ரன்பீர் கபூருடன் சாய் பல்லவி... இணையத்தைக் கலக்கும் இராமாயணா டிரெய்லர்!

Ramayana
இராமாயணா
Published on

ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகும் 'இராமாயணா : பாகம் 1'- இன் டிரெய்லர், ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில், இன்று அதிகாலை வெளியாகியுள்ளது.

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

இராவணனாக வரும் ராக்கிங் ஸ்டார் யாஷ் இலங்கையின் மன்னராகப் பொறுப்பேற்கும் காட்சியுடன் டிரெய்லர் தொடங்குகிறது. பின்னர், அயோத்தியில் இராமரின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்திய பிறகு, இராமயணத்தின் கதையை ஒன்றன்பின் ஒன்றாக விவரிக்கத் தொடங்குகிறது.

கைகேயியின் கோரிக்கையை ஏற்று இராமர் வனவாசம் சென்றது முதல், சூர்ப்பனகையுடனான நிகழ்வுகள் முதற்கொண்டு இதிகாசத்தின் முக்கிய நிகழ்வுகளை தெளிவாக டிரெய்லரில் காட்டியிருக்கிறார்கள்.

இராமராக ரன்பீர் கபூரும், சீதாவாக சாய் பல்லவியும், இராவணனாக யாஷ், இலட்சுமணனாக வலம் வரும் ரவி துபே உட்பட்ட நடிகர்கள் கதையின் கதாப்பாத்திரங்களுக்குச் கச்சிதமாகப் பொருந்துகின்றனர்.

கைகேயியாக லாரா தத்தா, சூர்ப்பனகையாக ரகுல் பிரீத்தி சிங், தசரத மன்னனாக அரவிந்த் கோவில் ஆகியோர் கதாப்பாத்திரங்களுக்கு உரிய நியாயத்தை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ramayana cast
இராமாயணா

இந்தப் படத்தின் திரைக்கதை எழுத்தாளர் விருது பெற்ற ஸ்ரீதர் ராகவன் ஆவார். ஆஸ்கார் புகழ் ஏ. ஆர். ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோரின் இசை, படத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது.

படத்தின் தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா கூறியதாவது:

"இராமாயணம் ஒரு மிகச்சிறந்த இதிகாசம் மட்டுமன்று; நாம் எப்படி வாழ்கிறோம், எவ்வாறு நம் வாழ்வை கொண்டாடுகிறோம், அடுத்த தலைமுறையினருக்கு நமது விழுமியங்களை எவ்வாறு கடத்துகிறோம் உட்பட்டவைகளை குறிப்பிடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, தசராவின்போது, இருளின் மீது படரும் வெளிச்சம் குறித்தும், தீமையை தோற்கடிக்கும் நன்மை குறித்த செய்திகளை நினைவு கூர்வோம். அவற்றில் வெகு சில கதைகளே, பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நம்மை வழிநடத்தும். அதை இராமாயணம் செய்கிறது.

அந்த வகையில், இந்த மிகச்சிறந்த கலாச்சார பாரம்பரியத்தை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு எடுத்துச் செல்வதற்கான தருணம் இப்போதுதான் அமைந்துள்ளது.

இந்தியாவின் கலாச்சார விழுமியங்களை கொண்டாட வேண்டிய தருணம் இது." என்று கூறுகிறார்.

மேலும், பட இயக்குநர் நிதிஷ் திவாரி கூறியதாவது:

"இந்த கலாச்சார சிறப்புமிக்க இதிகாச காவியத்தை, அதற்குரிய கண்ணியத்துடனும், மரியாதையுடனும் மிகச்சிறந்த வகையில், திரையில் காட்சிப்படுத்த வேண்டும் என்பதுதான் எங்கள் குழுவின் எண்ணம் ஆகும்.

இந்த ஒரு எண்ணத்துடன்தான், இராமாயணத்தின் எழுத்து, நடிப்பு முதல் தயாரிப்பு, வடிவமைப்பு, இசை, திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் வடிவமைக்கப்பட்டுள்து." என்று தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com