பைசன் திரைப்படத்தில் இயக்குநரும் நடிகருமான அமீரும் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தொண்ணூறுகளில், தென்மாவட்டத்தில் தேவேந்திர குல மக்களுக்காக குரல் கொடுத்த பசுபதி பாண்டியனை நினைவூட்டும் கதாபாத்திரத்தில் தான் அமீர் நடித்துள்ளதாக தகவல் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் (காளமாடன்) திரைப்படம் வரும் அக்டோபர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசன் கதாபாத்திரத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், நேற்று இந்த படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில், கபடி வீராராக பல்வேறு சமூக சவால்களை, ஆதிக்கங்களை எதிர்கொள்கிறார் கபடி வீரான துருவ். கபடி வேண்டாம் என்று தட்டி சொல்லும் அப்பா பசுபதி, ஒரு கட்டத்தில் ஒடுக்குமுறைகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் பையன் கலங்கிப் போய் களமாடுவதைப் பார்த்து, 'டேய் இது பத்தாது, இது பத்தாது உன்னோட கை உடைச்சாலும், கால உடைச்சாலும் நீ ஓடிகிட்டே இரு. மேல மேல போகனும். அந்த டாப்புக்குப் போகணும், உச்சத்துக்குப் போகணும். அப்பதான் இங்க நம்ம ஒரு ஆளாவே தெரிவோம்' என வசனத்தில் துருவிற்கு பக்கபலமாக நிற்பதைப்போல ட்ரெய்லர் படபடவேன ஆக்ஷன் திரில்லரோடு முடிந்திருக்கிறது.
இந்த டிரெய்லரில் ஆறு காட்சிகளில் அமீர் வருகிறார். வெட்டுக்குத்து செய்பவராக வரும் அமீருக்கு ஒரு காட்சியில் கிராம பஞ்சாயத்தில் சிறுவன் ஒருவன் மாலை அணிவிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
அடர்த்தியான தாடி, பெரிய மூக்கு கண்ணாடியோடு இருக்கும் இருவரின் படங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அமீரின் கதாபாத்திரம் அப்படியே, தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் தலைவராக இருந்து கொல்லப்பட்டவரான பசுபதிபாண்டியனை பிரதிபலிப்பதாக உள்ளது.
இயக்குநர் மாரிசெல்வராஜ் இந்த படத்தின் கதையை மிக கவனமாக கையாண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, துருவ் விக்ரம் நடித்துள்ள பாத்திரத்துக்கு இன்ஸ்பிரேசனாக இருந்த மணத்தி கணேசன் என்பவர் அர்ஜுனா விருது பெற்றவர். இவர் மாரிசெல்வராஜின் உறவினரும் கூட.
இவர், பெரிய கபடி வீரராக வளர்வதற்கு வெங்கடேஷ் பண்ணையார் உதவி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதை அப்படியே மாரிசெல்வராஜ் படத்தில் கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
சாதி வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட்டு நின்றாலே மணத்தி கணேசன் போன்ற வீரர்களை நாம் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை பைசன் விதைக்கும் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.