பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழ் - திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்!

பராசக்தி திரைப்படம்
பராசக்தி திரைப்படம்
Published on

தணிக்கை சான்று கிடைக்காததால் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கிறது.

டான் பிக்சர்ஸ் தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம், நாளை வெளியாவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஜனநாயகன் திரைப்படத்தைப் போலவே, பராசக்தி படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது.

25க்கும் மேற்பட்ட இடங்களில் கட் செய்ய தணிக்கைக் குழு கூறியதாகவும், இதனால் மறு ஆய்வுக்காக ரிவைசிங் கமிட்டியை பராசக்தி படக்குழு அணுகியதாகவும் சொல்லப்பட்டது. படத்தை பார்த்த ரிவைசிங் கமிட்டி, 8 முதல் 10 இடங்களில் கட் செய்ய அறிவுறுத்தியதாக தெரிகிறது. படத்தில் சில மாற்றங்களை செய்ய சொல்லி, U/A சான்றிதழ் வழங்குவதாக தயாரிப்பு நிறுவனத்திற்கு, ரிவைசிங் கமிட்டி தெரியப்படுத்தியதாக அண்மையில் தகவல் வெளியானது.

ஆனாலும், பராசக்தி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. பராசக்தி படக்குழுவிடம் ரிவைசிங் கமிட்டி கேட்டிருக்கும் வரலாற்று தரவுகள்தான் இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி, 1960களில் நடைபெறுவது போன்ற கதைகளத்தை கையில் எடுத்திருக்கிறது பராசக்தி திரைப்படம். படத்தை பார்த்த ரிவைசிங் கமிட்டி அதில் சில காட்சிகள் குறித்து, பராசக்தி குழுவினரிடம் விளக்கம் கேட்டதாக தெரிகிறது.

அப்போது வரலாற்று அடிப்படையில் திரைப்படத்தை எடுத்திருப்பதாக பராசக்தி படக்குழு கூறியதாகவும், அப்படி என்றால் அதற்கான வரலாற்று தரவுகளை தாக்கல் செய்யுமாறு ரிவைசிங் கமிட்டி தெரிவித்ததாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து, அதற்கான சான்றுகளை படக்குழுவினர், ரிவைசிங் கமிட்டிக்கு சமர்ப்பித்ததாகவும், ஆனால் அந்த சான்றுகள் போதவில்லை என்று ரிவைசிங் கமிட்டி தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி பராசக்தி நாளை வெளியாகுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் தான் தற்போது பராசக்தி படத்திற்கு U/A 16+ சான்றிதழ் வழங்கியிருக்கிறது தணிக்கை வாரியம். 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம் என்கிற வகையில் U/A 16+ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. 2.43 நிமிடம் ஓடும் பராசக்தி படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இன்று தணிக்கைச் சான்று அளிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com