திரைப்பட நடிகரும் பாடகருமான மு.க. முத்து சென்னையில் இன்று காலமானார். 77 வயதான இவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதல் மகன் ஆவார்.
கருணாநிதியின் இரண்டாவது திருமணத்துக்கு முன்னர் இறந்துபோன அவரின் முதல் மனைவி பத்மாவதியின் மகன் மு.க.முத்து. தந்தையைத் தொடர்ந்து அவரின் கலையுலக வாரிசாக திரைப்படங்களில் நடிகராக வலம்வந்தார்.
அந்த சமயத்தில் தி.மு.க.வில் அடுத்த தலைவராக உருவாகிவந்த எம்.ஜி.இராமச்சந்திரனுக்குப் போட்டியாகவே இவர் களமிறக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் சில படங்களைத் தாண்டி முத்துவால் பெரிதாக ஜொலிக்கமுடியவில்லை.
பூக்காரி படத்தில் இவருடைய ஜோடியாக மஞ்சுளா நடித்தார். இந்தப் படத்துக்கு முத்துவின் தந்தை கருணாநிதியே கதை, வசனம் எழுதியிருந்தார். பஞ்சு கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியிருந்தனர்.
பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன், அணையாவிளக்கு முதலிய படங்களிலும் முத்து நடித்தார்.
நடிப்பில் மட்டுமின்றி திரைப்படப் பாடல்களைப் பாடியும் முத்து பெயர்பெற்றார்.
குடிநோயால் கடுமையாக அவதிப்பட்ட முத்து, தனிப்பட்ட வாழ்வில் சோகங்களை எதிர்கொண்டார். இரண்டாவதாக ஒருவருடன் வாழ்ந்துவந்தவர் தன் தந்தை கருணாநிதி தனக்கு உதவவில்லை என ஊடகங்களுக்கு அவ்வப்போது சொல்லி கவனத்தை ஈர்த்துவந்தார்.
ஆனாலும், கடைசிவரை கருணாநிதியின் குடும்பம் முத்துவைப் பராமரித்தது குறிப்பிடத்தக்கது.