ரஜினியின் அண்ணாமலை படத்தில் பாட்டு எழுதியபோது நடைபெற்ற சுவாரசிய அனுபவத்தை சமீபத்தில் ஒரு காணொளி உரையாடலில் கவிஞர் வைரமுத்து பேசினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:
" 'கொண்டையில் தாழம்பூ...
நெஞ்சிலே வாழைப்பூ...
கூடையில் என்ன பூ...
குஷ்பூ...என் குஷ்பூ...'
இந்தப் பாடலை எழுதிக்கொடுத்தப்போது, அனைவரும் குஷ்பூவின் பெயர் கட்டாயம் வேண்டுமா என்று கேட்டார்கள். படக்குழு இந்தப் பாடலில் நடிகையின் பெயர் இடம்பெறலாமா, வேண்டாமா ? என்ற கலந்துரையாடி கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு வந்த ரஜினிகாந்த்திடம், இந்த பாடலை பாடிக்காட்டினோம். குஷ்பூவின் பெயர் பாடலில் வருவதைக் கேட்டு வியப்படைந்தார்.
பின்னர், 'குஷ்பூ பேரு வருதே... என் பேரும் வருமா?' என்று என்னிடம் ஆர்வமாக கேட்டார்.
அதைதொடர்ந்து, எழுதிய வரிகளே...
'வீரத்தில் மன்னன் நீ…
வெற்றியில் கண்ணன் நீ…
என்றுமே ராஜா நீ…
ரஜினி… நீ ரஜினி…'
பொதுவாக ரஜினிகாந்த்துக்கு நான் எழுதிய எல்லாப் பாடல்களும், நான் விரும்பி எழுதிய பாடல்கள். ஒருநாளும் எனக்கு இது வேணும் என்று அவர் எதையும் கேட்டதில்லை. என்னைப் பற்றி எழுதுங்கள் என்று கூறியதும் இல்லை.
ஆனால், அண்ணாமலை படத்துக்கு நான் பாட்டு எழுதிக் கொடுத்த இந்த ஒரே ஒருமுறை மட்டும்தான் என்னிடம் அவர் கேட்டார். " என்று மனம் திறந்தார் கவிஞர் வைரமுத்து.