ஸ்ரீதேவியின் டூடுல்
ஸ்ரீதேவியின் டூடுல்

ஸ்ரீதேவி 60 - டூடுல் வெளியிட்டு கூகுள் கௌரவம்!

நடிகை ஸ்ரீதேவியின் 60ஆவது பிறந்தநாளையொட்டி டூடுல் வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.

இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த நடிகை ஸ்ரீதேவி, சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் 1963ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். சிறு வயது முதலே நடிக்கத் தொடங்கியவர், இந்தியத் திரை உலகையே தனது நடிப்பால் திரும்பிப் பார்க்கவைத்தார். பல மொழிகளைப் பேசும் திறன் கொண்ட ஸ்ரீதேவி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட்ட மொழிகளில் வெளியான படங்களில் நடித்துள்ளார்.

1976ஆம் ஆண்டு இயக்குநர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு படத்தில் நடித்ததற்காக நடிகை ஸ்ரீதேவிக்கு முதல்முறையாகத் தேசிய விருது கிடைத்தது.

300 படங்களுக்கு மேல் நடித்த ஸ்ரீதேவி, 2000ஆம் ஆண்டு நடிப்பிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்றுவந்தார். தொடர்ந்து 2012ஆம் ஆண்டு இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படம் மூலம் மீண்டும் இந்தி படங்களில் நடித்தார்.

நடிகை ஸ்ரீதேவிக்கு 2017ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. அப்போது அவர் நடித்த மாம் திரைப்படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. கடந்த 2018 பிப்ரவரி 24இல் அவர் காலமானார்.

ஆணாதிக்கம் நிறைந்த திரை உலகில் துணிச்சலான பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த ஸ்ரீதேவியின் 60ஆவது பிறந்தநாளையொட்டி, கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ள கௌரவப்படுத்தியுள்ளது. மும்பையைச் சேர்ந்த பூமிகா முகர்ஜி இந்த டூடுலை உருவாக்கியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com