மண்ணிலுள்ள ஜீவனுக்கெல்லாம் தாயாகப் பிறந்தவரே… - டோரதி விமர்சனம்

Dorothy
டோரதி திரைப்படம்
Published on: 

’ நெடுந்தொலைவுப் பயணத்தை தொடங்கி வைக்கிறது நட்பு’ என்கிற வாசகங்களோடு கருப்பு, வெள்ளைக் காட்சிகளோடு தொடங்குகிறது படம்.

குடும்பத்தாரின் மிரட்டலுக்காக தன் உயிர் நண்பன் சுப்புவை கொலை செய்து அவனது பிணத்தை லாரியில் கொண்டுவந்துகொண்டிருக்கிறான் கார்த்திக். கதை இவர்களது இளம்பிராயத்தை நோக்கி முன்னும் பின்னுமாய் பயணித்து, பாலின சமத்துவத்தை ஒரு பெரும் வேள்விக்குள்ளாக்கி, ’நெடுந்தொலைவுப் பயணத்தை தொடங்கி வைக்கிறது காதல்’ என்கிற வாசகங்களோடு முடிகிறது.

இயக்குநரும் படக்குழுவினரும் மீண்டும் மீண்டும் வேண்டுகோளாய் வைப்பதால் மட்டுமல்ல. இதற்கு மேல் இப்படத்தின் கதையைப் பேசுவது அடுத்து படம் பார்க்கச் செல்கிறவர்களுக்கு செய்கிற துரோகம் என்றே தோன்றுகிறது.

கார்த்திக் சுப்பாராஜின் பத்தாவது படம். அவற்றில் ‘பிட்சா’,’ஜிகர்தண்டா’, ’இறைவி’ என்று மூன்று நல்ல படங்கள் இருக்கின்றன. அந்த மூன்று படங்களையும் தாண்டிய அவரது உச்சபட்ச கலைப்படைப்பு என்று இந்த டோரதியை நிச்சயம் சொல்லலாம்.

அவரே சொல்வது போல் இந்த டோரதி இவ்வளவு உயர்ந்த படைப்பாக மிளிர்ந்து நிற்கக் காரணம் இப்படத்தை தனது மாயக்கரங்களால் ‘வாடீ ராசாத்தி’ என்று அணைத்துக்கொண்ட இளையராசா.

இப்படத்தின் பாடல்கள் வெளியாகி அவரது முதல் படத்துக்கு இணையான வரவேற்புகள் கிடைத்தபோது, அவரை ஏதாவது ஒரு காரணத்துக்காக, வசைபாடிக்கொண்டேயிருப்பவர்களில் சிலர், ’அவரே பாடியிருக்கக்கூடாது…அவரே பாட்டையும் எழுதிட்டாரா ?’ என்று குறுக்குசால் ஓட்டிக்கொண்டிருந்ததை அதிகம் காண முடிந்தது.

இவர்களுக்கு இந்த மொத்தப் படமுமே பதில்தான் என்றாலும் இரண்டு அம்சங்களை குறிப்பிட்டாகவேண்டும்.

‘மண்ணிலுள்ள தாய்க்கு எல்லாம் மகளாகப் பிறந்தவளே’ என்கிற வரிகளை யாருக்கு எதற்காக எழுதியிருக்கிறார். இப்படியெல்லாம் ஒரு மனிதர் சிந்திக்க முடியுமா? என்கிற ஒரு இடம். மண்ணிலுள்ள ஜீவனுக்கெல்லாம் தாயாகப் பிறந்தவரே…என்று பதிலுக்கு அவர் இருக்கிற திசையை நோக்கிப் பாடுவதைத் தவிர வேறு வழியில்லை.

அடுத்தது படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் ‘அடி வாடீ ராசாத்தி’ என்று அவர் குரல் கேட்கத் துவங்கும்போது, ‘அய்யா ஏன்யா எங்களை இப்படி அழ வச்சுக்கிட்டே இருக்கீங்க?’ என்று இதயம் கிடந்து அடித்துக்கொள்ளும்.

டோரதி விமர்சனம் என்கிற பெயரில் ஒரே ராஜா புராணமா என்று தோன்றும். யெஸ்… அவர் ஸ்டைலிலேயே சொன்னால் இது ராஜா புராணமேதான்.

’86ல் வெளிவந்த ராஜாவின் ‘ஹவ் டு நேம் இட்?’ ஆல்பத்தின் மொத்த இசையையும் தன்னுடைய வீடு படத்துக்கு பின்னணி இசையாக பாலுமகேந்திரா பயன்படுத்தியிருப்பார். அதே ஹவ் டு நேன் இட் ஆல்பத்தின் குறிப்பிட்ட ஒரு இசை இப்படத்தின் இரு காட்சிகளில் வரும்போது மெய்யாலுமே மெய் சிலிர்க்கிறது.

ராஜா, கா.சுப்பாராஜாவிற்கு அடுத்தபடியாக படத்தின் இன்னொரு நாயகன் ஒளிப்பதிவாளர் திரு. கதை தரும் அழுத்தம் காரணமாக பல காட்சிகளை கருப்பு, வெள்ளையாக அதே சமயம் காவியமாகக் கொடுத்திருக்கிறார்.

பொதுவாக எழுத்தாளர்களை மதிக்காத தமிழ் சினிமாவில், பிரபல நாவலாசிரியர் சரவணன் சந்திரனுக்கு கதைப் பங்களிப்பில் ஒரு முக்கிய பங்களித்து ஒரு புதிய அத்தியாயத்தை துவங்கியிருக்கிறார் இயக்குநர்.

கதை நாயகர்களான ரிஷிகாந்தும், சனந்தும் அர்ப்பணிப்பின் உச்சம். இருவருக்கும் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

Dorothy
டோரதி

அப்பாவாக வரும் முத்துக்குமார் வேறலெவல் நடிப்பு . டோரதியாக வரும் கீர்த்தி சுரேஷ் சில காட்சிகளே வந்தாலும் மனதில் நிற்கிறார். ஆனால் அவரது தற்கொலை சமாச்சாரம் கொஞ்சம் குழப்புகிறது.

மொத்தத்தில் ‘டோரதி’ ராஜா ரசிகர்களும் கார்த்திக் சுப்பாராஜ் மட்டும் அல்ல… தமிழ் சினிமாவே காலரைத் தூக்கிவிட்டுள்ளலாம் ரகம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com