பிரபாஸ் - கமல்ஹாசன்
பிரபாஸ் - கமல்ஹாசன்

பிரபாஸ் படத்தில் வில்லனாக நடிக்கும் கமல்ஹாசனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிரபாஸ் படத்தில் வில்லனாக நடிக்கும் கமல்ஹாசன் 20 கோடி சம்பளத்திற்கு ஒரு மாதம் கால்ஷீட் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் நடித்த நடிகையர் திலகம் படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் புராஜெக்ட் கே. சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இப்படம் பான் இந்தியா படமாக தயாராகி வருகிறது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

புராஜெக்ட் கே படத்தில் கமல்ஹாசன் இணைந்துள்ளதாக வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக நேற்று (ஜூன் 25) அறிவித்தது. இதில் பிரபாஸூக்கு வில்லனாக கமல் நடிப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "50 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடன உதவியாளராகவும், உதவி இயக்குநராகவும் இருந்தபோது தயாரிப்புத் துறையில் அஸ்வினி தத் என்ற பெயர் மிகப் பிரபலமாக இருந்தது. 50 வருடங்களுக்குப் பிறகு நாங்கள் இருவரும் இணைகிறோம். எங்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு சிறந்த இயக்குநர் இப்படத்தை இயக்குகிறார். என்னுடைய சக நடிகர்களான பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்ட இந்த தலைமுறையை சேர்ந்த முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இதற்கு முன் அமித்ஜியுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் அவருடன் இணைந்து பணியாற்றுவதை முதல்முறை போலவே உணர்கிறேன்.

அமித்ஜி ஒவ்வொரு படத்திலும், தன்னை புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார். அவரது பாதையைத்தான் நானும் பின்பற்றுகிறேன். புராஜெக்ட் கே படத்தில் பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன். திரையுலகில் எந்தவொரு முயற்சியை எடுத்தாலும், பார்வையாளர்கள் என்னை எந்த நிலையில் வைத்து பார்த்தாலும், என்னுடைய பிரதானமான தன்மை, நான் ஒரு திரைப்பட ஆர்வலன் என்பதே. அனைத்து புது முயற்சிகளையும் ரசிகர்கள் கண்டிப்பாக அங்கீகரிப்பார்கள். புராஜெக்ட் கே படத்துக்கு இது என்னுடைய முதல் கைதட்டலாக இருக்கட்டும். எங்கள் இயக்குநர் நாக் அஸ்வினின் இயக்கத்தில், ரசிகர்கள் மத்தியிலும், சினிமா உலகிலும் கைதட்டல்கள் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன்." இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் கமல்ஹாசன் நடக்கிறார். இந்தப் படத்தில் நடிப்பதற்கு ஒரு மாதம் கால்ஷீட் கொடுத்துள்ள கமல்ஹாசன் 20 கோடி ரூபாய் சம்பளம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, இந்தப் படத்தில் கமல்ஹாசனை நடிக்க வைப்பதற்கு படத்தின் தயாரிப்பாளர் 150 கோடி சம்பளம் கொடுக்க தயாராக இருந்ததாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com