இரு வாரங்களுக்கு முன்னதாக இயக்குநர் பாரதிராஜாவுக்கு எழுதிய இரங்கல் கட்டுரைக்கு ‘பறந்துபோன கடைசி பா. வரிசை இயக்குநர்’ என்று தலைப்பிட்டிருந்தபோது, நண்பர்கள் பலரும் ‘பா’ வரிசை இயக்குநர்கள் பட்டியலில் பாக்கியராஜ் பெயர் இல்லாமல் எப்படி என்று செல்லமாக ஆதங்கப்பட்டார்கள்.
அதற்கு இவ்வளவு சீக்கிரம் பதில் சொல்லவேண்டிவரும் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இன்று காலை வழக்கமான நடைப்பயிற்சியில் இருந்த பாக்கியராஜ், தனது 73 வயதில் மாரடைப்பால் நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார். பாரதிராஜாவுடன் தனது கலைப்பயணத்தைத் துவங்கி அவரது நீண்டகால வாரிசாக அறியப்பட்டவர், அவர் புறப்பட்ட அடுத்த இரு வாரங்களிலேயே தனது பயணத்தையும் முடித்துக்கொண்டது ஒரு அவலம்.
பாலசந்தர், பாலுமகேந்திரா, பாரதிராஜா ஆகிய பா வரிசை இயக்குநர்களில் பாக்கியராஜ் இல்லாததில் எவ்வித வரலாற்று சூழ்ச்சியும் இல்லை. அவர்களின் சினிமாவில் இருந்த மேதமைத்தனத்தை தனது எந்தப் படத்திலும் காட்டிகொள்ளாதவர் பாக்கியராஜ். எளிய மனிதர்களின் வாழ்வை அதே எளிமையான திரைமொழியில் சொன்னவர். முந்தைய பா இயக்குநர்களின் படங்கள் குறித்துப் பேசுகையில் ‘ அந்த ஷாட்… சான்ஸே இல்லை… இந்த ஃப்ரேமிங் இவரைத்தவிர வேறு யாரும் யோசிக்க முடியாதது ‘ என்று டெக்னிக்கலாக எவ்வளவோ வியந்திருப்போம். ஆனால் பாக்கியராஜ் எப்போதும் சினிமா ஆளு அல்ல. அவர் எப்போதுமே இது நம்ம ஆளுதான். அந்த வகையில் பாக்கியராஜ் அடேங்க ’ப்பா’ வரிசை ஆளு.
துவக்க காலத்தில் பாரதிராஜாவின் வலதுகரம் என்று சொல்லப்பட்ட பாக்கியராஜை ’16 வயதினிலே’ தொடங்கி சிறுசிறு வேடங்களில் நடிக்க வைத்து அழகு பார்க்கும் பாரதிராஜா ‘புதிய வார்ப்புகள்’ மூலம் அவரை நாயகனாகவும் தூக்கி நிறுத்தி உச்சாணிக் கொம்பில் அமர வைக்கிறார்.
அப்படி அமர்ந்துகொண்டவர் அடுத்த சில மாதங்களிலேயே ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ மூலம் இயக்குநராகவும் முத்திரை பதித்து சுமார் 40 ஆண்டுகாலம் தமிழ் சினிமாவின் ராஜாக்களில் ஒருவராக வலம் வந்தார் என்பது வரலாறு.
முதல் படம் தொடங்கி, ஒரு கை ஓசை, மவுன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும் வரை காத்திரு, அந்த 7 நாட்கள், தூறல் நின்னு போச்சி என்று தொடர்ச்சியாக ஏழு வெற்றிப்படங்கள் கொடுத்த ஒரே இயக்குநர் என்கிற பெருமைக்கும் சொந்தக்காரர் பாக்கியராஜ்.
ஆசியாவின் மிகப்பெரிய தியேட்டர் மதுரையிலிருந்த தங்கம். சுமார் 2000 இருக்கைகள் என்று ஞாபகம். வார நாட்களில் 4 காட்சிகள், சனி, ஞாயிறுகளில் 5 காட்சிகள் வீதமாக இவரது ‘தூறல் நின்னு போச்சு’ 100 நாட்கள் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக அசுர நடைபோட்டது. ஆசிய சினிமா கண்டறியாத அபூர்வ வெற்றி அது.
அவரது அடுத்த இன்னொரு அசகாய சாதனை முந்தானை முடிச்சு. தமிழ் சினிமா முதன் முதலாய் கோடி ரூபாய் வசூலை எட்டிய படம் அது. அந்த வசூல் செய்த மாயத்தால் அவரது அடுத்த படமான தாவணிக் கனவுகள் பூஜையன்றே ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் வியாபாரமானதெல்லாம் சிலிர்க்க வைக்கிற ரகம். அந்த தாவணிக்கனவுகள் படத்தில் சிவாஜியையும் தனது குருநாதர் பாரதிராஜாவையும் அவர் பயன்படுத்திய விதம் இன்றும் சோஷியல் மீடியாக்களில் ரிப்பீட் மோடில் கொண்டாடப்படுகிற ரகம்.
சினிமாவில் துரோகம் சர்வசாதாரணமானது. இங்கே குரு துரோகங்களுக்கும் குறையில்லை. ஆனால் பாக்கியராஜ் தன் வாழ்நாளின் இறுதிவரை ‘எங்க டைரக்டர்’ என்கிற சொல்லைத்தாண்டி பாரதிராஜா என்கிற அவரது பெயரைக் கூட உச்சரித்ததில்லை. தன் திரைவாழ்வின் உச்சத்திலிருக்கிற காலத்தில் கூட அவர் அழைத்தவுடன் ஓடிப்போய் ‘ஒரு கைதியின் டைரி’க்கு கதை வசனம் எழுதி உடன் உதவியாளராக இருக்கிறார்.
அதைப் பின்னர் ‘ஆக்ரி ராஸ்தா’ என்கிற பெயரில் இந்தியில் அமிதாப்பை வைத்து தானே இயக்கி பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டியது தனிக்கதை.
50 லட்சத்துக்கு வெற்றிப்படம் கொடுத்தால் அடுத்த படத்தை 50 கோடிக்குத் திட்டமிடும் இயக்குநர்கள் மத்தியில் பாக்கியராஜ் எப்போதும் அகலக்கால் வைக்காமல் எளிய மனிதர்களின் அச்சு அசலான வாழ்வை மிகக்குறைந்த பட்ஜெட்டில் மட்டுமே படமாக எடுத்து வந்தார். தமிழ் சினிமா அதிரடி ஆக்ஷனுக்கு மாறிய நிலையிலும் தனது போக்கை மாற்ரிக்கொள்ளாதவர். அதுதான் அவரது பலமும் கூட.
அவரது அனைத்துப்பட கதை மாந்தர்களுமே நமக்கு மத்தியிலிருந்து எடுக்கப்பட்ட ராமசாமி, குப்புசாமி,பழனிச்சாமிகள்தான். செயற்கையான சினிமா பாத்திரத்தை அவரது படங்களில் பார்க்கவே முடியாது. உச்சபட்ச சோகக்காட்சிகளில் கூட புன்னகையை வரவைப்பார். நகைச்சுவைக் காட்சிகளில் கூட கண்ணீர் துளிர்க்கவைப்பார்.
படத்தின் பெயர் சட்டென நினைவுக்கு வரவில்லை.
ஒரு கிராமத்து ஆலமரத்தடியில் பஞ்சாயத்து ஒன்று நடந்துகொண்டிருக்கும். தபால் கொடுக்கப்போன பாக்கியராஜ் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பார்.
அந்த கிராமத்து பெண்மணி ஒருவர் தன் ஊர் இளைஞருடன் சோளக்காட்டுக்குள் ஸோ அன்ட் ஸோவாக இருந்துவிட்டார் என்பதுதான் குற்றச்சாட்டு. அப்படியெல்லாம் நடக்கவில்லை என்று அந்தப் பெண் மறுக்க, ஊர்ப்பெருசுகள் அதை நம்ப மறுத்து பெண்ணுக்கு எதிராக தீர்ப்பு வழங்கத் துடியாய்த் துடித்துக்கொண்டிருப்பார்கள்.
அப்போது ‘மே ஐ கம் இன்?’ என்று பஞ்சாயத்துக்குள் வான்டட் ஆக களமிறங்கும் பாக்கியராஜ் ஒவ்வொரு பெருசையும் நோக்கி ‘உங்களுக்கு தெரிஞ்ச பத்தினிங்க பேர் சொல்லுங்க’ என்று ஆளாளுக்கு கண்ணகி, நளாயினி, சாவித்திரி, சீதை என்று பதில் சொல்லிக்கொண்டிருக்க, ‘அப்ப உங்க அம்மாவோ, உங்க பொண்டாட்டியோ உங்களுக்கு பத்தினியா தெரியலை. அப்படி தெரியாத உங்களுக்கு இந்தப் பொண்ணை பத்தினியா பாக்க எப்பிடி மனசு வரும் ?’ என்று ட்விஸ்ட் வைத்து பஞ்சாயத்தை முடித்துவைப்பார்.
50 ஆண்டுகளில் அவர் இயக்கியுள்ள 27 படங்களில் இப்படி நூற்றுக்கணக்கான காட்சிகளை சொல்லிக்கொண்டேயிருக்கமுடியும்.
பாரதிராஜாவைப்போலவே பாக்கியராஜுக்கும் இருக்கும் இன்னொரு பெருமை. அவரது சிஷ்யர்கள் இன்று தமிழ் சினிமா முழுக்க நிரம்பியிருப்பது. அவர்களில் ஏதோ ஒருவர் மூலமாக பாக்கியராஜ் எப்போதும் படங்கள் இயக்கிக்கொண்டேதான் இருப்பார்.