“’பிக் பாஸ்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தயங்கினேன்”- மேடையை அதிரவிட்ட டாப் ஹீரோ!

மோகன்லால், நாகர்ஜூனா, விஜய் சேதுபதி
மோகன்லால், நாகர்ஜூனா, விஜய் சேதுபதி
Published on

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்ப நாட்களில் தயங்கியதாக மோகன்லால், நாகர்ஜூனா உள்ளிட்ட தொகுப்பாளர்கள் பேசியிருக்கிறார்கள்.

நேற்று மாலை ஜியோ ஹாட்ஸ்டாரின் ‘சவுத் அன்பாண்ட்’ என்ற நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு நான்கு மாநிலங்களில் ரூ. 12,000 கோடி முதலீடு செய்வதுதான் இந்நிகழ்வின் நோக்கம். அதில் தமிழகத்தில் மட்டும் ரூ. 4000 கோடிக்கு முதலீடு செய்கிறது இந்நிறுவனம். நடிகர்கள் மோகன்லால், நாகர்ஜூனா, கமல்ஹாசன், விஜய்சேதுபதி, ப்ரியாமணி, கெளரி கிஷன் உள்ளிட்ட பல நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொள்ள பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது இந்த நிகழ்வு.

இந்த நிகழ்வின் ஹைலைட் தருணங்களில் ஒன்றாக மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளின் பிக் பாஸ் தொகுப்பாளர்கள் ஒரே மேடையில் நின்றனர். அதில் நடிகரும் மலையாள பிக் பாஸின் தொகுப்பாளருமான மோகன்லால் பேசியதாவது, “பிக் பாஸின் ஏழு சீசன்களை நான் தொகுத்து வழங்கியிருக்கிறேன். அந்த நிகழ்ச்சி மீது பலருக்கும் விமர்சனங்கள் இருக்கலாம். அதையும் தாண்டி பிக் பாஸின் வெற்றிக்கு காரணம் அதன் உண்மையான உணர்வுகள்தான். அந்த நிகழ்ச்சி டிராமா கிடையாது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆரம்பத்தில் பிக் பாஸ் தொகுத்து வழங்க வேண்டும் என்று என்னிடம் கேட்டபோது தயங்கினேன். பின்பு, அந்த நிகழ்ச்சிக்கு அடிமை ஆகிவிட்டேன். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது எளிது கிடையாது” என்றார்.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நாகர்ஜூனா பேசியதாவது, “பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தமட்டில் கண்டெண்ட்தான் கிங். மோகன்லால் சொன்னதை போல பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பத்தில் நானும் தயங்கினேன். பின்பு அந்த நிகழ்ச்சிக்கு அடிமையாகிவிட்டேன். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதில் மோகன்லாலை விட நான் சீனியர்” என்றார் சிரித்துக் கொண்டே!

தமிழ் பிக் பாஸின் தொகுப்பாளர் விஜய்சேதுபதி பேசும்போது, “நாகர்ஜூனா, மோகன்லால் போன்ற லெஜெண்ட்டுடன் இணைந்து ஒரே மேடையில் நிற்பதே பெருமை! நாகர்ஜூனா இளமையாகி கொண்டே போகிறார். என் பேரன் வந்தாலும் அவர் இப்போதுள்ள இளமையுடனேயே இருப்பார் என நினைக்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எனக்கு மாற்றுக்கருத்து இருந்ததால் நானும் இவர்களை போல தொகுத்து வழங்க மாட்டேன் என்று சொன்னேன். ஆனால், இப்போது அந்த நிகழ்ச்சி எனக்கு கண்ணாடி போலாகிவிட்டது. அங்கிருக்கும் ஒவ்வொரு போட்டியாளர்களிடமும் என்னைப் பார்க்கிறேன். என்னுள் பல கேள்விகளை எழுப்பும் இந்த நிகழ்ச்சியில் நானும் நிறைய கற்றுக் கொள்கிறேன்” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com