நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் சென்னையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 48.
சென்னை,திருவான்மியூரில் வசித்துவந்த அவர், நெஞ்சுவலி ஏற்பட்டதால் கொட்டிவாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
டேனியல் பாலாஜியின் மறைவுச் செய்தி அறிந்ததும் இயக்குநர்கள் கௌதம் மேனன், அமீர் உட்பட்ட திரை பிரபலங்கள் மருத்துவமனைக்கு விரைந்தனர்.
இன்று காலையில் புரசைவாக்கம் பகுதியில் உள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்ட பாலாஜியின் உடலுக்கு விஜய்சேதுபதி உட்பட்டதிரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
இன்று மாலை 4 மணியளவில் ஓட்டேரி மின் மயானத்தில் பாலாஜியின் உடல் எரியூட்டப்பட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் முரளியின் உறவினரான பாலாஜி, சித்தி தொலைக்காட்சித் தொடரின் டேனியல் எனும் பாத்திரத்தின் மூலம் டேனியல் பாலாஜியாக பிரபலம் ஆனார்.
ஸ்ரீகாந்த் நடித்த ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் படங்களில் வலம்வரத் தொடங்கியவர், வேட்டையாடு விளையாடு, பிகில், பைரவா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மலையாளம், கன்னட மொழிப் படங்களிலும் சேர்த்து 40 திரைப்படங்களில் பாலாஜி நடித்துள்ளார்.
உயிரோடு இருந்தபோதே, கண்களை தானமாக வழங்க ஏற்பாடு செய்திருந்த டேனியல் பாலாஜியின் கண்கள் திட்டமிட்டபடி தானமாக வழங்கப்பட்டன.