’படங்களுக்கு தமிழ்ல பேர் வைங்க’…கொந்தளிக்கும் விஜித் பச்சானின் டாடி !

’படங்களுக்கு தமிழ்ல பேர் வைங்க’…கொந்தளிக்கும் விஜித் பச்சானின் டாடி !
Published on: 

தமிழ் சினிமாவில் காணாமல் போனவர்கள் பட்டியலில் முதல் மரியாதை கொடுத்து தேடப்படவேண்டியவர் ஒளி ஓவியரும் இயக்குநருமான தங்கர் பச்சான். ‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’ படங்களுக்குப் பிறகு நல்ல கதை சொல்ல மறந்துபோன தங்கர், தனது மகனை ஹீரோவாக வைத்து இயக்கிய படம் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’.

படம் முடிந்து 4 ஆண்டுகள் ஆன நிலையிலும் அதை திரையில் பார்க்கும் பாக்கியம் ஏனோ தமிழர்களுக்கு வாய்க்கவில்லை. அதையடுத்து திரையுலக சேவையிலிருந்து மிக நீண்ட ஓய்வெடுத்துவரும் ஒளி ஓவிய இயக்குநர் அவ்வப்போது சில சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்று ‘ ஏங்க என்னங்க நடக்குது இங்க? …இப்பல்லாம் என்னங்க படம் எடுக்குறீங்க ? என்று தனது ஆதங்கத்தைக் கொட்டி வருவது வழக்கம்.

இந்த முழக்கத்தின் தொடர்ச்சியாக இந்த வாரம் நடந்த விஜய் ஆண்டனியின் ’அப்பா குட்டி’ பட விழாவில் கலந்துகொண்டு தனது உள்ளக் குமுறல்களைக் கொட்டிய தங்கர்,..’ இப்ப வரக்கூடிய பத்துப் படங்கள்ல ரெண்டு படத்துக்கு தமிழ்ல பேர் வைக்கிற நிலைமை ஆயிடுச்சி. இது அருவருப்பானது… அவமானகாரமானது’ என்று கொட்டித் தீர்த்ததோடு இப்போதைய ஆட்சியாளர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்றே புரியவில்லை என்றும் ஆதங்கப்பட்டார்.

தங்கரின் தமிழ்ப்பாசம் பாராட்டப்படவேண்டியது. ஆனால் இந்த தமிழ்ப்பாசத்தை எப்போதும் தங்கள் வீட்டுத்திண்ணையிலிருந்து தொடங்கவேண்டும் என்று மற்ற சினிமாகாரர்கள் கூறுகின்றனர்.

மற்ற சினிமாக்காரர்களைப் போல தனது மகனையும் சினிமாவில் பெரிய நட்சத்திரமாக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட தங்கர் தனது மகனுக்கு வைத்த பெயர் விஜித் பச்சான். அதாகப்படட்து விஜய்யும் அஜித்தும் கலந்த கலவையும் இருவரது உச்சத்தையும் ஒருசேர அடையவேண்டும் என்ற ஆசையில் சூட்டப்பட்ட பெயர் இது. அவர் அறிமுகப்படுத்தப்பட்ட படத்துக்கு சூட்டப்பட்ட பெயர்தான் ‘டக்கு முக்கு திக்கு தாளம்’.

இந்த விஜித்திரமான விஜித் என்கிற வார்த்தை தமிழ் அகராதிகளில் எங்காவது தென்பட்டால் கொஞ்சம் சொல்லுங்கள்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram