சித்திக்குடன் லால்
சித்திக்குடன் லால்

உலகிலேயே என் சிறந்த நண்பனை இழந்துவிட்டேன்! சித்திக் மரணம் குறித்து நடிகர் லால்!

இயக்குநர் சித்திக் என்றதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விஜய்-சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் படமும் காண்ட்ராக்டர் நேசமணி என்கிற வடிவேலுவின் பாத்திரமும் நினைவுக்கு வரும்.

கேரள சினிமா ரசிகர்களுக்கு இப்போது பிரபல நடிகராகிவிட்ட லாலுடன் இணைந்து சித்திக் இயக்கிய ஏராளமான நகைச்சுவைப் படங்கள் நினைவுக்கு வரக்கூடும்.

“ அவரது இயக்கத்தில் 1991 இல் வெளியான காட் பாதர் என்ற படம், மலையாளப் பட வரலாற்றிலேயே அதிகநாட்கள் ஓடி சாதனை படைத்த படம். 404 நாட்கள் ஓடியது’’ என்று முகநூலில் நினைவு கூர்கிறார் சினிமா விமர்சகரும் நடிகருமான ஷாஜி.

இயக்குநர் பாசிலிடம் உதவி இயக்குநராக இருந்தவர்கள் சித்திக்கும் லாலும். இவர்கள் இணைந்து  உருவாக்கிய பல படங்களுக்கு நகைச்சுவையே அடிநாதம். இயக்கம் சித்திக்-லால் என்றுதான் படங்களில் பெயர் வரும்.  இடையில் இருவரும் பிரிந்தனர். லால் நடிகராகிவிட்டார். சித்திக் தொடர்ந்து படங்கள் இயக்கினார். பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்து சில வெற்றிப்படங்களைக் கொடுத்தனர். அவையே ஹிட்லர், ப்ரெண்ட்ஸ் போன்ற படங்கள்.  பாஸ்கர் ஒரு ராஸ்கல், மோகன்லால் நடித்த பிக் ப்ரதர் ஆகியவை சித்திக் இயக்கிய சமீபத்திய படங்கள்.

இயக்குநர் சித்திக் மெல்லிய மனங்கொண்ட கலைஞன் எனக்குறிப்பிடும் கவிஞர் பழநிபாரதி அவரது படத்துக்கு பாடல் எழுதியதை முகநூலில் நினைவு கூர்ந்துள்ளார்.

 “சித்திக் தமிழில் ஐந்து படங்களை இயக்கியிருக்கிறார். முதல் படம் - ' ஃபிரண்ட்ஸ்'.  விஜய், சூரியா இருவரும் இணைந்து நடித்த அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் இசைஞானியின் இசையில் நான் எழுதினேன். அது இனிதான அனுபவம். பாடல்களுக்கான சூழல்களை விளக்கியதோடு சரி, வரிகளில் அவர் குறுக்கிடவே இல்லை. அதன் பிறகு தேவா இசையில் 'எங்கள் அண்ணா' படத்திலும் எழுதினேன்.

நகைச்சுவைக் காட்சிகளை அதன் கால பிரமாணத்தோடு படமாக்குவது சிரமம். அதில் அவரது தனித்துவ நுட்பம்தான் வடிவேலுவின் 'நேசமணி' பாத்திரம். அலட்டல் இல்லாத எளிமையான கலைஞனுக்கு ஆழ்ந்த அஞ்சலி,’ என பழநிபாரதி குறிப்பிடுகிறார்.

தமிழிலும் பல படங்களில் நடித்து பிரபலமாகிவிட்ட நடிகர் லால் தன் சிறந்த நண்பர் சித்திக் மரணம் குறித்து என்ன சொல்கிறார்?

” நான் இழந்திருப்பது சாதாரண நண்பனை இல்லை.  மிகச்சிறந்த நண்பனை இழந்துள்ளேன். உலகிலேயே தலை சிறந்த நண்பர்கள் யாரென்று கேட்டால் நானும் சித்திக்கும் என்றுதான் சொல்வேன். 16 வயதிலிருந்து நாங்கள் நண்பர்கள். ஆரம்பத்தில் நாங்கள் மிமிக்ரி செய்தோம். பின்னர் கதைகள் எழுதினோம். பிறகு இணை இயக்குநர்கள் ஆகி, இயக்குநர்கள் ஆனோம். படங்கள் தயாரித்தோம், வெளியிட்டோம். எல்லாம் அடிப்படையில் இருந்து தொடங்கியவை.

எவ்வளவோ மாறுதல்கள் வந்தாலும் எங்கள் நட்பு மட்டும் மாறவில்லை. தூய்மையானது; கலப்படமில்லாதது. எல்லா நண்பர்களைப் போலவே நாங்களும் சண்டையிட்டோம். ஆனால் அது தனிப்பட்ட நபர்களைப் பற்றியது அல்ல. கதையை பற்றி முரண்படுவோம். எங்களில் யார் நான் செய்வது தவறு என்று உணர்ந்தாலும் உடனே சண்டை  முடிந்துவிடும்.

எங்களுக்குள் ஈகோ இருந்தது கிடையாது. எங்களால் நெடுநாட்கள் பிரிந்திருக்க முடியாது என்று எங்களுக்கு மட்டுமே தெரியும். எங்கள் மோதல்களும் நீடித்தது இல்லை.

சித்திக் -லால்
சித்திக் -லால்

நாங்கள் பிரிந்தபோது பலர் கேள்வி எழுப்பினார்கள். ஏதோ பெரிய பிரச்னை என நினைத்தார்கள். ஆனால் அந்த முடிவு நாங்கள் இருவரும் இணைந்து எடுத்தது. கொஞ்சம் கூட வெறுப்போ பகையோ இல்லை. சித்தில் – லால் என்ற பெயர் சித்திக் மற்றும் லால், சிறந்த நண்பர்கள் என்று மட்டுமே மாறியது. சித்திக் லால் என்பது ஒரே பெயர் என்று கேரளத்தை நம்ப வைத்தது எங்கள் ஒத்திசைவு. உலகிலேயே என்னுடைய சிறந்த நண்பனுக்கு விடை கூறுகிறேன்!’

என உருக்கமாகக் கூறி உள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com