
இசைஞானி இளையராஜா மறைந்த தன் மகள் பவதாரிணி நினைவாக புதியதாக பாடல் இசைக்குழு ஒன்றை உருவாக்குவதாக அறிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதியன்று இலங்கையில் சிகிச்சை பெற்றுவந்த பவதாரிணி, அங்கு காலமானார். தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய அவரின் இறப்பிலிருந்து மீண்டு இயல்புக்குவர இளையராஜா குடும்பத்தினருக்கு நீண்ட காலம் ஆனது. பல மாதங்களுக்குப் பின்னரே அவர்கள் இசை நிகழ்வுகளில் வழக்கம்போலப் பங்கேற்கத் தொடங்கினர்.
இந்நிலையில், இளம் வயதில் காலமான பவதாரிணியின் நினைவாக, அவருடைய பெயரில் சிறுமிகள் இசைக்குழு ஒன்று உருவாக்கப்படுகிறது என இன்று மாலையில் இளையராஜா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அவருடைய சமூக ஊடகப் பக்கங்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருப்பார்வமும் தேடலும் கொண்ட சிறுமிகள் தங்களுடைய படைப்புகளை அனுப்புமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னதாக, பல மாதங்களுக்கு முன்னர் இதுகுறித்து அவர் முன்னோட்டத் தகவல் வெளியிட்டிருந்தார். அப்போது, பவதாரிணியின் ஆசை இது என்றும் இசைஞானி குறிப்பிட்டிருந்தது நினைவுகூரத் தக்கது.