’கடுப்பைக் கிளப்பாதீங்க மைலார்ட்’ – தேசிய விருது விவகாரத்தில் தனுஷ் கொந்தளிப்பு

Actor Dhanush
நடிகர் தனுஷ்
Published on

’கேப்டன் மில்லர்’ படத்துக்கு தனுஷ் சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது பெற்றிருப்பது கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ள நிலையில் ‘தட்டிக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. தட்டிவிடாமல் இருங்கள்’ என்று தனது விருது வெறுப்பாளர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் நடிகர் தனுஷ்.

ஏற்கனவே ‘ஆடுகளம்’, ‘அசுரன்’ படங்களுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றிருந்த தனுஷ் மூன்றாவது முறையாக கேப்டன் மில்லருக்கும் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார். ஆடுகளம், அசுரன் படங்களுக்கு விருது பெற்றபோது தனுஷ் அதற்குத் தகுதியானவர்தான் என்று கொண்டாடப்பட்ட நிலையில், இம்முறை வாங்கிய விருது அவரது பாஜக ஆதரவு நிலைப்பாட்டுக்காக தரப்பட்டது என்கிற விமர்சனங்களுக்கு ஆளானது. விஜய்க்கு எதிராக தனுஷை வளர்த்தெடுக்க பாஜக விரும்புகிறது. அதற்கான அட்வான்ஸ்தான் கேப்டன் மில்லர், ராயன் படங்களுக்கு தரப்பட்ட விருது என்றும் செய்திகள் கிளம்பின.

இச்செய்தியை ஊர்ஜிதம் செய்யும் விதத்தில் சமீபத்தில் தனது அரசியல் ஆர்வத்தை புதுப்பித்துக்கொண்ட தனுஷ் தனது நன்றி தெரிவிப்புக் கடிதங்களிலும் மேடைப்பேச்சுகளிலும் ‘ஓம் சிவோகம், ஜெய் ஸ்ரீராம்’ ஓம் நமச்சிவாய, ஹரஹரமகாதேவ’ என்று பக்திப்பரவசம் காட்டுகிறார்.

இந்நிலையில் திருவள்ளூரில் நடைபெற்ற ரசிகர் மன்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தகுதியான பல படங்களுக்கு முன்பு தேசிய விருது கிடைக்காதபோது கேள்வி கேட்காதவர்கள், இப்போது மட்டும் தன்னை எதிர்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 'புதுப்பேட்டை', 'மயக்கம் என்ன', 'மரியான்', 'வடசென்னை' மற்றும் 'கர்ணன்' போன்ற சிறந்த படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோது கிடைக்கவில்லை. அப்போல்லாம் இந்த விருது எதிர்ப்பாளர்கள் எங்கே இருந்தீங்க. எனக்காக ஏன் நீங்க பேசலை?’ என்று ஆவேசம் காட்டியுள்ளார்.

ஆக தனுஷின் கணக்குப்படி அவருக்கு இதுவரை எட்டு தேசிய விருதுகள் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.

மேலிடத்தார் பாத்து செய்யுங்க.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram 

logo
Andhimazhai
www.andhimazhai.com