பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்!
பழம்பெரும் நடிகரும் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாருமான தர்மேந்திரா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 89.
தர்மேந்திரா, இதய கோளாறு மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் காரணமாக மும்பையில் உள்ள ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவர் உயிரிழந்து விட்டதாகச் செய்திகள் வெளியாகின. அதனை மறுத்து அவரது மகள் ஈஷா தியோல் அறிக்கை வெளியிட்டார். அதில், அவர் நலமுடன் இருப்பதாகவும், தேவையில்லாத பொய் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார். தொடர்ந்து தர்மேந்திரா உடல்நிலை தேறியதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
இந்த நிலையில், வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த தர்மேந்திரா இன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்ததைப் பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உறுதி செய்துள்ளார்.
கரண் ஜோஹர் தனது இன்ஸ்டா பதிவில், "ஒரு பெரிய சகாப்தம் முடிவுக்கு வந்தது" என்று குறிப்பிட்டு தர்மேந்திராவுக்கு இரங்கல் குறிப்பு எழுதியுள்ளார்.
1935ஆம் ஆண்டு பஞ்சாபில் பிறந்த தர்மேந்திரா, 1960ஆம் ஆண்டு வெளியான ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ என்ற இந்திப் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான ‘ஷோலே’ படம் பெரிய அளவில் ஹிட்டடித்ததால் இந்திய அளவில் கவனம் ஈர்த்தார் தர்மேந்திரா. அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘Ikkis’ திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.
பாலிவுட்டின் மிகப்பெரிய குடும்பங்களில் ஒன்று தர்மேந்திராவின் குடும்பம். இவர் தனது 19ஆவது வயதில் பிரகாஷ் கவுர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர், தன்னுடன் நிறையப் படங்களில் நடித்த ஹேமமாலினியை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சன்னி தியோல், பாபி தியோல், விஜேதா தியோல், அஜித்தா தியோல், ஈஷா தியோல் மற்றும் அஹானா தியோல் என மொத்தம் 6 பிள்ளைகள் உள்ளனர்.
89 வயதான தர்மேந்திரா திரைத்துறையில் பல்வேறு சாதனைகளைச் செய்ததுடன் பல உயரிய விருதுகளையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

