
கமலின் அடுத்த படமான சண்டியர் தலைப்புக்கு ஆதரவாக, எதிர்ப்பாக விவாதங்கள் சூடுபிடித்து வரும் நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விட்டுள்ள அமீருக்கு இயக்குநர் லெனின் பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
விருமாண்டி கால விரக்தியை ஆழ்மனதில் விதைத்து வைத்திருந்த கமல் தனது அடுத்த படத்துக்கு மீண்டும் ‘சண்டியர்’ என்ற தலைப்பை வைத்து தனது சினிமா வியாபாரத்தை துவங்கியுள்ளார்.
அத்தலைப்புக்கு அரசியல் நோக்கத்துடனும் பழைய பகையை மனதில் வைத்து கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, கமல் இப்படப்பிடிப்பை தமிழகத்தின் எந்த மூலையிலும் நடத்த முடியாது என்பதோடு இந்த தலைப்பு தொடருமானால் கமல் அவர் வீட்டைவிட்டு கூட வெளியே வர முடியாமல் செய்வோம் என்று மிக அநாகரீகமாக மிரட்டியிருந்தார்.
ஆனால் இதே எதிர்ப்பை சமூக அக்கறையுடன் மிக நாகரீமாக எதிர்த்த இயக்குநர் லெனின் பாரதி,.. சமூக நல்லிணக்கத்தையும் வன்முறையற்ற சமூகத்தையும் விரும்பும் படைப்பாளிகள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், இயக்கங்கள் மற்றும் பொதுசமூகம் @ikamalhaasan வைத்திருக்கும் #சண்டியர் எனும் ஆதிக்கவெறிப் பெயரை நீக்கும்வரை தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வது காலத்தின் அவசியம்.. என்று பதிவிட்டதோடு கமலின் முதல்நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வாழ்த்திய திருமாவளவனைக் கண்டித்தும்,.. தென்மாவட்டங்களில் #சண்டியர் எனும் வார்த்தையில் உறைந்திருக்கும் சாதி-ஆதிக்க கணபரிணாமத்தை நன்கு அறிந்தும் அதைக் கண்டிக்காமல் அப்படத்தின் படப்பிடிற்குத் தளத்திற்கே சென்று பிறந்தநாள் வாழ்த்துக்கூறுவது என்ன வகையான அரசியல்? @thirumaofficial என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு நடுவே, நாட்டில் என்ன பஞ்சாயத்து நடந்தாலும் தவறாமல் ஆஜராகும் அமீர் தனது அறிக்கையில் கமலை ஆதரிக்கிறேன் என்கிற பெயரில்,.. "சண்டியர் திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த விட மாட்டேன் என்றும் தென் மாவட்டங்களில் கலவரம் ஏற்படும் என்றும் யாரை அச்சுறுத்தப் பார்க்கிறார் கிருஷ்ணசாமி? எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அரசியலை செய்யப் போகிறீர்கள்? போதும் நிறுத்துங்கள்" என்று ஆஜர் ஆகியிருந்தார்.
அமீரின் அந்த அறிக்கைக்கும் பதிலளித்த லெனின் பாரதி,.. அண்ணன் #அமீர் அவர்களே.. #சண்டியர் திரைப்படத் தலைப்பு குறித்த ஆதாரவைச் சொல்லவும் எதிர்ப்பைச் சொல்லவும் உங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது.. ஒரு நிலப்பரப்பில் அத்தலைப்பு தரும் சிக்கலை கூறும் #கிருஷ்ணசாமி அவர்களை “போதும் நிறுத்துங்கள்” எனும் கட்டளையிடும் தொனி ஏற்புடையதல்ல.. என்று அறிவுறுத்தியுள்ளார்.
இப்போதைய சூழ்நிலையில் சண்டியர் தலைப்பு தொடர்பான இந்த பஞ்சாயத்துகள் படம் ரிலீஸாகும் வரை தொடரும் என்றே தெரிகிறது.
பஞ்சாயத்தார்களிடம் இது தொடர்பாக ஒரு பஞ்சாயத்து வைத்தால் நிச்சயமாக ‘கமலை நிறுத்தச் சொல்லுங்க. நாங்க நிறுத்துறோம்’ என்றுதான் சொல்லுவார்கள்.