
ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சனை தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவும் தனது புகைப்படங்களை பயன்படுத்த நீதிமன்றத்தின் மூலம் தடை வாங்கியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ள இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதாவது, பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் ஆகியவை இளையராஜாவின் பாடலையும், புகைப்படங்களையும் அனுமதியில்லாமல் பயன்படுத்தி வருவதாகவும் , அதனை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், அதிலிருந்து கிடைத்த வருமானம் தொடர்பான தகவல்களை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இளையராஜாவின் புகழ் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைச் சார்ந்தது அல்லவா? தளங்களில் கிடைக்கும் எந்த இசையும் திரைப்படப் பெயர் அல்லது நடிகரின் பெயர், இசையமைப்பாளரின் பெயர் ஆகியவற்றுடன்தான் காட்சிப்படுத்தப்படுகிறது. பெயரைப் பயன்படுத்துவதால் என்ன பாதிப்பு ஏற்படுகிறது என விசாரணையின் போது நீதிபதி கேள்வி எழுப்பினார்
அதற்கு இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரபாகரன் சில சேனல்கள் இளையராஜாவின் பெயர் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி மீம்ஸ் உருவாக்குகின்றன. இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று அவற்றை தக்க ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன் காரணமாக அவரது இமேஜ் பாதிக்கப்படுகிறது என்றும் வழக்கறிஞர் வாதிட்டார்.
தில்லி உயர்நீதிமன்றத்தில் சில நடிகர்கள், நடிகைகளுக்கு இது மாதிரியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அவரது வாதத்தைக் கேட்ட நீதிபதி செந்தில் குமார் இளையராஜாவின் புகைப்படங்கள், பெயர் ஆகியவற்றை யு டியூப் சேனல்கள், சமூக ஊடகங்கலில் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இதேபோல், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரி நடிகை ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் தொடந்த வழக்கிலும் இதே தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.