“மாரிசெல்வராஜ் இப்போ வேறமாரி மாறிட்டார்" - பா.ரஞ்சித்
“பரியேறும் பெருமாளில் பார்த்த மாரி, இப்போது வேறுமாரியாக மாறிவிட்டார்" என்று பைசன் படத்தின் விழாவில் இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.
துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் (காளமாடன்) திரைப்படம் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இந்தத் திரைப்படத்தில் அனுபாமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், அமீர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இத்திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நீலம் ஸ்டுடியோ பா.ரஞ்சித், “பரியேறும் பெருமாளில் பார்த்த மாரி இப்போது வேறுமாரியாக மாறிவிட்டார்.
என்னிடம் மாரி செல்வராஜை அனுப்பி வைத்த ராம் சார், மாரிக்கு என் மெட்ராஸ் படத்தின் மீது விமர்சனம் இருக்கிறது எனச் சொல்லிதான் அனுப்பினார்.
மாரி செல்வராஜ் தன் கோபத்தை கலையாக மாற்றுவதைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவர் ஒரே கதை உலகத்தில் சுற்றிக்கொண்டிருப்பதாகத் தெரியும்.
ஆனால், அவர் அந்த உலகத்தைப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார். பரியேரும் பெருமாள் வேறு இந்த பைசன் வேறு. ஆனால் இரண்டும் மாரியின் உலகம்தான். மாரி நீ ஒரு நல்ல ஆர்ட்டிஸ்ட்.
என்னுடன் பயணித்த இரண்டு நடிகர்களின் நடிப்பை கண்டு நான் மிரண்டு போனேன். அதில் முதலாவதாக பசுபதி. சார்பட்டா பரம்பரை மற்றும் தங்கலான் திரைப்படங்களில் நடிப்பில் மிரட்டி இருப்பார்.
அதேபோல சியான் விக்ரம். தங்கலான் திரைப்படத்தில் தன் உடலை வருத்தி மிகவும் அற்புதமாக நடித்திருப்பார்.
நான் அவரிடம் பலமுறை 'சினிமா துறையில் இவ்வளவு திரைப்படம் நடித்த பிறகும் ஏன் கஷ்டப்படுகிறீர்கள்? எது உங்களை இவ்வளவுக்கும் உத்வேகமாக இருக்கிறது..' எனக் கேட்டுள்ளேன்.
அதற்கு அவர் பல விளக்கங்களைக் கொடுத்திருக்கிறார். ஒரு இயக்குநர் தனது மொழியின் மூலம் படத்தை வெளிப்படுத்த முயற்சிக்கின்றார். ஆனால் தங்கலான் திரைப்படத்தில் விக்ரம் தனது உடல் மொழியிலேயே திரைப்படத்தை விளக்கி இருப்பார்.
இவ்வளவு கடின உழைப்பிற்கும், மக்களிடம் இருந்து போதுமான அளவு ஆதரவு கிடைக்கின்றதா? ஒரு படம் வணிக ரீதியாக வெற்றிபெற்றால்தான், அந்தப் படத்தில் நடித்தவர்களின் உழைப்பு போற்றப்படுமா?
அவரின் நடிப்பை பார்த்து வியந்தவர்கள், அவரை அங்கீகரிப்பதில் நிறைய மன தடைகளை எதிர்கொள்கிறார்கள் என நான் நினைக்கிறேன்.
அதனால்தான் அவரை அங்கீகரிக்கும் விதமாக தொடர்ந்து விக்ரம் இயங்கிக்கொண்டே, அவரின் நடிப்பை ஆயுதமாகப் பயன்படுத்துகிறார். இதுவே அவரின் இந்த வெற்றி பயணத்திற்கான காரணமாக நான் எண்ணுகிறேன்.
அதேபோல பிறப்பினால் ஒருவருக்கு எந்த ஒரு கலையும் வந்து விடுவதில்லை. அவரின் திறமை, வசதி வாய்ப்புகளைக் கொண்டு அவர்கள் தனித்துவத்தை பெறுகின்றனர்.
துருவ் விக்ரம் திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் தோற்றம், அவரின் இருப்பு அருமையாக வந்திருக்கிறது. அவர் இந்தத் துறையில் வெகு தூரம் பயணிக்க போகிறார்.
அதே போல அனுபாமா, ரஜிஷா, பசுபதி போன்றோரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். முக்கியமாக, நிவாஸ் -க்கு இத்திரைப்படம் ஒரு புது துவக்கமாகவே இருக்கும் என நான் நினைக்கின்றேன்.
இந்திய சமூகத்தின் எல்லாப் பிரச்னைக்கும் தீர்வாக நான் கருதுவது அம்பேத்கரைதான். அம்பேத்கர் ஒருபோதும் இந்திய மக்களை கைவிட்டதில்லை.
மக்கள் அவருக்குத் கொடுத்த வெறுப்பை, வெறுப்பாக திருப்பி கொடுக்காமல் மக்களை நெறிப்படுத்தும் வாழ்வியல் முறைகளாக அவற்றை வடிவமைத்து கொடுத்தார்.
மேலும், அவரின் வழிகாட்டுதலின் பேரிலேயே இயங்குகிறேன் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன்" என்றார்.