சிவகார்த்திகேயனுக்கு போட்டியா என்ற கேள்விக்கு ‘கேபிஒய்’ பாலா பதிலளித்துள்ளார்.
கலக்கப் போவது யாரு பாலா ஹீரோவாக அறிமுகம் ஆகும் ‛காந்தி கண்ணாடி' படம் செப்டம்பர் 5இல் ரிலீஸ் ஆகிறது. அதேதேதியில் சிவகார்த்திகேயன் நடித்த ‛மதராஸி' படமும் வெளியாகிறது.
இந்த நிலையில், காந்தி கண்ணாடி படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது பாலாவிடம், எஸ்.கே.வுக்கு போட்டியாக காந்தி கண்ணாடி வெளியாகிறதா என்ற கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதில் அளித்த பாலா, “இதுவரை சினிமாவில் 18க்கும் அதிகமாக படங்களில் காமெடியனாக நடித்து இருக்கிறேன். அதில் பல படங்களில் நான் நடித்த சீன் வந்தது இல்லை. இதெல்லாம் வளர்ந்து வருகிற நேரத்தில் சகஜம் என அமைதியாக இருந்தேன். அப்போது என் நண்பர் ஷெரிப் என்னை ஹீரோ ஆக்குற இந்த கதை சொன்னார். கதை நன்றாக இருந்ததால் பாலாஜி சக்திவேல், வீடு அர்ச்சனா முக்கியமான கேரக்டரில் நடிக்க ஓகே சொன்னார்கள். அதேசமயம் பல ஹீரோயின்கள் ஆபிஸ் வந்து கதை கேட்டார்கள். கதை சூப்பர் என்றார்கள்… ஆனால் நான் ஹீரோ என்றதும் பலர் நடிக்க மறுத்தார்கள்.
கடைசியில் 51வது நபராக வந்த நமீதா கிருஷ்ணமூர்த்தி தான் என்னுடன் நடிக்க ஓகே சொன்னார். செப்டம்பர் 5ஆம் தேதி என் படமும், சிவகார்த்திகேயன் மதராஸி படமும் ரிலீஸ். நாங்கள் அவருக்கு போட்டி அல்ல. அவர் படம் கண்டிப்பாக ஜெயிக்கும், எங்கள் படம் ஜெயிக்க ஆதரவு கொடுங்க. அவர் படத்துக்கு வரும் கூட்டம் டிக்கெட் கிடைக்காவிட்டால் எங்கள் படத்துக்கு வருவார்கள். நான் உதவிகள் செய்கிறேன். அது விளம்பரமல்ல, மக்கள் போட்ட பிச்சையால் நான் இப்போது நன்றாக இருக்கிறேன். என்னால் முடிந்ததை திருப்பி செய்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.