‘மண்ணின் மொழிக்கு மரியாதை கொடுங்கள்’ – அல்லு அர்ஜுன் வைரல் பேச்சு!

அல்லு அர்ஜுன்
அல்லு அர்ஜுன்
Published on

புஷ்பா 2 படத்தின் ‘கிஸ்ஸிக் பாடல் வெளியீட்டு விழாவில் அல்லு அர்ஜுன் பேசும்போது, தெலுங்கில் பேசுமாறு ரசிகர்கள் கூச்சலிட்டதால் "தமிழில் தான் பேச வேண்டும், நாம் எந்த மண்ணில் நிற்கிறோமோ, அந்த மண்ணின் மொழியில்தான் பேச வேண்டும்.” என அவர் பேசிய வீடியோ சமூக ஊடகத்தில் வைரலாகி வருகிறது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகமான புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகிறது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் அல்லு அர்ஜுன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், சென்னையில் புஷ்பா 2 படத்தின் ப்ரோமோஷன் நடந்தது. இதில் கிஸ்ஸிக் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன், 'நான் ஒரு பக்கா சென்னை பையன். நான் நேஷனல், இன்டர்நேஷனல் என எங்கு சென்றாலும் சென்னைதான் எனது வேர். இங்குதான் எனது முதல் 20 வருடங்கள் கழிந்தன. அதனால் இந்த ஊர் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல்தான். நான் ஒரு பக்காவான சென்னை பையன். எனது நண்பர்களுடன் அமர்ந்து பேசும்போது லோக்கல் சென்னை பாஷையெல்லாம் பேசுவேன்.' என்றார்.

அப்போது அவரிடம் அங்கிருந்த தெலுங்கு ரசிகர்கள் தெலுங்கில் பேசுங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அல்லு அர்ஜுன், 'நீங்கள் தெலுங்குதான் என்றாலும் நான் தமிழில்தான் பேசுவேன். அது இந்த மண்ணுக்கு நாம் கொடுக்கும் மரியாதை. நாம் எந்த மண்ணில் நிற்கிறோமோ, அந்த மண்ணின் மொழியில்தான் பேச வேண்டும். மண்ணுக்கு மரியாதை கொடுங்கள்.' என்று குறிப்பிட்டார்.

அல்லு அர்ஜுன் சென்னையில்தான் பள்ளி படிப்பை படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அல்லு அர்ஜுன் தமிழ் மண்ணுக்கு மரியாதை செய்வேன் என்று கூறியதை தமிழ் ரசிகர்கள் வெகுவாக பாராட்டிவருகிறார்கள்.

logo
Andhimazhai
www.andhimazhai.com