இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான ‘கென்னடி’, 2023 கேன்ஸ் திரைப்பட விழாவில் தி கிராண்ட் லூமியர் திரையரங்கில் நள்ளிரவுக் காட்சியாகத் திரையிடப்பட்டது. ‘கென்னடி’ தூக்கமின்மையால் அவதிப்படும் காவலரை அடிப்படையாகக் கொண்டது.
அனுராக் காஷ்யப் படங்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உள்ள நிலையில், கேன்ஸ் போன்ற மதிப்புமிக்க மற்றும் புகழ்பெற்ற ஒரு மேடையில் படம் திரையிடப்பட்டதன் மூலம் படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. அதுவும் உலகின் மிகவும் புகழ்பெற்ற திரையரங்குகளில் ஒன்றான கிராண்ட் லூமியர் திரையரங்கத்தில் நள்ளிரவுக் காட்சியில் திரையிடப்படுவது மிகவும் மதிப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அந்த வகையில் அனுராக் காஷ்யப்பின் ’கென்னடி’ அங்கு திரையிடப்பட்டு, பார்வையாளர்கள் 7 நிமிடம் நின்று கைத்தட்டிப் பாராட்டியுள்ளனர். விருதுகளைக் காட்டிலும் இதுபோன்ற நீண்ட நேர கைத்தட்டல்கள் பெருமைக்குரியதாக பார்க்கப்படுகிறது. ’தட்னான்.. தட்னான் தட்டிகிட்டே இருந்தான்’ என்ற டணால் தங்கவேலுவின் வசனம் நனவாகிற்று!
இப்படி அதிக நேரம் கைத்தட்டல் பெற்ற படங்களில் 2006-ஆம் ஆண்டு வெளியான ஸ்பானிஷ் மொழி திரைப்படமான ‘பான்’ஸ் லேபிரிந்த்’ என்ற படம் 22 நிமிடங்கள் கைத்தட்டல் பெற்று முதலிடத்தில் உள்ளது.
காலநிலை மாற்றம் பற்றிய ஆவணப்படமான பாரன்ஹீட் 11/9’ என்ற படம் 20 நிமிடங்கள் தொடர் கைத்தட்டல்களால் பாராட்டப்பட்டது.
பிரபல போர் படமான ‘இன்குலோரியஸ் பாஸ்டர்ட்ஸ்’ 11 நிமிட கைத்தட்டலையும் 2015- ஆம் ஆண்டு வெளியான கெரோல் என்ற படம் 10 நிமிட கைத்தட்டலையும் பெற்று கேன்ஸ் விருது விழாவின் நீண்ட நேர கைத்தட்டல் பெற்ற படங்களின் பட்டியலில் இடம்பெற்றவை.
ஒரு கலைஞனை அதிகபட்சமாக உற்சாகப்படுத்துவது கைத்தட்டல்தான். அதுவும் கேன்ஸ் பட விழாவில் கிடைத்த கைத்தட்டல் என்றால் சும்மா? அனுராக் காஷ்யப் என்ன சொல்கிறார்?
“உங்கள் திரைப்படத்தை கேன்ஸ் மூலம் உலகுக்கு காண்பிப்பது எப்போதுமே சிறப்பு வாய்ந்தது. அதுவும் கிராண்ட் தியேட்டர் லூமியரில் திரையிடப்படுவது வாழ்நாள் தருணம். கென்னடி எனக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம்; பர்சனலாகவும் பிடித்த படம். இந்தப் படத்தை எடுக்கும்போது நாங்கள் எங்கள் இதயத்தையும் ஆன்மாவையும் செலுத்தியுள்ளோம். பார்வையாளர்களின் 7 நிமிட நீண்ட கரவொலி என்னை நன்றியுணர்வுடன் நிரப்பியது. என்னை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது” என்கிறார்.