“சாராயம் குடித்தது மாதிரி ஆடாதீர்கள். நான் உங்களுக்கு சாராயத்தைக் கொடுக்கவில்லை. புத்தகத்தைத்தான் கொடுத்தேன்.”என இயக்குநர் மாரி செல்வராஜ் ரசிகர்களைக் கண்டிக்கும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகர் துருவ் - இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவான பைசன் திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
மேலும், இப்படம் ரூ. 18 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் புரோமோஷனுக்காக படக்குழுவினருடன் திருநெல்வேலியிலுள்ள பிரபல திரையரங்கிற்கு மாரி செல்வராஜ் சென்றிருந்தார்.
படம் பார்த்த ரசிகர்களைச் சந்திக்கும்போது சில இளைஞர்கள் கூச்சல் போட்டபடியே இருந்தனர். இதைக் கண்டு கோபமான மாரி செல்வராஜ், “சாராயம் குடித்தது மாதிரி ஆடாதீர்கள். நான் உங்களுக்கு சாராயத்தைக் கொடுக்கவில்லை. புத்தகத்தைத்தான் கொடுத்தேன். என் படத்தைப் புத்தகமாகப் பாருங்கள். என்னை அண்ணன் என அழைப்பவர்கள் எல்லாரும் எனக்குத் தம்பிகள்தான். உங்கள் மீது எனக்கு பெரிய அக்கறை இருக்கிறது. அதேபோல், நீங்களும் பிறரை நேசிக்கவும் அடுத்தவரைத் துன்புறுத்தாமலும் வாழ வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதுடன் பலரும் மாரி செல்வராஜுக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.