
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 குழந்தைகள் பார்ப்பதற்கு தகுதியற்ற நிகழ்ச்சி, நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் விஜே பார்வதியின் அலப்பறை, அதிரடி வைல்ட் கார்ட் எண்ட்ரி என இந்த வாரம் பிக்பாஸ் சுற்றி என்ன நடக்கிறது?
நேற்று நடந்த பிக்பாஸ் தமிழ் ஒன்பதாவது சீசனின் வார இறுதி எபிசோடில் தொகுப்பாளர் விஜய்சேதுபதி போட்டியாளர்களிடம் எச்சரிக்கை வசனத்தோடுதான் எபிசோடையே ஆரம்பித்தார். அதாவது, இந்த சீசன் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருப்பதாகவும் குறிப்பாக குழந்தைகளோடு அமர்ந்து பார்ப்பதற்கு ஏதுவாக இந்த சீசன் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் வருவதாக சொன்னார். அந்தளவுக்கு போட்டியாளர்களின் ரொமான்ஸூம், இரட்டை அர்த்த பேச்சுகளும், அடாவடிகளும் அத்துமீறி உள்ளே நடக்கிறது. இதுபற்றி போட்டியாளர்களிடம் நேரடியாகவும் மறைமுகமாகவும் விஜய்சேதுபதி எடுத்து சொல்லியும் போட்டியாளர்கள் திருந்துவதாக இல்லை. மாறாக அடாவடிகள் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. இதனால், விஜய்சேதுபதிக்கு பதிலாக மீண்டும் கமல்ஹாசனே பிக்பாஸ் தொகுப்பாளராக வரவேண்டும் என்ற குரல்கள் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழாமல் இல்லை.
பொதுவாக பிக்பாஸ் போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சி வணிகத்தை குறிக்கோளாகக் கொண்டதாக இருந்தாலும் இதுபோன்ற அதிக நெகட்டிவிட்டி இல்லாமல் ஒரு சில வரையறைகளை கொண்டு வரவேண்டும் என்றும் அதை நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் ஒருங்கிணைப்பாளர்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற குரல்களும் எழுந்திருக்கிறது.
இந்த சீசன் ஆரம்பித்த முதலே விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் இருவரும் அதிக எதிர்மறை விமர்சனங்களை பெற்று வருகின்றனர். வீட்டில் உள்ள ஒரீரு போட்டியாளர்களைத் தவிர அனைவரும் இவர்களுக்கு எதிராக இருக்கின்றனர். அந்தளவிற்கு எல்லோருடனும் தேவையில்லாத சண்டைகளை செய்வதில் வல்லவராக இருக்கின்றனர். இன்று வெளியான பிக்பாஸின் முதல் இரண்டு புரோமோக்களிலும் கூட வீட்டு தலயான கனிக்கும் பார்வதிக்கும் இடையிலான சண்டையே ஹைலைட்டாகி இருந்தது. பார்வதியின் நெகட்டிவியால் மற்ற போட்டியாளர்களும் சண்டைக்கு செல்லாமல் ஒதுங்கி விட பிக்பாஸ் வீட்டிலேயே கண்டெண்ட் கொடுக்கும் ஆளாக வலம் வருகிறார் பார்வதி. அதுவும் ஆக்கப்பூர்வமாக இல்லாததால் அதிரடி முடிவாக நான்கு நபர்களை வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே இறக்குகிறார் பிக்பாஸ். இதை தொகுப்பாளர் விஜய்சேதுபதியும் உறுதிபடுத்தியிருக்கிறார். அந்த வகையில், சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளான சாண்ட்ரா- பிரஜின் இருவரும் உள்ளே நுழைகிறார்கள் என்பது உறுதியாகிவிட்டது. இவர்கள் தவிர ‘பாக்கியலட்சுமி’ சீரியல் புகழ் திவ்யா மற்றும் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் என இவர்களும் வரும் நாட்களில் உள்ளே நுழைய இருக்கிறார்கள்.
உள்ளே வரும் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் விஜே பார்வதியின் நெகட்டிவிட்டியில் இருந்து பிக்பாஸ் வீட்டையும் பார்வையாளர்களையும் காப்பாற்றுவார்களா? இனியாவது இந்த சீசன் சுவாரஸ்யமாக மாறுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.
