருக்கிறார்.
அவர் பேசியிருப்பதாவது, “மக்கள் நீதி மய்யம் சார்பாக அந்தியூர் தொகுதியில் தேவயாணியை நிற்க வைக்க பெரும் முயற்சி நடந்தது. ஆனால், இவர்களின் அரசியல் விளையாட்டு தெரியும் என்பதால் நான் அது வேண்டாம் என்று தடுத்து விட்டேன். அந்தியூரில் ஒருமுறை கமல் எங்களை சந்திக்க விரும்புவதாக தகவல் வந்தது. தனிப்பட்ட முறையில் கமல் எங்களை சந்திப்பதில் எந்த ஆட்சேப்ணையும் எனக்கு இல்லை. ஆனால், அவர் அரசியல் ரீதியாக சந்திப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. அதனால், ‘நாங்கள் கிளம்பி விட்டோம். வீட்டு சாவி தந்து விட்டு போகிறோம். அவர் ஓய்வெடுக்கட்டும்’ என்று சொல்லிவிட்டோம். கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். மக்கள் நீதி மய்யத்தின் நிலைமைதான் விஜயின் தவெக கட்சிக்கும் வரும்” என்று திரி கொளுத்தியிருக்கிறார் இயக்குநர் ராஜகுமாரன்.