
மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்திற்கு கேரள அரசின் 9 மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிதம்பரம் இயக்கத்தில் கொடைக்கானலிலுள்ள குணா குகையை மையப்படுத்தி வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தமிழிலேயே இப்படம், ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 225 கோடி வசூலித்து மலையாள சினிமாவின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்கிற சாதனையை அடைந்தது.
இந்த நிலையில், கேரள அரசின் மாநில திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.
அதில், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர் (சிதம்பரம்), சிறந்த திரைக்கதை (சிதம்பரம்), சிறந்த ஒளிப்பதிவு (சிஜூ காலித்), சிறந்த துணை நடிகர் (சௌபின் சாகிர்), சிறந்த கலை இயக்கம் (அஜயன் சல்லிசேரி), சிறந்த ஒலி வடிவமைப்பு (சிஜின், அபிஷேக்), சிறந்த ஒலிக்கலவை (சிஜின், ஃபசல்), சிறந்த பாடலாசிரியர் (வேடன்) உள்ளிட்ட 9 விருதுகள் மஞ்ஞமல் பாய்ஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சிறந்த நடிகர் விருது மம்மூட்டிக்கும் (பிரம்மயுகம்) சிறந்த நடிகை விருது ஷம்லா ஹம்சாவுக்கும் (பெமினிச்சி ஃபாத்திமா) அறிவிக்கப்பட்டுள்ளது. இது மம்மூட்டி பெறவுள்ள 6ஆவது மாநில விருதாகும்.