
ரஜினிகாந்த் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் சுந்தர்.சி நிராகரித்தது ஏன் என்பதற்கு தயாரிப்பாளர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றியை பார்க்க வேண்டியவர்கள் வெற்றி பெற்றவர்கள். நாம் அது நேர்மையாக வந்ததா என்றுதான் பார்க்க வேண்டும்.
அது மாபெரும் வெற்றிதான். வெற்றியாளர்களின் சந்தோஷம் அது. அதில் நமக்கு சந்தோஷம் இருக்கிறதா என்றுதான் நாம் ஆராய வேண்டும்.
எஸ்.ஐ.ஆர் குறித்து அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும். என்னால் முடிந்தவரை நான் செய்கிறேன். நீங்களும் சேர்ந்து அதற்கு உதவி செய்ய வேண்டும் என்பதுதான் எனது தாழ்மையான வேண்டுகோள்" என்று பேசினார்.
அப்போது ரஜினிகாந்த் திரைப்படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "எனது தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகியது குறித்து அவர் கருத்து தெரிவித்துவிட்டார். எனது கருத்து என்னுடைய நட்சத்திரத்திற்கு பிடித்த கதையை எடுப்பதுதான் எனக்கு ஆரோக்கியமானது.
அதைத்தான் தற்போது பண்ணி வருகிறோம். ரஜினிகாந்த்துக்கு பிடிக்கும் வரை கதை கேட்டுக் கொண்டே இருப்போம். புதிய இயக்குநர்களுக்கும் இதில் வாய்ப்பு இருக்கிறது. கதை நல்லா இருக்க வேண்டும் அவ்வளவுதான். நானும் ரஜினிகாந்த்தும் இணைந்து நடிப்பதற்கு இன்னொரு கதையை தேடிக் கொண்டிருக்கிறோம். தற்போது என் தயாரிப்பில் அவர் மட்டும் நடிக்கிறார். எதிர்பாராததை எதிர்பாருங்கள்." இவ்வாறு கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.