எக்கோ திரைப்படம்
எக்கோ திரைப்படம்

எக்கோ: திரைவிமர்சனம்!

பேராசையும் துரோகமும் ஒருவனை எங்குக் கொண்டுபோய் நிறுத்தும் என்பதை சைக்கலாஜிக்கல் த்ரில்லர் பாணியில் சொல்கிற திரைப்படம் தான் எக்கோ.

ஐடி நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் ஸ்ரீகாந்த் தன்னுடைய முதலாளியின் மகளான பூஜா ஜாவேரியை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். ஆனால், அம்மாவின் வற்புறுத்தலால் தாய்மாமன் மகளை (வித்யா பிரதீப்) திருமணம் செய்து கொண்டு, தன் அப்பா கட்டிய வீட்டில் குடியேறுகிறார். சில நாட்களிலேயே வித்யா பிரதீப் உயிரிழந்து விட, அந்த வழக்கை தற்கொலை என முடித்து வைக்கிறது காவல்துறை. ஆனால், பேய்கள் பற்றி ஆய்வு செய்யும் ஆஷிஷ் வித்யார்த்தி , வித்யா பிரதீப் உயிரிழந்ததற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கிறார். அந்த காரணம் என்ன? இதற்கு பதில் சொல்வதுதான் படத்தின் மீதிக் கதை.

அறம் தவறும் மனிதனுக்கு கிடைப்பது என்ன என்பதை சைக்கலாஜிக்கல் த்ரில்லர் பாணியில் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ். ஒரு கதை நல்ல திரைக்கதையாக மாறும் போது அதற்குத் தேவையான உள்ளீடுகளை கொடுக்க வேண்டியது அவசியம். ஏறக்குறைய இரண்டு மணி நேர த்ரில்லர் படம் பயமுறுத்தாமல் கடந்து விடுகிறது.

ஐடி ஊழியராக வரும் ஸ்ரீகாந்த் தேர்ந்த நடிப்பை கொடுத்திருந்தாலும், அவரின் கதாபாத்திரம் வலுவாக எழுதப்படவில்லை. அம்மாவின் சொல்லை தட்டாத அவர், மனைவியை திட்டம் தீட்டிக் கொல்கிறார். இதற்கான காரணத்தை இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். ஸ்ரீகாந்தின் காதலியாக வரும் பூஜா ஜாவேரி, மனைவியாக வரும் வித்யா பிரதீப் இருவரும் போதுமான அளவுக்கு நடித்துள்ளனர். பேய்கள் பற்றி ஆய்வு செய்பவராக வரும் ஆஷிஷ் வித்யார்த்தி கதாபாத்திரமும் முழுமையற்றதாக உள்ளது. கதாபாத்திரத்திற்கான எழுத்தையும் இயக்குநர் கோட்டை விட்டுள்ளார்.

நரேன் பாலகுமாரின் பின்னணி இசை த்ரில்லர் படத்திற்கு ஏற்ற வகையில் உள்ளது. பாடல்களில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். கோபிநாத்தின் ஒளிப்பதிவு தான் படத்தின் ஒரே ஆறுதல். பெரும்பாலும் ஒரே வீட்டுக்குள் நடக்கும் கதையை வெவ்வேறு கோணங்களில், திகிலூட்டும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார்.

பேய் படத்தின் பலம் பார்வையாளர்களை மிரள வைப்பது. அது எக்கோவில் மிஸ்ஸிங்!

logo
Andhimazhai
www.andhimazhai.com